தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறு புன்னகையில் பேரின்பம் காணும் தாதி திலகவதி

3 mins read
9ce866fb-4744-41eb-a0c0-4e8084a5e364
தமிழ், மலாய், ஆங்கிலம் பேச முடிவதால் அந்தந்த மொழி பேசும் முதியோர் தம்மிடம் இயல்பாகப் பழக முடிவதாகச் சொன்னார் திலகவதி. - படம்: திலகவதி

தமக்காக வயது முதிர்ந்த நல்லுள்ளங்கள் காத்திருப்பார்கள் என்ற நினைவுடன் அதிகாலை 3.30 மணிக்குத் தமது நாளைத் தொடங்குகிறார் தாதி திலகவதி மனோகரன்.

ஜோகூர் பாருவில் வசிக்கும் 33 வயது திலகவதி, கடந்த 11 ஆண்டுகளாக சிங்கப்பூரிலுள்ள ‘நோய்வாய்ப்பட்ட வயதானவர்களுக்கான சங்கம்’ (Society for the Aged Sick) தாதிமை இல்லத்துக்கு வந்து செல்கிறார்.

பள்ளிப் படிப்பை முடித்த கையுடன் எந்த எதிர்பார்ப்புமின்றி தாதியர் படிப்பை மேற்கொண்ட திலகவதி, வேலைப் பயிற்சிக்குச் சென்றபோது தாதியரின் கனிவான பண்பு, மென்மையான அணுகுமுறை, சேவை மனப்பான்மை உள்ளிட்டவற்றைக் கண்டு வியந்தார். தாமும் அத்தகைய ஒரு தாதி ஆக வேண்டும் என உறுதி பூண்டார்.

அதனை இன்றுவரை கடைப்பிடித்து வருவதாகக் கூறிய அவர், “நான் கவனிக்கும் முதியவர்கள் பொழியும் அன்புக்கு ஈடு இணையே இல்லை,” என்றார்.

“சுறுசுறுப்பாக இருந்த ஒருவர், திடீரென மயங்கி விழுந்து பக்கவாத நோய்க்கு ஆளானார். சிகிச்சைக்குப் பிந்திய பராமரிப்புக்காக எங்களிடம் வந்தார். தமது நிலை குறித்த உணர்வுகள் நாளடைவில் மன அழுத்தமாகவும் வெறுப்பாகவும் மாறியது. யாரிடமும் பேசாமல் தனித்தே இருந்த அவரை, இயன்றளவு புரிந்துகொள்ள முயற்சி செய்தேன். அன்பு காட்டி அரவணைத்தேன். நாளடைவில் அவர் முகத்தில் புன்னகை தெரிந்தது. ஒருநாள் என்னை அருகில் அழைத்து, என் கையை இறுகப் பற்றித் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். அந்தத் தருணத்தை என் வாழ்வில் மறக்க முடியாது,” என்றார் திலகவதி.

“இது போன்ற சிறு சைகைகள், எனக்குக் கிடைக்கும் பெரும் பேறு,” என்றும் சொன்னார்.

தமது வாழ்வின் இறுதிக்கட்டத்தை இல்லத்தில் கழித்த மற்றொரு நோயாளி, தமது கடைசி நாளன்று தம்மைத் தேடியதையும் இறக்கும் முன் கடைசி மூன்று மணி நேரத்தைத் தம்மோடு செலவிட்டதையும் நெகிழ்ந்தபடி நினைவுகூர்ந்தார் திலகவதி.

தமது விடுப்பு நாள்களில்கூட தம்மைச் சிலர் தேடுவதாகக் குறிப்பிட்ட திலகவதி, இல்லவாசிகளைத் தம்முடைய குடும்பமாகவே தாம் கருதுவதாகச் சொன்னார்.

இந்தப் பணியில் சவால்களும் இருக்கவே செய்வதாகக் கூறினார் அவர்.

“நோயாளிகளுக்கு ஏற்படும் அழுத்தம், நோய் காரணமாக ஏற்படும் எரிச்சல், மறதி, குழப்பம் ஆகியவை பல நேரங்களில் கோபமாக வெளிப்படும்,” என்றார்.

அந்நேரத்தில் அதற்கான காரணத்தைக் கண்டறிந்து, அதைச் சமாளிக்கத் தாம் முயல்வதாகச் சொன்னார்.

நான்கு வயது மகளையும் ஒரு வயது மகனையும் தம் தாயாரின் பராமரிப்பில் விட்டு வரும் இவர், அந்தச் சிரமங்களைத் தமது பணி தரும் மனநிறைவு மூலம் ஈடுசெய்வதாகச் சொன்னார்.

கொள்ளைநோய்க் காலத்தில் மூன்று மாதக் குழந்தையாக இருந்த மகளை விட்டு, ஓராண்டு சிங்கப்பூரில் பணியாற்றியது வாழ்வில் சந்தித்த மிகக் கடினமான நெருக்கடி என்று நினைவுகூர்ந்த இவர், தமது உழைப்பு, பொறுமை, உறுதி ஆகியவற்றைக் கண்டு வளரும் தம்முடைய பிள்ளைகள் அவற்றைப் பின்பற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் உள்ளார்.

மருத்துவமனையிலும் தாதிமை இல்லங்களிலும் நோயாளிகளின் குடும்பத்தினரைக் காட்டிலும் அந்த நோயாளிகளை நன்றாக கவனித்துக்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ள தாதியரை, பொதுமக்கள் மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் திலகவதி.

மக்கள் இயன்ற அளவு தாதியருக்குத் தங்கள் நன்றியையும் பாராட்டுகளையும் சிறு புன்னகை மூலமாவது வெளிப்படுத்த வேண்டும் என்றும் கோரினார்.

குறிப்புச் சொற்கள்