கணிதம் மற்றும் இயற்பியலில் மிகுந்த ஆர்வம் கொண்ட சிறைச்சாலை மாணவர் முத்து (புனைப்பெயர்) பொறியியல் துறையில் ஒரு தொழிலைக் கனவு காண்கிறார்.
அதனால் இயந்திரப் பொறியியல் மற்றும் தொழில்முனைவோர் பிரிவில் இரட்டைப் பட்டம் பெற திட்டமிட்டுள்ளார் முத்து.
இந்த இலக்கை அடைய அவரது ஜிசிஇ ‘என்’ நிலை தேர்வை அக்டோபர் மாதம் முடித்து அடுத்தாண்டு வழக்கநிலைத் தேர்வுகளுடன் ‘ஓ’ நிலை பாடத் தேர்வுகளை மேற்கொள்வார்.
இந்த வெற்றி வழி தனது மகனை ஊக்கப்படுத்த விரும்புவதாக தெரிவித்தார் முத்து.
சிங்கப்பூர்ச் சிறைச்சாலை பள்ளியில் பொதுக் கல்விச் சான்றிதழ் வழக்கநிலைத் (ஜிசிஇ ‘என்’ நிலை) தேர்வுக்கான முடிவுகளை முத்து உட்பட 52 மாணவர்கள் வியாழக்கிழமை (டிசம்பர் 18) பெற்றுக்கொண்டனர்.
மொத்தம் 96.2% மாணவர்கள் குறைந்தபட்சம் ஒரு பாடத்தில் தரத்தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 100%ஆக இருந்தது.
36.4% மாணவர்கள் ஆங்கிலம், கணிதம் மற்றும் மூன்று சிறந்த பாடங்களில் (ELMAB3) தேவையான ஒட்டுமொத்தப் 19 அல்லது அதற்கும் குறைவான புள்ளிகள் பெற்று தேர்ச்சி பெற்றனர்.
தொடர்புடைய செய்திகள்
குறைந்தபட்சம் 5 பாடத்தில் 45.5% மாணவர்கள் தரத்தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
இவ்வாண்டு ஜிசிஇ ‘என்’ நிலை தேர்வு எழுத ஏறத்தாழ 85 மாணவர்கள் விண்ணப்பத்தினர். அக்டோபர் மாதத்தில் தேர்வு எழுதுவதற்கு முன்பு 33 மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர் என்று சிங்கப்பூர் சிறைச்சாலைச் சேவை தெரிவித்தது.
1960களில் இருந்து சிங்கப்பூர் சிறைச்சாலை சேவை கைதிகளுக்கு கல்வி வழங்கி வருகிறது.
ஒவ்வோர் ஆண்டும், 300க்கும் மேற்பட்ட கைதிகள் சிறைச்சாலைப் பள்ளியில் தங்கள் கல்விப் பயணத்தை தொடர்கின்றனர்.
ஜிசிஇ ‘என்’ நிலை தேர்வுக்கு அமரும் மாணவர்கள் ஐந்து பாடங்கள் மேற்கொள்வர். கூடுதலாக மனிதநேய அல்லது தாய்மொழி பாடங்களை அவர்கள் தேர்வு செய்யலாம்.
தொடக்கநிலை இறுதியாண்டு தேர்வுகளை மட்டும் முடித்த மற்றொரு சிறைச்சாலைப் பள்ளி மாணவர் ‘ஜேசன்’, தன்னை மேலும் மேம்படுத்த ‘என்’ நிலைக் கல்வியை முடிக்கத் தீர்மானித்தார்.
அடுத்த ஆண்டு அவர் தனது ‘ஓ’ நிலை கல்வியைத் தொடரவும் விடுதலையாவதற்கு முன்பு பட்டய கல்வி சான்றிதழ் பெறவும் இந்த ‘என்’ நிலைத் தேர்வு முடிவுகள் ஆதரிக்கும் என்று தெரிவித்தார்.

