மிடுக்கான தோற்றமும் கூரான பார்வையும் கொண்ட தீபன், என்ன செய்தாலும் அதில் உள்ள நடைமுறைப் பலனை முதலில் ஆராயும் போக்கு உடையவர்.
‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ வேலை-கல்வித் திட்டத்தின்கீழ் தளவாட வேலை செய்துகொண்டே ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் விநியோகச் சங்கிலித் துறையில் நிபுணத்துவப் பட்டயப் படிப்பை மேற்கொண்டு வருகிறார் 27 வயது தீபன் நாயர்.
பணிமனை நிர்வாகம், விநியோகப் போக்குவரத்துச் செயல்பாடுகள், சரக்கு மேலாண்மை, மென்பொருள் திறன்கள் எனப் பல்வேறு திறன்களை அவர் கற்று வருகிறார்.
தம் வழக்கநிலைத் தேர்வில் 12 புள்ளிகள் பெற்று தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் சேர்ந்தார்.
தீபன் தம் தாயாரின் அறிவுரைபடி நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியில் சேர்ந்து வர்த்தகத் துறையைப் படிக்க முடிவெடுத்தார்.
திடல்தட விளையாட்டிலும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யும் குழுவிலும் சேர்ந்த தீபன், சக மாணவர்கள் பலருடன் பழகி, தமது தொடர்பு வட்டத்தை விரிவுப்படுத்தினார்.
நடைமுறை வாழ்க்கையோடு படிப்பைத் தொடர்புபடுத்திக்கொள்ள வேண்டும் என எண்ணிய தீபன், அப்போதும் அந்தப் பட்டயப்படிப்பில் முழுமையான ஆர்வத்தைச் செலுத்தவில்லை. 2.7 ஜிபிஏ புள்ளிகளைப் பெற்றார்.
தேசிய சேவை முடித்த பின்னர் உணவுப்பொருள்களைக் கொண்டுள்ள பணிமனையில் பொட்டலமிடுதல் உள்ளிட்ட சிறு வேலைகளை தீபன் பகுதிநேரமாகச் செய்து வந்தார்.
தொடர்புடைய செய்திகள்
ஆனால் அதே நேரத்தில் பணிமனை வேலைகள் தங்குதடையின்றி நடப்பதைப் பார்த்து தீபன் வியந்து போனார்.
ஆர்வத்தைக் கண்டறிந்தார்
“எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது. ஒழுங்குபடுத்துவது எனக்கு மிகவும் பிடிக்கும்,” என்று அவர் கூறினார்.
நடைமுறைப் பயனை நேரில் கண்டதால் தீபன் அது தொடர்பான ஏட்டுக்கல்வி கடினமாகவும் சில நேரங்களில் சலிப்புமிக்கதாகவும் இருந்தபோதும் பாடம் புரியும்வரை பல்லைக் கடித்துக்கொண்டு கற்றுக்கொண்டார்.
பாடங்களைப் புரிந்துகொள்வதற்கு ஒவ்வொரு மாணவரும் தங்களுக்கே உரிய உத்தியைப் பயன்படுத்துவது போல தீபனும் தனக்குப் பொருத்தமான கற்றல் உத்திகளை நாடிக் கற்கிறார்.
“சிலருக்கு எழுதினால்தான் மனப்பாடம் ஆகும். எனக்கு அதிகம் எழுதப் பிடிக்காது. வகுப்புகளில் நான் கேட்டலில் முழு கவனத்தைச் செலுத்துவேன். அதன் பின்னர் நான் கேட்டவற்றைப் பற்றி யோசிப்பேன். பாடநூலில் உள்ள சில விவரங்களை அடிக்கோடிடுவேன். எவை முக்கியமான விவரங்களோ அவற்றை மட்டும் மீண்டும் படிப்பேன்,” என்றார் தீபன்.
செயல்திறன், நேரச் சிக்கனம் போன்ற பண்புகளை நூல்கள் வாசித்துக் கற்றுக்கொண்டதாக தீபன் குறிப்பிட்டார். அத்துடன், தம் சிற்றப்பாவின் அறிவுரைகளை மதித்து நடப்பதாகவும் அவர் கூறினார்.
“பிறரின் குறைகூறல்களுக்குச் செவிசாய்க்காமல் நீங்கள் விரும்பியதை மேற்கொள்ளுங்கள். பட்டயக் கல்வியை முடிக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்தபோது அதில் மட்டுமே என் கவனம் இருந்தது. அதை நிறைவேற்றப் பாடுபட்டேன்,” என்று தீபன் இளையர்களுக்கு அறிவுறுத்த விரும்பினார்.

