தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழை நேசிக்கும் சீன இளையர்

3 mins read
200cada5-4d21-4634-868d-98388f3536fe
தொடக்கப்பள்ளியில் தமிழ் நண்பர்களுடன் கொண்ட நட்பு காரணமாக தான் தமிழின்பால் ஈர்க்கப்பட்டதாகக் கூறினார் ஜெரமி வோங் ஜின் வெய் (நடுவில்). - படம்: த ஸ்டார்

சீனர் என்றாலும் ஒரு தமிழனாகவே தன்னைப் பழக்கப்படுத்திக்கொண்டவர் மலேசியாவின் கிள்ளான் நகரில் வசிக்‌கும் 20 வயது ஜெரமி வோங் ஜின் வெய்.

தொடக்‌கநிலை 1ல், அறநெறிக்கல்வி வகுப்பில் தான் ஒருவரே சீனர் என்றும் தன் வகுப்பு மாணவர்களில் பெரும்பாலானோர் மலாய் இனத்தையும் இந்திய இனத்தையும் சேர்ந்தவர்கள் என்றும் நினைவுகூர்ந்தார் ஜெரமி.

தமிழர்களுடன் அதிகம் பழகத் தொடங்கிய அவர், தமிழ் கலாசாரத்தின்மீது ஆர்வம் கொள்ளத் தொடங்கினார்.

கடந்த 2012ஆம் ஆண்டு உலகளவில் பிரபலமடைந்த ‘வை திஸ் கொலைவெறி’ பாடலை அவரது தமிழ் நண்பர்கள் விரும்பிக் கேட்டுப் பாடியபோது, எட்டே வயதுடைய ஜெரமியும் அந்தப் பாடலை இணையத்தில் தேடிக் கண்டுபிடித்து அதன் வரிகளைக்‌ கற்றுக்‌கொண்டார்.

பிடித்தமான தென்னிந்தியத் திரைப்பட நடிகர் யார் என்று கேட்டபோது சற்றும் யோசிக்காமல், “விஜய்யின் தீவிர ரசிகன் நான்,” என்றார் ஜெரமி.

திரையரங்கிற்கு 2019ல் ‘பிகில்’ திரைப்படம் பார்ப்பதற்காகத் தனியே சென்ற அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார் அவர்.

திரையரங்கில் இருந்தவர்கள் கண்கொட்டாமல் தன்னைப் பார்த்ததாக நினைவுகூர்ந்த ஜெரமி, அதையெல்லாம் தான் பொருட்படுத்தவில்லை என்றார்.

தமிழ்ப் பாடல்கள், திரைப்படங்களைத் தாண்டி, தமிழ் கலாசார விழாக்களிலும் அதிக ஆர்வத்துடன் இவர் கலந்துகொள்வதுண்டு.

தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று தன் தோழனுடன் கோவிலுக்குச் சென்றபோது அர்ச்சகர் தன் நெற்றியில் திருநீறு பூசிய அனுபவத்தைப் பூரிப்புடன் வருணித்தார் ஜெரமி.

தமிழில் பாடவும் ‘ராப்’ செய்யவும் தன்னால் முடியும் என்றார் இவர்.

தமிழில் உரையாடும் தனது திறன், தமிழ் கலாசாரத்தைப் பற்றிய தனது ஆழ்ந்த புரிதல் ஆகியவற்றை எண்ணி தன் பெற்றோர் பெருமைப்படுவதாக ஜெரமி சொன்னார்.

பெற்றோருக்கு ஒரே பிள்ளை இவர்.

சீனக் கிராமத்தில் பிறந்து வளர்ந்த தன் தாயார், தன் நடவடிக்‌கைகளைக்‌ கண்டு முதலில் சற்று குழப்பம் அடைந்தபோதும் தற்போது தமிழர் பண்பாட்டைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள அவர் ஆர்வத்துடன் பல கேள்விகளைத் தன்னிடம் கேட்பதாகச் சொன்னார்.

“என்னால் தமிழில் பேச முடிவதைப் பற்றி என் அம்மா தன்னுடைய நண்பர்களிடமும் உறவினர்களிடமும் இப்போதெல்லாம் பெருமையாகச் சொல்கிறார். அதோடு என் இந்திய அண்டைவீட்டாருடன் தமிழிலேயே பேசுமாறு அவர் என்னிடம் கூறுகிறார்,” என்றார் ஜெரமி.

ஆங்கிலம், சீனம், மலாய் ஆகிய மொழிகளில் புலமை பெற்றுள்ள ஜெரமி, தமக்கு தமிழ், வியட்னாமிய, ஜப்பானிய மொழிகளில் உரையாட முடியும் என்று ‘த ஸ்டார்’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில் முன்னதாகக் கூறியிருந்தார்.

“எதிர்காலத்தில் தமிழ் மொழியில் மேலும் புலமை பெற விரும்புகிறேன்,” என்றார் அவர்.

தற்போது பகல்நேரப் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றும் ஜெரமி, தன் சீன மாணவர்களுக்‌கு தமிழ் கலாசாரத்தைப் பற்றியும் எளிய தமிழ்ச் சொற்களையும் கற்றுக்‌கொடுப்பதாக ஜெரமி கூறினார்.

இனப் பிரிவினை அதிகரித்துவரும் இக்‌காலகட்டத்தில், இளையர்கள் வெவ்வேறு இனத்தவரின் கலாசாரங்களை மதித்து நடப்பது அவசியம் என்று குறிப்பிட்ட அவர், தான் முடிந்த அளவு இதற்குப் பங்காற்ற விரும்புவதாகச் சொன்னார்.

“மற்ற இனத்தவரோடு நமது பண்பாட்டைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளக்கூடிய பல்லினச் சமூகத்தில் நாம் வாழ்வதே ஒரு வரம்,” என்றார் ஜெரமி.

நண்பர்களின் வீட்டில் எந்நேரமும் அவர்களுடைய பெற்றோரால் வரவேற்கப்படும் ஜெரமி, “தமிழ் பேசும் சீனப் பையனை அவர்களுக்கு மிகவும் பிடிக்கும்,” என்றார் புன்னகையுடன்.

குறிப்புச் சொற்கள்