பார்வையில் பேசவைக்கும் ‘நியூரல் டிரைவ்’

பார்வையில் பேசவைக்கும் ‘நியூரல் டிரைவ்’

2 mins read
தசைத் தேய்மான நோயால் பாதிக்கப்பட்டோருக்கான இந்தக் கருவியின் பின்னணி
ffe79bed-06ad-4593-a6ee-4f608084148c
கௌஷிக் (இடது), குழுவினருடன் ‘நியூரல் டிரைவ்’ கருவியைப் பற்றி விளக்குகிறார். - படம்: திருமாரன் கௌஷிக் மணியன்

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் மூளை-கணினி இடைமுகத் தொழில்நுட்பத்தின் மூலம் உடனடியாகத் தகவல் பரிமாறிக்கொள்ள புதிய தொழில்நுட்பக் கருவி ஒன்று உருவாகியுள்ளது.

உடனடித் தகவல் பரிமாற்றத்தை வழங்கும் ‘நியூரல் டிரைவ்’ கருவி.
உடனடித் தகவல் பரிமாற்றத்தை வழங்கும் ‘நியூரல் டிரைவ்’ கருவி. - படம்: திருமாரன் கௌஷிக் மணியன்

பாரம்பரிய மூளை-கணினி இடைமுகங்களின் சிக்கலை நீக்கி மிகவும் அவசியமான நேரத்தில் உடனடித் தகவல் பரிமாற்றத்தை வழங்குகிறது அத்தொழில்நுட்பம்.

பாரம்பரிய மூளை-கணினி இடைமுகங்களை அளவீடு செய்ய 30 நிமிடங்களுக்கு மேலாகும் நிலையில், ‘நியூரல் டிரைவ்’ எனப்படும் அந்தத் தொழில்நுட்பக் கருவியை நெற்றியில் எளிதாகப் பொருத்துவதன் மூலம், அது உடனடியாகச் செயல்படத் தொடங்குகிறது.

பேசுவதற்கு, எழுதுவதற்கு, தட்டச்சு செய்வதற்கு, சுட்டிக்காட்டுவதற்குச் சிரமப்படும் நோயாளிகள், கண் சிமிட்டுதல், தங்கள் எண்ணங்களைக் குவிப்பதன் மூலம் தகவல் பரிமாறிக்கொள்ள அது ஏதுவாக உள்ளது.

குறிப்பாக, தெளிவாகப் பேசவும் தங்கள் கைகளைப் பயன்படுத்தி எழுதவும் தட்டச்சு செய்யவும் முடியாத நோயாளிகள் இதன்மூலம் அதிகப் பயன் பெறலாம்.

நோயாளிகளின் காதுகளுக்குப் பின்னாலும் ஒரு கண்ணுக்கு மேலேயும் பொருத்தப்பட்டுள்ள மின்முனைகள் மூலம் கண் சிமிட்டுதலும் மூளை அலைகளும் கண்டறியப்படுகின்றன.

பின்னர், அந்த உள்ளீட்டைப் பயன்படுத்தி நோயாளிகள் தாமாகச் செய்ய விரும்பும் பணிகளின் பட்டியலிலிருந்து விருப்பங்களைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது பராமரிப்பாளர்களிடம் உதவி கேட்கலாம்.

இதற்குப் பின்னால், நான்கு பேரின் உழைப்பு நிறைந்துள்ளது. அவர்களில் ஒருவர் 20 வயதாகும் திருமாரன் கௌஷிக் மணியன்.

சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியில் கணினி அறிவியலில் பட்டயப் படிப்பை முடித்துள்ள கௌஷிக், தனது நண்பர்களுடன் இணைந்து அக்கருவியை உருவாக்க முடிவுசெய்தார்.

தம் நண்பரின் சகோதரிக்குத் தசைத் தேய்மான நோய் உள்ளது. அதனால், அவரால் எளிமையான வார்த்தைகளைக் கூட தெளிவாகச் சொல்லமுடியாது.

அத்தகைய நோயாளிகள் அவர்களின் மனத்தில் நினைப்பதையும் மூளையில் யோசிப்பதையும் பிறரிடம் தெரிவிப்பதற்கு வழி அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அக்கருவி உருவானது.

கருவியை உருவாக்கத் தொடங்கியவுடன் தங்களுக்குத் தெரிந்தவர்களுடன் அதைச் சோதித்துப் பார்க்கத் தொடங்கிய நால்வரும் அதனால் ஏற்படும் பயன்கள் குறித்து அறிந்துகொண்டனர்.

“தற்போது பயன்படுத்தப்படும் கருவிகள் அளவில் பெரியதாகவும் பயன்படுத்தச் சிக்கலானதாகவும் இருக்கும். ஆனால், ‘நியூரல் டிரைவ்’ கருவி கைப்பேசியைப் போன்றது. அதை எளிதில் பயன்படுத்த முடியும்,” என்கிறார் கௌஷிக்.

பயனர்கள் இரண்டு முறை கண் சிமிட்டுவதன் மூலம் தெரிவுகளுக்கிடையே நகரலாம்.

இது மடிக்கணினிகள், கைக்கணினிகள் போன்ற கருவிகளுடனான இணைப்பின்மூலம் செயல்படுகிறது.

டான் டோக் செங் மருத்துவமனையுடன் இணைந்து அவர்கள் மருத்துவப் பரிசோதனையை மேற்கொள்ளவுள்ளனர்.

மிகவும் கவனமாக நிதித் திட்டமிடல் தேவைப்படும் விலையுயர்ந்த கருவிகளைப் போலல்லாமல், ஒவ்வொரு ‘நியூரல் டிரைவ்’ கருவியும் மருத்துவமனைகளுக்கு $2,500க்கு விற்கப்படுவதால், குறிப்பிட்ட நிதி ஒதுக்கீடு ஏதுமின்றியே மருத்துவமனைகளால் இவற்றை வாங்க முடியும்.

உலகம் முழுவதும் வெவ்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ள நால்வரும், அவற்றில் ‘நியூரல் டிரைவ்’ கருவியின் உருவாக்கத்தை முன்வைத்து ரொக்கப் பரிசுகளை வென்றுள்ளனர்.

கணினி அறிவியலில் இளவயதிலிருந்தே பேரார்வம் கொண்டுள்ள கௌஷிக், தமது கல்விப் பின்னணி அதற்குப் பேருதவியாய் இருந்ததாகச் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்