பொதுக் கல்விச் சான்றிதழ் வழக்கநிலைத் (N level) தேர்வு முடிவுகள் அண்மையில் வெளிவந்தன. ஜனவரி மாதத்தில் பொதுக் கல்விச் சான்றிதழ் சாதாரண நிலைத் (O level) தேர்வு முடிவுகளும் வெளிவரவுள்ளன.
தேர்வு முடிவுகளைப் பெற்றுகொள்ளும் மாணவர்களிடம் தங்களின் கல்விப் பாதையில் அடுத்த அடியை எடுத்துவைக்குமுன் பல கேள்விகளும் ஐயங்களும் இருக்கக்கூடும்.
இந்நிலையில், வருங்காலத்தில் குறிப்பிட்ட துறையில் கால்பதிக்க வேண்டுமென்று உறுதியாக இருக்கும் மாணவர்களில் சிலர் பலதுறைத் தொழிற்கல்லூரியில் சேர்ந்து பயில முடிவெடுத்திருக்கலாம்.
அடுத்து என்ன செய்வது என முடிவெடுக்காத மாணவர்கள், பலதுறைத் தொழிற்கல்லூரிகள் ஏற்பாடு செய்யும் பொது வரவேற்பு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அங்கு எந்தெந்த பாடப் பிரிவுகள் வழங்கப்படுகின்றன என்பதை விரிவாக அறிந்துகொள்ளலாம்.
அவ்வகையில், நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியும் சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியும் 2025 ஜனவரி மாதத்தில் பொது வரவேற்பு தின நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளன.
நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரி
நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரி, ஜனவரி 9, 10, 11ஆம் தேதிகளில் பொது வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
கருத்தரங்குகள், கலந்துரையாடல் அம்சங்கள் போன்றவை அதில் அடங்கியுள்ளன. அவற்றில் பங்கெடுப்போர், பயன்பாட்டு அறிவியல், தொழில் நிர்வாகம், வடிவமைப்பு மற்றும் ஊடகம், பொறியியல், சுகாதாரம் மற்றும் சமூக அறிவியல், தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடத்திட்டங்களைக் குறித்து அறிந்துகொள்ளலாம்.
மேலும், நிகழ்ச்சியில் கலந்துகொள்வோருக்கு நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியில் இருக்கும் ‘பியாண்ட் ரியாலிட்டி’ ஊடகக் கூடத்தைக் காணும் சிறப்பு வாய்ப்பும் வழங்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
தொழில் நிர்வாகம், வடிவமைப்பு மற்றும் ஊடகக் கல்விக் கழகங்களில் பயிலும் மாணவர்களுக்குச் செறிவான கல்வி அனுபவம் கிடைக்க வேண்டுமென்ற நோக்கத்தில் அவர்களுக்கு இக்கூடத்தில்தான் பாடங்கள் நடத்தப்படவுள்ளன.
இதனிடையே, நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரி புதிதாக மூன்று கட்டக் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்துள்ளது. வழக்கநிலை, சாதாரண நிலை, தொழில்நுட்பக் கல்விக்கழக மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அக்கருத்தரங்கில் மாணவர்கள் தகவலறிந்தபின் முடிவுகளை எடுப்பது குறித்து அறிந்துகொள்வர்.
மேலும், நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரி புதிதாக இரண்டு பட்டயக் கல்விப் பாடப் பிரிவுகளைத் தொடங்கவுள்ளது. விண்வெளித்துறைப் பொறியியல், பொறியியலிலும் தொழிலிலும் நீடித்த நிலைத்தன்மை (Sustainability in Engineering with Business) என்பனவே அவ்விரு பட்டயக் கல்விப் பாடப்பிரிவுகள்.
வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்கள், ஏற்கெனவே வழங்கப்படும் பாடப்பிரிவுகளுடன் இந்தப் புதிய பிரிவுகளைப் பற்றியும் அறிந்துகொள்ள முடியும்.
அத்துடன், மாணவர்களுக்கு என்னென்ன இணைப்பாட நடவடிக்கைகள் உள்ளன என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.
சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரி
சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியின் பொது வரவேற்பு நிகழ்ச்சிக்குச் செல்வோர் அதன் ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் கலந்துரையாடி, அங்கு வழங்கப்படும் பாடப்பிரிவுகளைப் பற்றி விரிவாக அறிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறலாம்.
2025 ஜனவரி 9ஆம் தேதி நடைபெறவிருக்கும் அந்நிகழ்ச்சியில் மாணவர்களும் பெற்றோர்களும், பலதரப்பட்ட பாடப்பிரிவுகளைப் பற்றித் தெரிந்துகொண்டு நல்ல முடிவை எடுக்க இயலும் என்று சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரி தனது இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.
பலதுறைத் தொழிற்கல்லூரி வளாகத்திலுள்ள ஒவ்வொரு கல்விக் கழகத்திற்கும் செல்வதற்கான பேருந்துச் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இணைப்பாட நடவடிக்கைக் குழுக்களின் நிகழ்ச்சிகளையும் வருகையாளர்கள் கண்டு ரசிக்கலாம்.
மேலும், நீடித்த நிலைத்தன்மை, உருமாற்றம், ஏட்டுக்கல்விப் புத்தாக்கம் உள்ளிட்டவற்றைச் சார்ந்த 20க்கு மேற்பட்ட புத்தாக்கப் பணித்திட்டங்களும் காட்சிக்கு வைக்கப்படும்.
அக்கல்வி நிலையத்தில் சேர்ந்து பயில விரும்புவோர், தங்களது ஆற்றல்களை அறிந்துகொண்டு, எதிர்காலம் குறித்த நல்ல முடிவுகளை எடுப்பதற்குக் கல்வி, வாழ்க்கைத்தொழில் வழிகாட்டிகளை நாடித் தெளிவுபெறலாம். கூடுதல் தகவல்களுக்கு https://openhouse.nyp.edu.sg/happenings, https://sopossible.sp.edu.sg/spoh25 எனும் இணையத்தளங்களை நாடலாம்.