மாறிவரும் உலகிற்கு ஏற்ப இளையர்களைத் தயார்ப்படுத்தும் நோக்கில் நற்பணிப் பேரவை இளையர் பிரிவு ஏற்பாடு செய்த வாழ்க்கைத் திறன் பயிலரங்குத் தொடரின் முதல் அங்கம் நவம்பர் 21ஆம் தேதி நடைபெற்றது.
ஊடகம், விளம்பரத்துறை சார்ந்த அடிப்படை நுணுக்கங்களை இளையர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் இப்பயிலரங்கு தமிழ் முரசு நாளிதழோடு இணைந்து நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தமிழ் முரசு செய்தியாளர்கள், மக்களிடம் நேர்காணல் செய்வது, செய்திகளைத் தேடுவது, அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் செய்திகளை எழுதுவது குறித்த தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, இளையருக்கான தமிழ் முரசின் சமூக ஊடகப் பிரிவான ‘இளைய தலைமுறை’ குழுவினர், நம்பகத்தன்மையையும் தொழில்முறை நேர்த்தியையும் இழக்காமல் இளையர்களைக் கவரும் வகையில் சுவையான காணொளிச் செய்திகளை உருவாக்குவது குறித்து விளக்கினர்.
பங்கேற்பாளர்கள் தாங்களாகவே ஒரு சூழலைத் தேர்ந்தெடுத்து, காணொளி உருவாக்கி வகுப்பில் பகிர்ந்துகொள்ளும் செயல்முறை வாய்ப்பையும் பெற்றனர்.
காலாண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் நான்கு பயிலரங்குகளைக் கொண்ட இத்தொடர், 13 முதல் 35 வயதுக்குட்பட்ட இளையர்களுக்காகவும் பொதுமக்களுக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இன்றைய வேகமான உலகில் ஒரே துறையில் நிபுணத்துவம் பெறுவதைவிட, சூழலுக்கு ஏற்பத் தங்களை மாற்றிக்கொள்ளும் தகவமைப்புத் திறனே இளையர்களுக்கு அவசியம் என்று இத்திட்டம் குறித்து ஏற்பாட்டுக் குழுவின் தளவாடப் பிரிவுப் பொறுப்பாளர் சஹானா பாலமுருகன்,19, கூறினார்.
“இத்தகைய பயிலரங்குகள் மூலம் பெறும் அறிவை இளையர்கள் தங்களது நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்த முடியும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
பள்ளிப் பாடங்களுக்கு அப்பாற்பட்டு, நடைமுறை அனுபவங்கள் மூலம் இளையர்களின் தன்னம்பிக்கையை வளர்ப்பதே அவர்களின் நோக்கமாகும் என்பதைப் பயிலரங்கின் உதவிப் பொறுப்பாளர் ஷெரின் தம்பிதுரை,19, கூறினார்.
“சமூக ஊடகங்களில் தகவல்கள் அதிவேகமாகப் பரவும் இக்காலத்தில், செய்திகளின் நம்பகத்தன்மையைச் சரிபார்ப்பதும், விழிப்புடன், துணிச்சலாகச் சிந்திப்பதும் மிக முக்கியம்,” என்று அவர் கூறினார்.
இணையத்தில் காணொளிகளைப் பார்ப்பதைவிட, குழுவாக இணைந்து திரைக்கதை எழுதி, காணொளி உருவாக்கியது புதிய அனுபவமாக இருந்ததாகப் பயிலரங்கில் பங்கேற்ற நிதித்துறை ஊழியர் மு. ஸ்ரீமந்ரா, 25, பகிர்ந்தார்.
“இதன் மூலம் மற்றவர்களின் திறமைகளை அறிந்துகொள்ளவும், நட்பு வட்டத்தை விரிவு செய்யவும் வாய்ப்பு கிடைத்தது,” என அவர் குறிப்பிட்டார்.
தமிழ் மொழியில் இத்தகைய செயல்முறைப் பயிலரங்கு அமைந்தது மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகக் கூறினார் தயாரிப்பு மேலாளர் கீர்த்தனா ரவிக்குமார், 32.
“திரைக்கதை எழுதுவது முதல் காணொளியைத் தொகுப்பது வரை அனைத்தையும் நேரடியாகக் கற்றுத்தந்த வாய்ப்பு, சமூகத்திற்குப் பயனுள்ள படைப்புகளை உருவாக்க எனக்குப் பெரிதும் ஊக்கமளித்துள்ளது,” என்றார் கீர்த்தனா.
