ஐந்து வயதாக இருந்தபோது குடும்பத்துடன் ஐப்பானுக்குச் சென்றிருந்த ஐசெக் மேத்தியூ, தாம் முன்பு புகைப்படக் கருவிக்குச் சுருள்களைப் பயன்படுத்திய நினைவுகளை எண்ணிப் பார்த்தார்.
அனலாக் எனப்படும் ஒப்புமை புகைப்படக் கருவியின் ‘ஷட்டர்சவுண்ட்’ (shuttersound) சத்தத்தால் கவரப்பட்ட ஐசெக், புகைப்படக் கலையை ஆர்வத்துடன் பொழுதுபோக்காக மேற்கொண்டார்.
பள்ளிப் பருவத்திலும் தேசிய சேவையிலும் அவரைப் பின்தொடர்ந்த இந்த ஆர்வம், இவருக்கு பிற்காலத்தில் பணித்திட்டங்களையும் பணத்தையும் ஈட்டித்தந்துள்ளது. புகைப்படங்கள், காணொளிப் படைப்புகள் ஆகியவற்றைத் தயாரிக்கும் ஐசெக், சமூக ஊடகத்தில் கதை சொல்லியாக இருக்கிறார்.
இருந்தபோதும் இவரது எண்ணப்போக்கு, இவரையொத்த கலைஞர்களைக் காட்டிலும் மாறுபட்டதாக உள்ளது.
மின்னிலக்கத் தொழில்நுட்பத்திற்கு முந்தைய ஒப்புமைப் புகைப்படக்கருவி, கணினி போன்ற சாதனங்கள் இருந்ததுபோல, மின்னிலக்கக் காலத்திற்கு முந்தைய காலத்தன் வாழ்க்கை முறையை ‘ஒப்புமை வாழ்வியல்’ (analogue lifestyle) என அழைக்கும் போக்கு, இன்றைய தலைமுறை இளையர்களிடையே நிலவுகிறது.
நின்று நிதானமாக அனுபவிக்கும் இந்த வாழ்க்கை முறைக்கு, ஐசெக் குரல்கொடுத்து வருகிறார்.
புத்தகமாகவோ, திரைப்படமாகவோ இருக்கட்டும், அதைப் பற்றி ஆற அமர சிந்தித்து, பிடித்தத் தெரிவுகளை விழிப்புணர்வுடன் ரசிக்க இத்தகைய வாழ்க்கை முறை வழிவகுப்பதாக ஐசெக் கூறினார்.
“மின்னிலக்கத் தொழில்நுட்பம் நீக்கமற நிறைந்துள்ள இன்றைய வாழ்க்கைமுறை அவசரமானது, தேவைக்கு அதிகமான தெரிவுகள் நிறைந்தது. எவை நம் இயல்புடன் பொருந்துபவை என்று தீர யோசிக்காமல் சமூக ஊடகங்களில் தோன்றுபவற்றையெல்லாம் பார்த்து வருகிறோம்,” என்றார் ஐசெக் .
தொடர்புடைய செய்திகள்
பெற்றோரும் பெரியவர்களும் தங்கள் இளமைக்காலத்தில் அனுபவித்த வாழ்க்கை, இவர் புரிந்துகொண்டவரையில் நிதானமாக, அதிக விழிப்புணர்வு கொண்டுள்ள வாழ்க்கை முறையுமாக இருந்தது.
மின்னிலக்கத் தளங்களுக்கு எப்படிப் படைப்புகளை வடிவமைத்தால் அவை பிரபலமாகும் என்பதை விடுத்து, தம் உணர்வுகளுக்கு உண்மையான, ஆழ்ந்த அனுபவம் நிறைந்த படைப்புகளில் கவனம் செலுத்துவது இவரது இலக்கு.
சிந்தனைகளைக் கைப்பட எழுதுவது, நீண்ட மெதுநடை செல்வது அல்லது மற்றொருவருடன் ஆழமான உரையாடலில் மூழ்குவது எனப் பல வழிகளில் இவர் மெய்யுலகுடன் இணைகிறார்.
இக்காலப் படங்களிலுள்ள நல்ல தொழில்நுட்பக் கூறுகள் அக்காலப் படங்களில் இருந்திருக்காது. நமது கடந்தகாலப் படங்களில் சில, சரியாக எடுக்கப்பட்டிருக்காமல் இருக்கலாம்.
குறைகளிலும் அழகு காணும் வாழ்க்கை நிம்மதியும் நிறைவும் மிக்கது என்றார் ஐசெக்.

