பெண்மையின் அழகை வெளிப்படுத்திய ‘இயல் 2026’

பெண்மையின் அழகை வெளிப்படுத்திய ‘இயல் 2026’

1 of 2
படம்: ‘சிம்’ தமிழ் இளையர் மன்றம்
படம்: ‘சிம்’ தமிழ் இளையர் மன்றம்

16 Nov 2026 - 6:30 am

2 mins read

ஒரு பெண் தன் கனவை நோக்கி அடியெடுத்து வைக்கும்போது, எதிர்ப்படும் தடைகளை எப்படி வெற்றிப்படிகளாக மாற்றுகிறாள் என்பதை அழுத்தமாகப் பேசியது சிங்கப்பூர் நிர்வாகக் கல்விக் கழகத்தின் தமிழ் இளையர் மன்றம் மேடையேற்றிய ‘இயல் 2026’ நாடகம்.

‘சிம்’ தமிழ் இளையர் மன்றத்தின் முதலாம் படைப்பான ‘இயல் 2026’ அக்டோபர் 17ஆம் தேதி ‘சிம்’ நிகழ்த்துகலை அரங்கத்தில் நடைபெற்றது.

அதன் முதலாம் அங்கமான ‘ஓ காதல் கயல்விழி’, கயல்விழி என்ற இளம்பெண்ணைப் பற்றிய உணர்ச்சிபூர்வமான கதை.

கதையின் நாயகி கயல்விழி ஒரு திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற லட்சியத்தோடு வலம் வருபவர். ஆனால், பெண்கள் படித்துவிட்டுத் திருமணம் செய்துகொண்டு அடங்கி வாழ வேண்டும் என எதிர்பார்க்கும் குடும்பம் ஒருபுறம்; பெண்கள் தொழில்நுட்பத்திறன் குறைந்தவர்கள் என்ற எண்ணத்தோடு செயல்படும் ஆணாதிக்கம் நிறைந்த திரைப்பட உலகம் மறுபுறம். இவை இரண்டுக்கும் நடுவே தன் திறமையை எவ்வாறு மெய்ப்பிக்கிறாள் என்பதுதான் இந்த நாடகத்தின் மையக்கருத்து.

இந்தப் படைப்பை உருவாக்க ஏறத்தாழ ஏழு மாதங்கள் ஆனதாகக் கூறினார் நாடகத்தின் இயக்குநர் சைலேஷ் நாதன், 23.

“அன்றாட வாழ்க்கையில் இளம்பெண்கள் எதிர்கொள்ளும் தடைகளை இந்த நாடகத்தின்வழி இளையர்களிடையே எடுத்துரைக்க விரும்பினோம்,” என்று அவர் சொன்னார்.

முதன்முறையாக, நாடகத்தில் கயல்விழியாக நடித்த கதையின் நாயகி பிரியா விவேக், 22, “இதுபோன்ற வலுவான கதாபாத்திரத்தின்மூலம் பெண்களின் பிரச்சினைகளை முன்வைப்பதில் பெருமிதம் கொள்கிறேன்,” என்றார்.

இன்றைய ‘ஜென் ஸி’ (Gen Z) தலைமுறையினரைக் கவரும் வகையில், அழுத்தமான வாழ்வியல் கருத்துகளை இசை, நடனம், நகைச்சுவை ஆகிய அம்சங்களுடன் இணைத்து, முழுக்க முழுக்க இளையர்களின் உழைப்பில் உருவான படைப்பே ‘இயல் 2026’.

நாடகத்தைக் கண்டுகளித்த நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவி ரேஷிகா, 18, “வாழ்க்கையில் சாதிக்க அயராத உழைப்பும் விடாமுயற்சியும் மிகவும் முக்கியம் என்று இந்த நாடகத்தின்மூலம் கற்றுக்கொண்டேன்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்
நாடகம்கலைசிங்கப்பூர்இளையர்