தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பல் மருத்துவத் துறையில் சாதிக்க வேட்கை

2 mins read
94b08115-d71d-4fcf-915c-4b3bdd020a8a
தேசிய பல்கலைக்கழகத்தில் பயிலும் இரண்டாம் லெஃப்டினென்ட் நிஷாந்த் பாலாஜி. - படம்: தற்காப்பு அமைச்சு

சிங்கப்பூர் ஆயுதப் படையைச் சேர்ந்த இளம் அதிகாரியான ‘இரண்டாம் லெஃப்டினென்ட்’ நிஷாந்த் பாலாஜி, 20, தற்போது பல் மருத்துவத் துறையில் கல்விமானாகவும் திகழ்கிறார்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் தற்போது முதலாம் ஆண்டு பயின்றுவரும் நிஷாந்த், அத்துறையில் பயிலவேண்டும் என்ற தம் நெடுநாள் கனவை நனவாக்கியுள்ளார்.

பல் மருத்துவத் துறையைத் தேர்ந்தெடுத்துப் படிக்க, அவருக்கு ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் சிங்கப்பூர் ஆயுதப் படையின் தற்காப்பு உபகாரச் சம்பளம் வழங்கப்பட்டது.

முள்ளந்தண்டு நடுவெலும்பு (prolapse disc), கால் முதன்மை நரம்பு (sciatic nerve) ஆகியவை பாதிக்கப்பட்ட தம் தாயாரின் வேதனையை நிஷாந்த் நினைவுகூர்ந்தார்.

“என் தாயாருக்கு ஏற்பட்ட கடும் வலியைப் போக்க மருத்துவ நிபுணர்கள் பலர் சேர்ந்து முயன்றதைக் கண்டேன். அது, மருத்துவத் துறையினர்மீது நான் கொண்டிருந்த மதிப்பைக் கூட்டியது,” என்று கூறினார்.

பிப்ரவரி 2023ல் தேசிய சேவையைத் தொடங்கிய திரு நிஷாந்த், அடிப்படை ராணுவப் பயிற்சிக்குப் பிறகு அதிகாரிப் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தார். அங்கு பயிற்சிக்கு வரும் இளம் வீரர்களுக்குச் சொற்களால் ஊக்கமூட்ட தாம் முயல்வதாக நிஷாந்த் கூறினார்.

“கனவுகள் நனவாகும் காட்சிகளை மனத்திரையில் வரையும்படி என்னைச் சேர்ந்தவர்களை ஊக்குவிப்பேன். இதனைக் கடைப்பிடித்த இளையர் ஒருவர், தம் ராணுவ அடிப்படைப் பயிற்சியின் சவால்மிக்க தருணங்களைக் கடக்க இயன்றதாகவும் அதனால் தம் தாயார் பெருமை அடைந்ததாகவும் கூறினார். இது என் வாழ்க்கையை மாற்றிய தருணம்,” என்று அவர் கூறினார்.

ராணுவம், கல்வி தொடர்பான கடமைகளுக்கு அப்பால் விளையாடி, இளைப்பாறி மகிழும் நிஷாந்திற்கு தரைப்பந்து விளையாடப் பிடிக்கும். இந்த விளையாட்டில் அவர் பிறருக்குப் பயிற்றுவித்தும் வருகிறார்.

இறக்க நேர்ந்தாலும் இறுதி வரை போராட வேண்டும் என்ற ஆங்கிலக் கவிஞர் டிலன் தாமசின் வாசகம், தமக்கு எப்போதும் ஊக்கம் தருவதாக நிஷாந்த் குறிப்பிட்டார்.

உபகாரச் சம்பளம் பெற்றதில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறிய நிஷாந்த், தம் முயற்சியையும் கடப்பாட்டையும் ராணுவத்துறை அங்கீகரித்ததை எண்ணிப் பெருமை அடைவதாகச் சொன்னார்.

“அப்பாதையில் உடல், மனம் சார்ந்த சவால்களைக் கடக்க என் குடும்பத்தினர் உதவியுள்ளனர்,” என்றார் நிஷாந்த்.

படித்த பிறகு வேலையைத் திறமையாகச் செய்து சாதிக்க விரும்பும் நிஷாந்த், வருங்காலத்தில் மனிதாபிமான உதவி சார்ந்த வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள விரும்புவதாகக் கூறினார்.

என் தாயாருக்கு ஏற்பட்ட கடும் வலியைப் போக்க மருத்துவ நிபுணர்கள் பலர் சேர்ந்து முயன்றதைக் கண்டேன். அது, மருத்துவத் துறையினர்மீது நான் கொண்டிருந்த மதிப்பைக் கூட்டியது.
நிஷாந்த் பாலாஜி, 20
குறிப்புச் சொற்கள்