இளையர்கள் தங்கள் மனநலன் குறித்த கேள்விகளையும் கவலைகளையும் பகிர்ந்து அவற்றுக்கான விடைகளைக் கண்டறிய சிங்கப்பூர் தமிழ் இளையர் மன்றத்தின் ‘உரை’ (U.R.A.I) நிகழ்ச்சி உதவியுள்ளது.
அக்டோபர் 3ஆம் தேதி ஸ்ரீ வடபத்திர காளியம்மன் ஆலய அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் நியமன நாடாளுமன்ற உறுப்பினரும் குவீன்ஸ்டவுன் பலதுறை மருந்தகத்தின் தலைவருமான டாக்டர் ஹரேஷ் சிங்கராஜு சிறப்பு பேச்சாளராகக் கலந்துகொண்டார்.
பகுப்பாய்வு (Unpack), சிந்தனை (Reflect), வினவுதல் (Ask), ஊக்கமளித்தல் (Inspire) என்ற நான்கு முக்கியக் கூறுகளை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் 30க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் பலதரப்பட்ட மனநலம் சார்ந்த கேள்விகளை டாக்டர் ஹரேஷிடம் வினவினர்.
பெற்றோரின் எதிர்பார்ப்புகள், கல்விச் சுமை, நட்புச் சுமை, சமூக ஊடகத் தாக்கம் போன்ற பல்வேறு தலைப்புகள் நிகழ்ச்சியில் கலந்துரையாடப்பட்டன.
இளையர்களின் மனநலச் சவால்கள் அவர்களது உடல்நிலையையும் அன்றாட நடவடிக்கைகளையும் பாதிப்பதற்குள் அவர்களுக்கு உதவுவது முக்கியம் என்று டாக்டர் ஹரேஷ் வலியுறுத்தினார்.
சமூக ஊடகத் தாக்கத்தைக் குறைக்க இளையர்கள் தங்கள் இல்லங்களில் ‘கைப்பேசி பயன்படுத்தக்கூடாத இடங்கள்’ என்று கட்டுப்பாட்டுடன் செயல்படுவது உதவிகரமாக இருக்குமென அவர் கூறினார்.
சமூக ஊடகம், இணையம், செயற்கை நுண்ணறிவு ஆகிய தளங்களில் மனநல, மருத்துவக் குறிப்புகள் பெறாமல், முறையான மருத்துவ நிபுணர்களிடம் உதவி நாடுவது முக்கியமென்றும் அவர் பங்கேற்பாளர்களுக்கு நினைவூட்டினார்.
பெற்றோர் பிள்ளைகளின்மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தாமல் அவர்களை நல்வழியில் வளர்ப்பதும் வழிநடத்துவதும் முக்கியம் என்றார் அவர்.
இளையர்கள் மனநலச் சவால்களைச் சிறப்பாகக் கையாள நல்ல நண்பர் வட்டத்தை உருவாக்குவதும் தெளிவான உரையாடல்களில் ஈடுபடுவதும் அவசியம் என்று அவர் சுட்டினார்.
“நிகழ்ச்சியில் இளையர்கள் பல ஆழமான கேள்விகளைக் கேட்டது மிக்க மகிழ்ச்சியளித்தது. அவர்கள் மனநலம் குறித்து நன்கு சிந்தித்து செயல்படுகின்றனர் என்பதை அறிய முடிந்தது,” என்றார் டாக்டர் ஹரேஷ்.
இளையர்கள் தங்கள் கவலைகளைப் பகிர்ந்துகொள்ள அந்நிகழ்ச்சியைப் போன்ற தளங்கள் முக்கியமானவையாக அமைகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இன்று இளையர்கள் கல்வி, வேலை, சமூக ஊடகம், குடும்ப எதிர்பார்ப்புகள், சமூக அழுத்தங்கள் ஆகியவற்றால் பல்வேறு சவால்களை எதிர்நோக்கிவரும் நிலையில் அவர்களுக்கு உதவும் நோக்குடன் அந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக சிங்கப்பூர் தமிழ் இளையர் மன்றத்தின் துணைத் தலைவர் அபிஷா முத்துக்குமரன் கூறினார்.
“உதவி தேவைப்படும் இளையர்களுக்குப் பாதுகாப்பான ஒரு தளத்தை ஏற்படுத்தி கொடுப்பதே எங்கள் முக்கிய நோக்கமாக இருந்தது,” என்றார் அவர்.
