உயர்நிலை மாணவர்களுக்கான அனைத்துலகப் புத்தாக்கப் போட்டி

உயர்நிலை மாணவர்களுக்கான அனைத்துலகப் புத்தாக்கப் போட்டி

2 mins read
3b8c9a12-4980-46dd-93be-95574b5a98b1
‘சிஸ்டெமிக் 2025’ போட்டியின் சிறப்பு விருந்தினரான பேராசிரியர் டான் சோர்ச் சுவான் (நடுவில்) சவாலைத் தொடங்கி வைக்கிறார். - படம்: தேசிய தொடக்கக் கல்லூரி

தேசிய தொடக்கக் கல்லூரியும் கல்வி அமைச்சும் இணைந்து உயர்நிலை மாணவர்களுக்காக அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளை உள்ளடக்கிய சிங்கப்பூர் அனைத்துலக ‘ஸ்டெம்’ புத்தாக்கச் சவாலுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த ஐந்து நாள் சவாலில் 46 சிங்கப்பூர் பள்ளிகளையும் 18 வெளிநாட்டு பள்ளிகளையும் சேர்ந்த 286 மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

சவாலின் தொடக்க நிகழ்ச்சி மே 29ஆம் தேதி தேசிய தொடக்கக் கல்லூரியில் நடந்தேறியது.

ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இச்சவாலில் 15 முதல் 18 வயது வரையிலான மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

உலகில் உள்ள அனைத்துத் தரப்பு மாணவர்களும் ‘ஸ்டெம்’ துறைகளில் தங்கள் திறனை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டுமென்பதே இப்போட்டியின் நோக்கம்.

இவ்வாண்டிற்கான சவால், ‘மறுகற்பனை செய்யப்பட்ட வாழ்க்கை: வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை ஆராய்வது’ எனும் கருப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இன்றைய சவால்களுக்குத் தொழில்நுட்பங்களை எவ்வாறு தீர்வுகளாக மாற்றலாம் என்பதை மாணவர்கள் ஆராய இந்தக் கருப்பொருள் வழங்கப்பட்டதாகத் தேசிய தொடக்கக் கல்லூரி குறிப்பிட்டது.

2023ஆம் ஆண்டு இச்சவாலில் போட்டியாளராகக் கலந்துகொண்ட17 வயது தேசிய தொடக்கக் கல்லூரி மாணவர் தொண்டைமான் ராம்பிரபு, இவ்வாண்டு மாணவர் ஏற்பாட்டுக் குழுவின் உறுப்பினராக மாறியுள்ளார்.

“சென்ற முறை போட்டியிட்டபோது பல வெளிநாட்டு மாணவர்கள் நண்பர்களாகக் கிடைத்தனர். அது எனக்கு நல்ல அனுபவமாக அமைந்தது. அதனால், இம்முறை இத்தகைய போட்டியை ஏற்பாடு செய்வது எப்படி என்பதை கற்றுக்கொள்ள விரும்பினேன்,” என்று அவர் கூறினார்.

எதிர்காலத்தில் வேதிப்பொறியாளர் ஆக வேண்டுமென விரும்பும் அவர், ‘ஸ்டெம்’ துறையில் சிறக்க ஏட்டுக்கல்வி மட்டுமல்லாமல், பட்டறிவும் தொடர்புத் திறன்களும் மிகவும் முக்கியமென நம்புகிறார்.

2007ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூர் அனைத்துலக அறிவியல் சவாலாக நடந்து வந்த இப்போட்டி, 202ஆம் ஆண்டு காலத்திற்கேற்ப ‘ஸ்டெம்’ சவாலாக மாற்றம் கண்டது எனத் தேசிய தொடக்கக் கல்லூரித் துணை தலைமையாசிரியர் ஹரேஷ் சிவராம் கூறினார்.

“இத்தகைய போட்டிகளில் மாணவர்கள் பெறும் அனுபவங்களை வேறு எங்கும் அவர்களால் பெற முடியாது. இச்சவாலில் அவர்கள் எதிர்நோக்கும் தோல்விகள், வாக்குவாதங்கள் ஆகியவை கல்வியையும் தாண்டி அவர்களது வாழ்விற்கான அனுபவமாக அமையும்,” என்று அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்