சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் வெவ்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் என்யுஎஸ் கல்லூரியில் விருது பெற்றுள்ள மாணவர்கள் இருவரைத் தமிழ் முரசு பேட்டி கண்டது.
மாணவர்களுக்கு ஆதரவு அளிக்கும் பேராசிரியர்கள் பெருமைப்படும் வண்ணம் இவர்களது சாதனை அமைந்துள்ளது.
உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் இவர்களது கல்விப் பயணம் தொடர்கிறது.
ஆய்வாளரும் உணர்வும்
அரசியல், பொருளியல், மெய்யியல் பாடத்தில் இளநிலைப் பட்டப்படிப்பை முடித்துள்ள அனன்யா மதுர், அடுத்து கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இனி முதுநிலைப் பட்டப்படிப்பை மேற்கொள்ளவுள்ளார்.
உயர்நிலைப் பள்ளியில் வரலாற்றின்மீது கொண்ட மோகம், பின்னர் அரசியல் துறை கல்விக்கான கதவுகளையும் அவருக்காகத் திறந்துவைத்தது.
“அமெரிக்காவுக்கும் முன்னாள் சோவியத் யூனியனுக்கும் இடையிலான பனிப்போரைப் பற்றி என் ஆசிரியர் சுவைபட விளக்கியதால் என் ஆர்வம் கூடியது. வெவ்வேறு மூலங்களை ஆராய்ந்து மாறுபட்ட கண்ணோட்டங்களை அறியும் கலையைக் கற்றோம்,” என்று அனன்யா சொன்னார்.
வரலாற்றின் மூலம் கொள்கை வகுப்பைப் பற்றியும் அறநெறிகளைப் பற்றியும் அனன்யா ஆராயத்தொடங்கினார். ஜான் ரால்ஸ் என்ற அமெரிக்க மெய்யியல் மேதையைத் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று அனன்யா கூறினார்.
“குறிப்பாக, அறியாமைத் திரையைப் பற்றி அவர் குறிப்பிட்டது எனக்குப் பிடித்திருந்தது. சமூகத்தில் அனைவருக்கும் நியாயமான முறையில் கொள்கை வகுப்பில் மதிப்பிடுவது குறித்து ரால்ஸ் வலுவான திட்டத்தை உருவாக்கியுள்ளார்,” என்று அனன்யா சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
சமூக நீதி பற்றிய ஏட்டுக்கல்வியை நுணுகி ஆய்ந்த அனன்யா, பலதரப்பட்ட மக்களுடன் பேசி அவர்களது அனுபவங்களிலிருந்தும் பாடம் கற்றார்.
வெளிநாட்டு ஊழியர்கள், பாலியல் தொழிலாளர்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டபோது கொவிட்-19 கிருமிப்பரவலின்போது அவர்கள் அனுபவித்த துன்பங்களைப் பற்றி அறிந்து ஆய்வு செய்தார்.
“ஊழியர்கள் கூறிய தகவல்கள் மட்டுமன்றி அவர்களது உணர்வுகளையும் உள்வாங்கினேன். ஆய்வாளருக்கு மூளை எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு உணர்வும் முக்கியம்,” என்கிறார் அனன்யா.
‘லீட்நெக்ஸ் ஃபெலோஸ்: அனைத்துலக எதிர்காலத்திற்கான தூதுவர்த் திட்டம்’ என்ற வேலைப்பயிற்சி திட்டத்தில் அவர் இணைந்திருக்கிறார்.
என்யுஎஸ் அரசியல், பொருளியல், மெய்யியல் மன்றத்தில் தலைவராகவும் ஆசியப் பல்கலைக்கழக மாணவ பயிற்சியில் மன்ற உறுப்பினராகவும் இவர் செயல்பட்டுள்ளார். சையது அகமது கான் ஏஎம்யு நினைவுப் பரிசும் அவருக்கு வழங்கப்பட்டது.
‘பலதுறை அறிவைப் பெருக்கலாம்’
விரும்பிய பாடத்தைப் பயில வாய்ப்பு கிடைக்காத நிலையில் கிடைத்த படிப்பை விரும்பிப் படித்தார் கெளதம் விஜயன் குமரன்,.
அவரது திறந்த மனமும் நேர்மையான செயல்பாடும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பயிலும் அரும்வாய்ப்பை பெற்றுத் தந்துள்ளன.
நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் உயிர்மருத்துவப் பொறியியல் படிப்பைத் தன் தாயாரின் பரிந்துரையில் தேர்ந்தெடுத்த இவர், தனக்கு அமைந்த கல்விப்பாதையின் சிறப்பை, படித்து உணர்ந்தார். பட்டயப் படிப்பில் தலைசிறந்த மாணவராகத் தேர்ச்சி பெற்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் மதிப்புமிக்க பல்கலைக்கழகக் கல்விமான் திட்டத்தில் (என்யுஎஸ் கல்லூரி எனத் தற்போது அழைக்கப்படுகிறது) இவர் சேர்ந்தார்.
பன்முகத்தன்மைமிக்க கல்விச் சூழலில் சோதனைகள் இருந்தாலும் அவை இறுதியில் சிந்தைக்குச் செறிவூட்டியதாக கெளதம் கூறினார்.
“பொறியியல் துறை மாணவனாக இருந்தாலும் உளவியல், மெய்யியல் சார்ந்த வகுப்புகளிலும் இருந்தேன். முற்றிலும் மாறுபட்ட துறையைச் சேர்ந்த மாணவர்களுடன் பணியாற்றிய அனுபவமும் என் கண்ணோட்டத்தை விரிவுபடுத்தி, கற்றல் அனுபவத்தை மேம்படுத்தியது,” என்று இவர் கூறினார்.
பல்கலைக்கழகத்தில் தலைமைப் பொறுப்புகளை விரும்பி ஏற்றார் கௌதம். தலைவர்கள் பலரைச் சந்திக்கும் வாய்ப்புகளைப் பெற்று, தமது தொடர்பு வட்டத்தை விரிவுபடுத்தினார்.
மாணவச் சமூகத்திற்கான பல்கலைக்கழக மன்றத்தில் 1ஆம் தலைவராக இருந்து, என்யுஎஸ் வளாகத்தின் திட்டமிடலிலும் இவர் ஈடுபட்டார்.
மின்னிலக்கமயமாதலால் சிங்கப்பூரின் உணவுக்கடைக்காரர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு பற்றிய பணித்திட்டம் தம் நினைவில் சிறப்பிடம் பிடித்திருப்பதாகக் கூறினார்.
“கொள்கையை வகுப்போருக்கும் கொள்கை முடிவுகளால் பாதிக்கப்படுவோருக்கும் இடையே இடைவெளி அவ்வப்போது ஏற்படுகிறது என்பதற்கு உணவங்காடிகளின் நிலை ஓர் எடுத்துக்காட்டு,” என்று அவர் கூறினார்.
அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழத்தில் கல்வித்துறை முதுநிலைப் பள்ளியில் முதுநிலை பயிலும் இவருக்கு, சிண்டா-சிக்கி கல்விமான் விருது கைகொடுத்துள்ளது.
“பல்கலைக்கழகப் படிப்பைப் பயில்பவர்கள் தங்கள் கல்விக்கு முழுப் பொறுப்பு ஏற்கவேண்டும். இதைக் கருத்தில்கொண்டு செயல்படப் பழகிக்கொள்ளுங்கள்,” என்கிறார் கௌதம்.

