அவமானங்களைத் தகர்த்தெறிந்த ‘பெருமித நடை’

அவமானங்களைத் தகர்த்தெறிந்த ‘பெருமித நடை’

3 mins read
‘சோதனை இல்லாமல் சாதனை இல்லை’ என்கிறார் எடைக் குறைப்பில் சாதித்த இளையர்
74549688-cbde-46aa-9526-f18c0fcee7af
‘ஸ்கல்ப்ட் சொசைட்டி’ உடற்பயிற்சிக் கூடத்திற்கு அருகே ஓர் அழகான நாய்க்குட்டியுடன் ஹரேஷ் (இடம்), விக்னேஷ். - படம்: தாஷாயனி சுகேந்திரன்
multi-img1 of 5

உடற்பருமன் என்பது பலருக்கு உடல் சார்ந்த பிரச்சினை மட்டுமன்று. அது சமூகத்தின் விமர்சனங்களாலும் கேலிப் பார்வைகளாலும் ஒருவரை மனத்தளவில் ஆழமாகப் பாதிக்கும் ஒரு போராட்டமாகும்.

அந்த விமர்சனங்களை உடைத்தெறிந்து, தன்னம்பிக்கையோடு எழுந்து நிற்க முடியும் என்பதைத் தமது எடைக் குறைப்புப் பயணத்தின்மூலம் நிரூபித்துக் காட்டியிருக்கிறார், ‘ஸ்கல்ப்ட் மீடியா’ (Sculpt Media) நிறுவனத்தின் படைப்பாக்க இயக்குநரான 24 வயது இளையர் ஹரேஷ் சுரேஷ்.

தொடக்கத்தில் உடற்பருமனால் பெருஞ்சவால்களைச் சந்தித்த ஹரேஷின் வாழ்க்கையில், ஒருநாள் திடீரென ஏற்பட்ட வயிற்றுவலி திருப்புமுனையாக அமைந்தது. மருத்துவரைச் சந்திக்கச் சென்றபோது, அவர் வயிற்றைப் பரிசோதிப்பதற்குப் பதிலாக எடைபார்க்கும் இயந்திரத்தில் நிற்கச் சொன்னார்.

அந்தத் தருணத்தை நினைவுகூர்ந்த ஹரேஷ், “என் சகோதரனிடம் நான் 200 கிலோவைத் தொடவே மாட்டேன் என்று கூறியிருந்தேன். ஆனால், இயந்திரத்தில் 206 கிலோ என்று காட்டியதைப் பார்த்ததும் எனக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது,” என்றார்.

அமர்ந்த இடத்திலேயே உணவு வாங்கும் இன்றைய நவீன வாழ்க்கைமுறையால் உடல் உழைப்பு குறைந்து, இளையர்களுக்குச் சிறுவயதிலேயே மாரடைப்பு, நீரிழிவு போன்ற நோய்கள் வருவதை உணர்ந்த அவர், தமது வாழ்க்கைமுறையை மாற்ற முடிவெடுத்தார்.

இந்த இக்கட்டான நிலையில்தான் அவருக்கு ‘ஸ்கல்ப்ட் சொசைட்டி’ (Sculpt Society) அமைப்பின் தனிப்பட்ட பயிற்றுவிப்பாளரான (Personal Trainer) 35 வயது விக்னேஷ் வெண்ணுவின் வழிகாட்டுதல் கிடைத்தது.

எடைக் குறைப்பு என்பது உடற்பயிற்சிக்கூடம் சென்று பயிற்சி செய்வது மட்டுமன்று. அது, ஒருவர் தம் உடலின் நிலையைத் துணிச்சலுடன் ஏற்றுக்கொள்ளும் மனநிலையாகும்.

