தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விளையாட்டு வீரர்களின் கல்விக் கனவுகளை ஆதரிக்கும் புதிய திட்டம்

3 mins read
விளையாட்டு வீரர்களின் கல்விப்பயணத்தை ஆதரிக்க ‘ஸ்போர்ட் சிங்கப்பூர்’ அமைப்பு பட்டப்படிப்புக்கான உபகாரச் சம்பளத்தை (spexEducation Undergraduate Scholarship) அறிமுகப்படுத்தியுள்ளது. அதை விளையாட்டு வீரர்கள் 12 பேர் பெற்றுள்ளனர். spexScholarship திட்டத்தில் ஏழு வீரர்களும், spexPotential திட்டத்தில் 26 பேரும் இந்த ஆண்டு இணைக்கப்பட்டுள்ளனர். சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளியில் ஏப்ரல் 15ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில் அவர்களுக்குக் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங் சான்றிதழ்களை வழங்கினார். 
8e95c944-2964-42ee-b422-a5bdcad1481b
‘ஸ்பெக்ஸ்’ திட்டத்தின் கீழ், பட்டப்படிப்புக்கான புதிய உபகாரச் சம்பளத்தை (spexEducation Undergraduate Scholarship)  விளையாட்டு வீரர்கள் 12 பேர் பெற்றனர். - படம்: ஸ்போர்ட் சிங்கப்பூர்

ஐந்து முறை ‘பென்சாக் சிலாட்’ உலக வெற்றியாளரான ‌ஷேக் ஃபர்ஹான் ‌ஷேக் அலாவு’தீன், 28, விளையாட்டில் கவனம் செலுத்தியபோதும் தன் கல்வி இலக்குகளைக் கைவிடவில்லை.

ஈராண்டுகளாகச் சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் கணக்கியல் படிப்பு மேற்கொண்டுவரும் அவர், ஏற்கெனவே படிப்புக்காகக் கிட்டத்தட்ட $10,000 சொந்தப் பணத்தைச் செலவிட்டுள்ளார். இப்படிப்பை நிறைவுசெய்ய இன்னும் $10,000க்கும் மேலாகச் செலவாகும் என அவர் கணிக்கிறார்.

புதிதாக அறிமுகமாகியுள்ள ‘ஸ்பெக்ஸ்எடுகே‌‌ஷன்’ பட்டப்படிப்புக்கான உபகாரச் சம்பளத்தைப் (spexEducation Undergraduate Scholarship) பெறும் முதல் 12 விளையாட்டு வீரர்களில் ஷேக்கும் ஒருவர். இந்த உபகாரச் சம்பளம் அவருடைய பட்டப்படிப்பில் இனிவரும் கல்விச் செலவுகளை ஈடுகட்டும்.

பட்டப்படிப்புக்கான உபகாரச் சம்பளச் சான்றிதழை கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங்கிடமிருந்து பெற்றார் ‌ஐந்து முறை ’பென்சாக் சிலாட்’ உலக வெற்றியாளரான ஷேக் ஃபர்ஹான் ‌ஷேக் அலாவு’தீன்.
பட்டப்படிப்புக்கான உபகாரச் சம்பளச் சான்றிதழை கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங்கிடமிருந்து பெற்றார் ‌ஐந்து முறை ’பென்சாக் சிலாட்’ உலக வெற்றியாளரான ஷேக் ஃபர்ஹான் ‌ஷேக் அலாவு’தீன். - படம்: ரவி சிங்காரம்

“விரைவாகப் பட்டப்படிப்பை முடித்துவிட்டுப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற மன உளைச்சல் இனி எனக்கு இருக்காது. விளையாட்டில் கூடுதல் கவனம் செலுத்த முடியும். குடும்பத்தாருடன் கூடுதல் நேரமும் செலவிட முடியும்,” என்றார் ‌ஷேக்.

