தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரில் இந்திய விண்வெளித் துறையினர்

2 mins read
e13bb852-047b-4dfb-b577-73c069aeff22
என்டியு பேராசிரியர்கள், மாணவர்களுடன் இந்தியாவின் விண்வெளித்துறையைப் பிரதிநிதித்து சிங்கப்பூருக்கு வந்திருந்த குழுவினர். - படம்: அனுஷா பன்னிந்தயா

இந்திய விண்வெளித்துறையின் முன்னணி நிறுவனங்களுடன் இளம் விண்வெளி ஆர்வலர்களைக் கருத்தரங்கு ஒன்றின்வழி நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (என்டியு) அண்மையில் இணைத்தது.

என்டியுவின் ‘விண்வெளி ஆராய்ச்சி, வளர்ச்சிக்கான மாணவர்கள்’ (செட்ஸ்) சங்கத்தின் ஆதரவுடன் என்டியுவின் இயந்திரவியல், விண்வெளிப் பொறியியல் பள்ளியின் பேராசிரியர்களால் இந்நிகழ்ச்சி பிப்ரவரி 28ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தொழில்துறைத் தலைவர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் ஆகியோரை ஒன்றிணைத்து, வளர்ந்துவரும் விண்வெளித் தொழில்நுட்பங்கள் குறித்த கருத்துப் பரிமாற்றத்தை நிகழ்ச்சி ஊக்‌குவித்தது.

இவ்வாண்டின் அனைத்துலக விண்வெளித் தொழில்நுட்ப மாநாடு, கண்காட்சியில் இந்தியாவைப் பிரதிநிதித்து சிங்கப்பூருக்கு வந்திருந்த குழுவைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பிப்ரவரி 26 முதல் 27 வரை நடைபெற்ற இந்த மாநாடு, 45 நாடுகளிலிருந்து 1,500க்கும் மேற்பட்டோரை ஈர்த்தது.

இந்தியாவிலுள்ள அரசு சாரா தனியார் நிறுவனங்களின் அனைத்து விண்வெளித்துறை தொடர்பான நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் ‘இன்-ஸ்பேஸ்’ அமைப்பும் ‘ஸ்கைசர்வ்’, ‘கேலக்ஸ்ஐ’ என்ற இரண்டு இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களும் மாணவர்களிடம் பேசின. பேச்சாளர்கள் தங்களின் பணியைப் பற்றியும் இந்தியாவின் விண்வெளித்துறைக்குத் தாங்கள் ஆற்றும் பங்கைப் பற்றியும் விரிவான விளக்கக்காட்சிகளை மாணவர்களுக்குப் படைத்தனர்.

புதிதாகத் துவங்கப்பட்ட இந்திய நிறுவனங்களின் திறன்கள் குறித்து ‘இன்-ஸ்பேஸ்’ இயக்குனர் டாக்டர் பிரபுல்ல குமார் ஜெயின் பகிர்ந்தார்.

“இந்தியாவின் விண்வெளித்துறையில் தனியார் நிறுவனங்களின் வளர்ச்சியை எடுத்துக்காட்டுவதும் இத்துறையில் மாணவர்களுக்கும் இளம் தொழில்முனைவோருக்கும் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பதை முன்னிலைப்படுத்துவதும் எங்கள் நோக்கமாக இருந்தது.

“அத்துடன், இந்த கருத்தரங்கின்வழி சிங்கப்பூரில் உள்ள மாணவர்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடி நம் அனைவருமிடையே ஒருங்கிணைப்பை ஊக்குவித்ததில் நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம்,” என்றார் டாக்‌டர் ஜெயின். வெவ்வேறு பங்காளித்துவத் திட்டங்களை என்டியுவுடன் எதிர்காலத்தில் ஆராய அவர் ஆர்வமும் தெரிவித்தார்.

பேச்சாளர்களின் உரைகளைத் தொடர்ந்து கேள்வி பதில் அங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்பாளர்கள் பேச்சாளர்களிடம் கேள்விகளை முன்வைத்தனர்.

இந்த கருத்தரங்கின்வழி விரைவாக விரிவடைந்துவரும் இந்திய விண்வெளித்துறையைப் பற்றி நேரடியாக நிபுணர்களிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொள்ள முடிந்தது என்றும் அது பயனுள்ள ஓர் அனுபவமாக இருந்தது என்றும் என்டியுவில் இறுதி ஆண்டு விண்வெளி பொறியியல் பயிலும் மாணவரும் ‘செட்ஸ்’ சங்கத்தின் தலைவருமான அனுஷா பன்னிந்தயா, 21, கூறினார்.

“விண்வெளித்துறையில் இந்தியாவின் ஆற்றல் மேலும் எப்படி மேம்பட்டு வளரும் என்பதைக் காண எனக்கு ஆவலாக இருக்கிறது,” என்று அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்