தம்முள் இருந்த தாழ்வு மனப்பான்மையை உடைப்பதற்காக, தம் சகோதரனுடனும் பயிற்றுவிப்பாளர் விக்னேஷுடனும் இணைந்து ஹரேஷ் சட்டையின்றிப் பொதுவெளியில் நடந்து சென்றார். அப்பர் தாம்சனில் தொடங்கி லிட்டில் இந்தியா வரை நடந்த இந்தச் ‘சட்டையில்லா நடைப்பயணம்’ பலரின் விமர்சனப் பார்வைகளை ஈர்த்தாலும், அதைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.

“அது பலருடைய பார்வையை எங்கள் பக்கம் திருப்பியது. ஆயினும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதைவிட அதனை ஒரு மாபெரும் சமூக இயக்கமாக மாற்ற வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாக இருந்தது,” என்றார் ஹரேஷ்.

இவரது இந்தத் துணிச்சலான செயல், சமூகத்திற்கு உற்சாகம் அளித்து, கடந்த மே 3ஆம் தேதி 10 கிலோமீட்டர் தொலைவு கொண்ட ‘பெருமித நடை’யாக (Walk of Pride) உருவெடுத்தது. கேசுவரினா பிராட்டா ஹவுஸில் காலை 7 மணிக்குத் தொடங்கிய அந்த நடைப்பயணத்திற்கு இன்ஸ்டகிராம் மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 170 பேர் பதிவு செய்திருந்தாலும் 50 பேர் மட்டுமே நேரில் வந்திருந்தனர்.

“அன்று கூட்டம் சேர்ந்தபோதுதான் எனக்கு ஒன்று புரிந்தது. அவர்கள் எனக்காக மட்டும் வரவில்லை, எடையைக் குறைக்க வேண்டும் என்ற பொதுவான நோக்கத்திற்காகவே அனைவரும் கூடியிருந்தனர்,” என்று ஹரேஷ் நெகிழ்ச்சியோடு நினைவுகூர்ந்தார்.

வெவ்வேறு வயதினர், உடற்தகுதியின் வெவ்வேறு நிலைகளில் இருந்தோர் எனப் பலரும் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தியபடி, ‘வெவ்வேறு வேகம், ஆனால் ஒரே மனநிலை’ என்ற கொள்கையோடு அந்த நடையை வெற்றிகரமாக முடித்தனர்.

விக்னேஷின் வழிகாட்டுதலின்கீழ், ஹரேஷ் குறுகிய காலத்தில் 25 கிலோ எடையைக் குறைத்துள்ளார். முனைப்புடன்கூடிய இந்தப் பயணத்தில் குறுக்குவழிகளுக்கு இடமில்லை.

“தன்முனைப்பு என்பது முதல் மூன்று நொடிகளுக்குத்தான் உங்களை எழுந்து நிற்க வைக்கும். ஆனால், உங்களை வீட்டைவிட்டு வெளியே தள்ளி உடற்பயிற்சி செய்ய வைப்பது கட்டொழுங்குதான்,” என்று ஹரேஷ் ஆணித்தரமாகக் கூறுகிறார்.

‘சோதனை இல்லாமல் சாதனை இல்லை’ என்று ஆழமாக நம்பும் விக்னேஷ், “ஒரு பிரச்சினையை எதிர்கொண்டு அதற்கான தீர்வை நாமே கண்டுபிடிக்கும் அந்தப் பயணம்தான் வெற்றிகரமான, நிலையான எடைக் குறைப்பைச் சாத்தியமாக்கும்,” என்று உறுதியாகச் சொல்கிறார்.

உடற்பருமனால் தவிக்கும் பலருக்கும் ஹரேஷின் இந்தப் ‘பெருமித நடை’ ஒரு கலங்கரை விளக்கம். அவமானங்களைப் பெருமிதமாக மாற்றிய இவரது கதை, மற்றவர்களும் முதல் அடியைத் துணிவுடன் எடுத்து வைக்க ஊக்குவிப்பாக அமையும் என்பது உறுதி.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்