சிங்கப்பூர், மலேசிய வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் செட்டி மலாக்கா சமூகத்தினர் பற்றி இளையர்களிடத்தில் கொண்டுசெல்லும் பெருமுயற்சியை இளையர்களே எடுத்துள்ளனர்.
செட்டி மலாக்கா சமூகத்தைப் பற்றிய இணையக் காட்சிக்கூடத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் செயின்ட் ஜோசஃப் கல்வி நிலையம், ஜூரோங் வெஸ்ட் உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றைச் சேர்ந்த 28 உயர்நிலை மூன்று தமிழ் மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.
இம்முயற்சிக்கு பெரானாக்கான் அரும்பொருளகமும் சிங்கப்பூர் பெரானாக்கான் இந்தியர் (செட்டி மலாக்கா) சங்கமும் துணைபுரிந்துள்ளன. நவம்பர் 23, 24ஆம் தேதிகளில் பெரானாக்கான் அரும்பொருளகத்தில் நடந்த ‘பெரானாக்கான் இந்தியர்களோடு பாத்தேக் கதைகள்’ நிகழ்ச்சியில் இணையக் காட்சிக்கூடம் அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை மாணவர்கள், செயின்ட் ஜோஃசப் கல்வி நிலையத்தின் இருமொழிப் புலமைத் திட்டத்தின்கீழ் (Project Biliteracy), இக்காட்சிக்கூடத்தை உருவாக்கினர். அதன்பின்பு கடந்த ஓராண்டாக அது மேம்படுத்தப்பட்டது.
மாணவர்களுக்கு வழிகாட்டிகளாக ஆறு ஆசிரியர்களும் இரு அரும்பொருளக அதிகாரிகளும் பங்காற்றினர்.
“இளம் தலைமுறையினர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் ஆர்வமுடையவர்கள். அதனால், இணையக் காட்சிக்கூடம்வழி அவர்கள் எங்கள் வரலாற்றை மேலும் எளிதில் புரிந்துகொள்வர்,” என்றார் சிங்கப்பூர் பெரானாக்கான் இந்தியர் (செட்டி மலாக்கா) சங்கத் தலைவர் பொன்னுசாமி காளஸ்திரி.
“எவ்வாறு படங்கள், எழுத்துகள் மூலம் ஒரு சமூகத்தின் வரலாற்றை 21ஆம் நூற்றாண்டில் பொதுமக்களுக்கு எடுத்துச் செல்வது என்பதை மாணவர்கள் அறிந்துகொண்டனர்,” என்றார் செயின்ட் ஜோசஃப் கல்வி நிலைய மூத்த ஆசிரியர் கார்த்திகேயன் கோவிந்தராஜ்.
“செட்டி மலாக்கா சமூகத்தினர் தங்களுக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கி இருப்பதை அறிந்து மாணவர்கள் ஆச்சரியப்பட்டனர். இன்று செட்டி மலாக்கா சமூகத்தில் பலரும் தமிழ் பேசாவிட்டாலும் தமிழர் பண்பாட்டுக் கூறுகளைக் கடைப்பிடித்து வருகின்றனர். இதனால் மாணவர்களுக்குத் தமிழார்வமும் பிற நாகரிகங்கள் பற்றிய புரிதலும் அதிகரித்தன,” என்றார் ஜூரோங் வெஸ்ட் உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியர் திரு கணேசுகுமார் பொன்னழகு.
தொடர்புடைய செய்திகள்
பொதுமக்களை எட்டிய தகவல்
இளம் செட்டி மலாக்கா சிங்கப்பூரர்களின் அடையாளம் பற்றிய புரிதலை மாணவர்களிடத்தில் ஏற்படுத்தும் எண்ணத்தோடு திட்டம் தொடங்கியது. நாளடைவில், வகுப்பறையோடு நின்றுவிடாமல் பொதுமக்களுக்கும் தகவல்களைப் பகிரும் வகையில் திட்டம் விரிவடைந்தது.
செட்டி மலாக்கா சமூகம், வாய்மொழி வரலாறு பற்றி மாணவர்கள் இருமொழிப் பயிலரங்குகள்வழி கற்றனர். பெரானாக்கான் அரும்பொருளகத்துக்கும் சாங்கி தேவாலயம் அரும்பொருளகத்துக்கும் அவர்கள் கற்றல் பயணம் மேற்கொண்டனர். தாங்கள் கற்றுக்கொண்டவற்றின் அடிப்படையில் தமிழில் கட்டுரை ஒன்றும் எழுதினர். அது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.
காட்சிக்கூடத்தை வடிவமைத்தல்
குழுக் கலந்துரையாடல்களில், “வீட்டிலும், வெளியிலும் செட்டி மலாக்கா சமூகத்தினரின் பழக்கங்கள் யாவை? செட்டி மலாக்கா பாரம்பரிய உணவிலும் சிங்கப்பூர் உணவிலும் எவ்வாறு சமநிலை காண்கிறார்கள்?,” போன்ற கேள்விகளை மாணவர்கள் எழுப்பி, அவற்றின் அடிப்படையில் காட்சிக்கூடத்தை வெவ்வேறு பிரிவுகளாக அமைத்தனர்.
“பெரானாக்கான் அரும்பொருளகத்தை நேரில் சென்று காணவும் எங்கள் காட்சிக்கூடம் மக்களை ஊக்குவிக்கும்,” என்றார் இம்முயற்சியில் ஈடுபட்ட செயின்ட் ஜோசஃப் கல்வி நிலைய மாணவர் குரு ஆனந்த் அனிஷ்.
“காட்சிக்கூடத்தில் தமிழில் இடம்பெற்ற விளக்கங்கள், ஆங்கிலக் குறிப்புகளின் மொழிபெயர்ப்பல்ல. தமிழிலும் ஆங்கிலத்திலும் படித்து, மேம்பட்ட புரிதலை மக்கள் பெற வேண்டும் என்பதே நோக்கம். தமிழ் பேசும் புதிய குடிமக்களைச் சமூகத்தில் ஒன்றிணைக்கவும் இது உதவும்,” என்றார் ஜூரோங் வெஸ்ட் உயர்நிலைப் பள்ளி மாணவர் சிவா.
“செட்டி மலாக்கா சமூகத்தின் பண்பாடு என்பது சிங்கப்பூரின் மரபில் ஒரு முக்கியப் பகுதி. அதைப் பேணிக்காக்கும் பொறுப்பு அச்சமூகத்துக்கு மட்டும் உரியதல்ல. சிங்கப்பூரர்கள் ஒவ்வொருவரின் கடமையும் ஆகும்,” என்றார் செயின்ட் ஜோஃசப் கல்வி நிலைய மாணவர் ரதுல் ராமச்சந்திரன்.
https://tinyurl.com/ChittyMelakaMuseum என்ற இணைப்பில் காட்சிக்கூடத்தைக் காணலாம்.