இந்த உபகாரச் சம்பளத்துக்கு இரு பாதைகள் உள்ளன. ‘இரட்டை வாழ்க்கைத்தொழில்’ (Dual Career) பாதைவழித் தம் விளையாட்டுப் பயணத்தையும் பல்கலைக்கழகப் பயணத்தையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளும் விளையாட்டு வீரர்கள் இதன் மூலம் ஆதரவு பெறுவர். ‘புதிய வாழ்க்கைத்தொழில்’ (New Career) பாதை, போட்டித்தன்மைமிக்க விளையாட்டுகளிலிருந்து ஓய்வுபெற்றபின் பல்கலைக்கழகப் படிப்பை மேற்கொள்ள விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவளிக்கும்.

‘இரட்டை வாழ்க்கைத்தொழில்’ பாதையில் ‌ஷேக் உட்பட ஒன்பது பேருக்கு உபகாரச் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

விரைவாகப் பட்டப்படிப்பை முடித்துவிட்டுப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற மன உளைச்சல் இனி எனக்கு இருக்காது.
‌’சிலாட்’ வீரர் ஷேக் ஃபர்ஹான் ‌ஷேக் அலாவு’தீன், 28

பட்டமளிப்பு விழாவில் விளையாட்டு வீரர்களின் கல்விப்பயணத்துக்கு ஆதரவளிக்கச் சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளி, என்டியு, எஸ்ஐடி, எஸ்எம்யு, என்யுஎஸ், எஸ்யுஎஸ்எஸ், எஸ்யுடிடி ஆகிய ஆறு பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

தென்கிழக்காசிய விளையாட்டுகளில் தங்கக் கனவுகள்

தன் குத்துச்சண்டைச் செலவுகளைச் சமாளிக்க 16 வயதிலிருந்து பகுதிநேரமாகப் பணியாற்றிவந்துள்ளார் தேசியக் குத்துச்சண்டை வீரர் தனிஷா மதியழகன், 27.

1976க்குப் பிறகு ஆசிய விளையாட்டுகளுக்குத் தகுதிபெற்ற முதல் சிங்கப்பூர்க் குத்துச்சண்டைவீரர் என்ற பெருமைக்குரிய தனி‌‌‌ஷா மதியழகன், ‘ஸ்பெக்ஸ்பொடென்‌ஷியல்’ திட்டத்தில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளார்.
1976க்குப் பிறகு ஆசிய விளையாட்டுகளுக்குத் தகுதிபெற்ற முதல் சிங்கப்பூர்க் குத்துச்சண்டைவீரர் என்ற பெருமைக்குரிய தனி‌‌‌ஷா மதியழகன், ‘ஸ்பெக்ஸ்பொடென்‌ஷியல்’ திட்டத்தில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

காலையிலும் இரவிலும் குத்துச்சண்டை செய்யும் அவர், அதற்கிடையே இறந்தோர் உடல்களைப் பதப்படுத்துபவராகத் தன்னுரிமைத் (Freelance) தொழில்புரிகிறார்.

குத்துச்சண்டையில் முழுக் கவனமும் செலுத்த விரும்பி, உள்ளூர் மருத்துவமனையுடனான நான்காண்டு ஒப்பந்தத்தை ரத்துசெய்ததற்காகத் தன் பட்டப்படிப்புக்கு வழங்கப்பட்ட $130,000 ரொக்க ஆதரவை அவர் திரும்பத் தரவேண்டியிருந்தது.

அதனால் அவருடைய பல்லாண்டுகாலச் சேமிப்பிலிருந்து கணிசமான தொகை கரைந்தது.

நிதிச் சுமையிலிருந்து விடுபட்டு மன நிம்மதியுடன் குத்துச்சண்டையில் ஈடுபட தனு‌‌‌ஷாவுக்கு இனி கூடுதல் ஆதரவு கிடைக்கும்.

‘ஸ்போர்ட் சிங்கப்பூர்’ வழங்கும் ‘ஸ்பெக்ஸ்பொடென்‌ஷியல்’ (spexPotential) திட்டத்தில் இவ்வாண்டு இணைக்கப்பட்டுள்ள 26 விளையாட்டு வீரர்களில் தனிஷாவும் ஒருவர்.

தென்கிழக்காசிய விளையாட்டுகளில் தங்கம் வெல்லக்கூடிய விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கத்தில் இத்திட்டம் 2024ல் அறிமுகமானது.

