தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தொழில்நுட்ப, வணிகத்திறன்களை இணைத்து, சாதிக்க விரும்பும் இளையர்

2 mins read
22e9ca60-8181-40b8-8437-24f2b3c0ca68
‘ஹேக்கத்தான்’ போட்டியில் உரையாற்றும் ராஜ்மோகன். - படம்: உள்துறைக் குழு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்

தாயார் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியைச் சார்ந்திருக்கும் நிலைமை ஏற்பட்டபோது ராஜ்மோகன் சிவேந்திராவின் உலகம் ஒரே இரவில் தலைகீழாக மாறியது.

தாயாருக்குப் பராமரிப்பாளராகவும் செயல்பட்டபோதும் கல்வியிலும் கவனம் செலுத்தி, நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் தரவு அறிவியல் பாடநெறியில், பட்டயப் படிப்பில் சிறந்த தேர்ச்சியைப் பெற்றுள்ளார்.

தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றும் தந்தை மட்டுமே வருமானம் ஈட்டுபவர். இல்லத்தரசியான தாயாரின் உடல்நிலை 2022ல் பாதிக்கப்பட்டபோது, ராஜ்மோகன் தாயாரையும் தனது தம்பியையும் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். வீட்டுச் செலவுகளைச் சமாளிக்க, தமது மாணவர் சேமிப்புத் தொகையையும் சில சமயங்களில் பயன்படுத்தியதாக அவர் கூறினார்.

“பலதுறைத் தொழிற்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துகொண்டிருந்தபோது என் அம்மாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அது என் குடும்பத்தினருக்கு மிகவும் சவாலான காலகட்டம். வீட்டில் உதவிக்கு யாரும் இல்லை. பள்ளியிலிருந்து வந்ததும் அம்மாவுக்கு மருந்தும் உணவும் கொடுத்து, தம்பியின் தேவைகளையும் கவனிக்க வேண்டும்,” என்று நினைவுகூர்ந்தார் 22 வயது ராஜ்மோகன்.

தொடக்கப்பள்ளியில் கணிதப் பாடத்தில் சிரமப்பட்ட ராஜ்மோகன், சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் (சிண்டா) துணைப்பாட வகுப்பு திட்டங்களின் வழியாக உதவி பெற்று, படிப்பில் முன்னேறினார்.

‘சிங்கப்பூர்-கேம்பிரிட்ஜ்’ பொதுக் கல்விச் சான்றிதழ் (சாதாரண நிலை) தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற ராஜ்மோகன், நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பட்டயப் படிப்பை மேற்கொண்டார்.

நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் தரவுத் அறிவியல் பாடநெறியில் சேர்ந்து, பட்டயப் படிப்பை இந்த ஆண்டு வெற்றிகரமாக ராஜ்மோகன் முடித்துள்ளார்.
நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் தரவுத் அறிவியல் பாடநெறியில் சேர்ந்து, பட்டயப் படிப்பை இந்த ஆண்டு வெற்றிகரமாக ராஜ்மோகன் முடித்துள்ளார். - படம்: ராஜ்மோகன் சிவேந்திரா

அப்படிப்பில், தொழில்நுட்பத்தையும் பகுப்பாய்வு சிந்தனையையும் இணைத்து, உண்மையான உலகப் பிரச்சினைகளுக்குத் தரவு அறிவியல் தீர்வுகளைக் கண்டறியும் விதம் அவர் ஆர்வத்தை பெரிதளவில் தூண்டியது.

தொழில்நுட்பத்தின் மீது உள்ள தனது ஆர்வத்தை மேலும் வளர்த்துக்கொள்ள விரும்பிய அவர், பல ‘ஹேக்கத்தான்’ போட்டிகளில் ஈடுபடத் தொடங்கினார்.

குறிப்பாக, ‘மேப்பல்ட்ரீ’ நிறுவனம் நடத்திய ‘ஹேக்கத்தான்’ போட்டியில், பார்வைத் திறன் குறைபாடுடையோர் சுதந்திரமாக நகர உதவும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ஒரு தீர்வை உருவாக்கி, அவரது குழு இரண்டாம் இடத்தைப் பெற்றது.

‘மேப்பல்ட்ரீ’ நிறுவனம் நடத்திய ‘ஹேக்கத்தான்’ போட்டியில் ராஜ்மோகனின் குழு இரண்டாம் இடத்தைப் பெற்றது.
‘மேப்பல்ட்ரீ’ நிறுவனம் நடத்திய ‘ஹேக்கத்தான்’ போட்டியில் ராஜ்மோகனின் குழு இரண்டாம் இடத்தைப் பெற்றது. - படம்: மேப்பல்ட்ரீ

சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வரும் ராஜ்மோகன், சிறப்புத் தேவையுடையோருக்கான தங்களின் சிறப்புக் கல்விப் பள்ளியில் மாணவர்களுக்கு இணையப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுத் திட்டங்களை வழிநடத்தியுள்ளார்.

“அந்த அனுபவங்களின்வழி தொழில்நுட்ப பயன்பாட்டில் அனுதாபமும் பொறுப்பும் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்தேன். பாதுகாப்பான மின்னிலக்க உலகை உருவாக்குவதில் அனைவருக்கும் பங்குண்டு,” என்றார் அவர்.

“தொழில்நுட்பம் என்பது மக்களுக்கு உதவ வேண்டும். மாறாக, வாழ்க்கையை மேலும் கடினமாக்கக் கூடாது. பயனர்களின் உண்மையான தேவைகளைப் புரிந்துகொண்டு, குறிப்பாக வசதிகுறைந்தோருக்கும் பின்தங்கியவர்களுக்கும் அதிகம் உதவும் வகையில் தீர்வுகளை வடிவமைக்க வேண்டும்,” என்றார் ராஜ்மோகன்.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கணினிப் பயன்பாடு, நிதித் துறையில் பட்டப்படிப்பை மேற்கொள்ளவுள்ள ராஜ்மோகனின் இலக்கு, தொழில்நுட்பத் திறன்களையும் வணிகத் திறன்களையும் இணைத்து, அர்த்தமுள்ள தீர்வுகளை எதிர்காலத்தில் உருவாக்க வேண்டும் என்பதே. அதேவேளையில், குடும்பத்துடன் மேலும் தரமான நேரத்தைச் செலவிடவும், அவர்களுடன் உலகைச் சுற்றிப் பயணிக்கவும் அவர் விரும்புகிறார்.

குறிப்புச் சொற்கள்