மருத்துவப் பட்டப்படிப்புக்காக விண்ணப்பித்தபோது டாக்டர் மணி ஹேமபிரசாத்துக்கு அதில் வெற்றி கிட்டவில்லை.
அதனால் அவர் ஆராய்ச்சியாளர் ஆகலாமென முடிவெடுத்து கணிப்புயிரியல் (computational biology) துறையில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் பட்டம் படித்தார்.
தம் இறுதியாண்டுத் திட்டத்தில் எலிகளின் நினைவாற்றல் குறித்து ஆய்வுசெய்த அவருக்குக் கணினியிலேயே தனியாக அதிக நேரம் செலவிடுவதுபோல் தோன்றியது.
அதனால் மனிதத் தொடர்பு அதிகமாக இருக்கும் துறையைத் தேடிய அவர் மருத்துவராகும் இலக்குக்கு மீண்டும் ஈர்க்கப்பட்டார். இம்முறை அவருக்கு அந்த வாய்ப்பை அளித்தது டியூக்-என்யுஎஸ் மருத்துவப் பள்ளி.
மே 31ஆம் தேதி நடந்த டியூக்-என்யுஎஸ் மருத்துவப் பள்ளிப் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற 121 பேரில் டாக்டர் மணி ஹேமபிரசாத்தும் ஒருவர். இவர் மருத்துவ முனைவர் (Doctorate of Medicine/M.D.) பட்டம் பெற்றார்.
டியூக்-என்யுஎஸ் முதல்வர் (Dean’s) உபகாரச் சம்பளம், மவுண்ட் எலிசபெத் - கிளெனீகல்ஸ் முதுநிலைப் பட்டக்கல்விக்கு உபகாரச் சம்பளம், சிங்கப்பூர் மருத்துவச் சங்கம் - லீ அறக்கட்டளைக் குழுவுணர்வு (Teamsmanship) விருது ஆகியவற்றையும் இவர் பெற்றுள்ளார்.
மேடையில் உரையாற்ற அவர் தம் சக மாணவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
“நீங்கள் நோயாளிகளை அவர்களின் வாழ்வின் ஆகச் சவால்மிக்கத் தருணத்தில் சந்திக்கக்கூடும் என்பதை நினைவுகொள்ளுங்கள். உங்களால் எப்பொழுதும் அவர்களுக்கு ஏதேனும் செய்ய முடியும். அவர்களுக்குச் செவிசாயுங்கள்,” எனப் பட்டதாரிகளுக்கு நினைவூட்டினார் டாக்டர் ஹேமபிரசாத்.
தொடர்புடைய செய்திகள்
மருத்துவ அறிவுடன் அன்பான மனத்தையும் வளர்த்துக்கொண்டார் டாக்டர் ஹேமபிரசாத்.
“மருத்துவ ஆராய்ச்சிக்காகத் தம் உடலைத் தானமளித்தோருக்கு நன்றிகூற கவிதைகள் எழுதி அஞ்சலி செலுத்தினோம்,” என்று இவர் நினைவுகூர்ந்தார். குருதிக்கொடை முகாம்களுக்கும் சிறுவர் நரம்பியல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கும் இவர் ஏற்பாடு செய்தார்.
எதிர்காலத்தில் நரம்பியல் அல்லது மயக்க மருந்துத் (anasthesia) துறையில் நிபுணத்துவம் பெற விரும்புகிறார் டாக்டர் மணி ஹேமபிரசாத்.
இதய சிகிச்சையில் ஆர்வம்
மாரடைப்பிலிருந்து மீண்டு வருவதற்கு உதவிபுரியும் சிகிச்சை பற்றி ஐந்து ஆண்டுகள் ஆராய்ச்சி புரிந்துள்ள முனைவர் ஐஸ்வர்யா பிரகாஷ், 29, ஒருங்கிணைந்த உயிரியல், மருத்துவத் துறையில் (Integrated Biology and Medicine) ஆய்வுக்கான பிஎச்டி பட்டம் பெற்றார்.
தமிழகத்தின் ‘சாஸ்த்ரா’ (SASTRA) பல்கலைக்கழகத்தில் உயிர்ப்பொறியியல் (Bioengineering) துறையில் பட்டப்படிப்பை முடித்ததும் அவர் ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியில் ஓராண்டுக்காலம் உதவி ஆராய்ச்சியாளராகப் பயிற்சிபெற்றார்.
ஆராய்ச்சியாளராக மேலும் மேம்பட விரும்பி டியூக்-என்யுஎஸ் பள்ளியின் பிஎச்டி படிப்பில் சேர்ந்தார். சிறப்பாகச் செய்த அவர், மூன்று மாநாடுகளில் இளம் ஆராய்ச்சியாளர் விருதுகளையும் பெற்றார்.
“எனக்கு எப்பொழுதும் அறிவியல் புனைவுத் திரைப்படங்கள் பிடிக்கும். அவற்றைப் போல் உயிரியலும் ஒரு கலைதான். அடுத்தது என்ன நடக்கும் என உறுதியாகக் கூற முடியாது, முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. ஆனால், முடிந்தவரை புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும்,” என்றார் ஐஸ்வர்யா.
இவருக்குப் பல ஏற்றத்தாழ்வுகள் கொண்ட பயணமாகப் பிஎச்டி அமைந்தது. “தோல்விகளைச் சந்திக்கும்போது மனமுடைந்துபோகும்போது என் குடும்பத்தார் எனக்கு ஆதரவளித்தனர். என் சக பிஎச்டி நண்பர்களும் என்னைப் போல் இரவில் நெடுநேரம்வரை ஆராய்ச்சிக்காகப் பாடுபடுவதால் இது தனிமனிதப் பயணம்போல் தோன்றவில்லை,” என்றார் இவர்.
இவரது கணவர் முனைவர் சாத்விக்கும் பிஎச்டி பட்டதாரி என்பதால் அதன் சிரமம் அவருக்குப் புரிந்தது. இருவரும் ஒரே சமயம் பிஎச்டி படிக்கத் தொடங்கினர்.
“இசையில் செயற்கை நுண்ணறிவு பற்றியதே என் பிஎச்டி. கணினியில் சில மணி நேரங்களில் ஓர் ஆராய்ச்சியின் முடிவுகள் தெரிந்துவிடும். ஆனால், மருத்துவத்தில் முடிவுகளுக்காக நாட்கணக்கில் காத்திருக்க வேண்டும்,” என்றார் முனைவர் சாத்விக்.
முனைவர் ஐஸ்வர்யா தற்போது லண்டனின் குவீன் மேரி பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராகப் பணிபுரிகிறார்.
“எப்போதும் மனந்தளராதீர்கள். முன்னேற்றப் பாதையை நோக்கிப் பயணம் செய்யுங்கள்,” என்கிறார் முனைவர் ஐஸ்வர்யா.