இதன்மூலம் மாத உதவித்தொகை, உள்ளூர், வெளிநாட்டுப் பயிற்சிகள், போட்டிகள், விளையாட்டு அறிவியல், மருத்துவம் உள்ளிட்ட பலவற்றுக்கும் ஆதரவு கிடைக்கும்.

1976க்குப் பிறகு ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குத் தகுதிபெற்ற முதல் சிங்கப்பூர்க் குத்துச்சண்டைவீரராக 2023ல் சிங்கப்பூருக்குப் பெருமை சேர்த்த தனிஷா, அதைத் தொடர்ந்து பல வெற்றிகளைக் குவித்துள்ளார்.

2024ல் உலகக் குத்துச்சண்டைக் கோப்பையில் பதக்கம் வென்ற முதல் சிங்கப்பூரராக அவர் சாதனை படைத்தார். அதில் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்த ஆண்டின் தேசியக் குத்துச்சண்டைப் போட்டிகளிலும் வென்ற அவர், ஆண்டிறுதியில் நடைபெறவுள்ள தென்கிழக்காசிய விளையாட்டுகளில் தங்கத்தை இலக்காகக் கொண்டு பயிற்சிசெய்துவருகிறார்.

அவருடன் ‘ஸ்பெக்ஸ்பொடென்‌ஷியல்’ திட்டத்தில் புதிதாக இணைக்கப்பட்ட மற்றொருவர் தேசியப் படகோட்டி ஜோவி ஜேடன் கலைச்செல்வன், 23.

தேசியப் படகோட்டி ஜோவி ஜேடன் கலைச்செல்வன், 23, இந்த ஆண்டுத் தென்கிழக்காசிய விளையாட்டுகளில் சிறப்பாகச் செய்ய விரும்புகிறார். 2028 ஒலிம்பிக் விளையாட்டுகளையும் இவர் குறிவைக்கிறார்.
தேசியப் படகோட்டி ஜோவி ஜேடன் கலைச்செல்வன், 23, இந்த ஆண்டுத் தென்கிழக்காசிய விளையாட்டுகளில் சிறப்பாகச் செய்ய விரும்புகிறார். 2028 ஒலிம்பிக் விளையாட்டுகளையும் இவர் குறிவைக்கிறார். - படம்: ஜோவி ஜேடன் கலைச்செல்வன்

முதன்முறையாக ஹனோய் 2021 தென்கிழக்காசிய விளையாட்டுகளில் 500 மீட்டர் குழுப் பிரிவில் வெண்கலம் வென்ற அவர், அதைத் தொடர்ந்து 2022 ஆசிய பசிபிக் ஸ்ப்ரின்ட் கோப்பை, 2023 ஆசிய விளையாட்டுகள் ஆகியவற்றிலும் சிங்கப்பூரைப் பிரதிநிதித்தார்.

தன் ‘ஓ’ நிலைத் தேர்வுகளின்போது தந்தையை இழந்ததாகவும் அதனால் குடும்பம் நிதிப் பிரச்சினைகளை எதிர்கொண்டதாகவும் ‘பயனியர்’ பத்திரிகையிடம் முன்பு தெரிவித்துள்ளார் ஜோவி.

தற்போது வார இறுதிகளில் சிறுவர்களுக்குப் படகோட்டம் சொல்லிக் கொடுத்துப் பணம் சேமித்துவருகிறார்.

“ஸ்பெக்ஸ்பொடென்‌ஷியல் திட்டம்மூலம் மாதாமாதம் கிடைக்கும் உதவித் தொகையால் இனி அதிகப்படியான வேலையிலிருந்து உடலுக்கு ஓய்வு அளித்து, விளையாட்டை மேம்படுத்திக்கொள்ள இயலும்,” என்றார் ஜோவி.

நிகழ்ச்சியில், “இந்த ஆதரவு உங்களுக்கு நிம்மதியளிக்கும் என நம்புகிறோம். நீங்கள் உங்கள் கனவுகளை மட்டுமன்றி எதிர்காலத் தலைமுறையினரின் கனவுகளையும் சுமக்கிறீர்கள். சிங்கப்பூர் விளையாட்டுத் துறையின் சிறந்த நாள்கள் இனி வரவுள்ளன,” எனக் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங் விளையாட்டு வீரர்களிடம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்