மாணவர்களுக்கான அறிவியல் திறன் புத்தாக்கப் போட்டி

மாணவர்களுக்கான அறிவியல் திறன் புத்தாக்கப் போட்டி

2 mins read
8ab4084f-13d4-4fa4-b332-109403ecf7f5
பிசிஎஃப் பாலர் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் சிங்கப்பூர்ப் புதுப்புனைவு மாநாட்டில் சான்றிதழ் பெற்றனர். - படம்: ஸ்டெமி அட்வான்டேஜஸ்
multi-img1 of 2

சிப்பியின் செவுள்களைப் போலச் செயல்பட்டு நதிநீரைச் சுத்திகரிக்கும் ‘மெத்தனோபோர்ட்’ வடிகட்டி. தட்டுகளில் மீதமாகும் உணவை ‘ஸ்கேன்’ செய்து புள்ளிகள் வழங்கும் ‘ஃபுட் வேஸ்ட் ஹீரோஸ்’ எனும் கைப்பேசிச் செயலி.

சமூகத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பயனளிக்கும் இதுபோன்ற புத்தாக்கங்கள் 2026ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூர்ப் புதுப்புனைவு மாநாட்டில் இடம்பெற்றன.

தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 27) நடைபெற்ற இந்த மாநாட்டிற்காக 200க்கும் மேற்பட்ட மாணவர்களின் கைகள் இணைந்தன.

உள்ளூர் மாணவர்கள் மட்டுமின்றி, இந்தோனீசியா, மக்காவ், பிலிப்பீன்ஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் இதில் பங்கேற்றனர்.

தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியும் ‘ஸ்டேமி அட்வான்டேஜஸ்’ நிறுவனமும் இணைந்து மாநாட்டிற்கு ஏற்பாடு செய்தன.

சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, சுகாதாரம், மின்னிலக்கத் தொழில்நுட்பம் ஆகியவற்றைச் சார்ந்த உலகளாவிய சவால்களுக்குத் தீர்வு காண்பதே மாணவர்களின் இலக்காக இருந்தது.

சமூக உள்ளடக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக, நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட ‘கிளப் ரெயின்போ’ அமைப்பைச் சேர்ந்த மாணவர்களும் இம்முறை முதன்முறையாகப் பங்கேற்றனர்.

பொது இடங்களில் சுகாதாரமான முறையில் குழந்தை அணையாடைகளை (டயப்பர்) அகற்றுவதற்கான ‘ஹைஜிபின்’ குப்பைத்தொட்டியை அவர்கள் வடிவமைத்திருந்தனர்.

உயர்நிலைப் பள்ளி மாணவர் குழுவினர் உருவாக்கிய ‘புராஜெக்ட் டுமாரோ’ என்னும் சிறப்புக் கருவி, பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் திரவ மருந்தைச் சரியாக அளக்க உதவியது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.

மாநாட்டின் விருது வழங்கும் நிகழ்ச்சியில், கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சுகளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் கோ ஹன்யான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

மாநாட்டில் உரையாற்றிய திருவாட்டி கோ, “நாளைய உலகை உருவாக்குவது ஒரே இரவில் நடந்துவிடாது. ஆர்வம், சோதனை, ஒத்துழைப்பு, விடாமுயற்சி ஆகியவற்றின்வழி இத்தகைய மாற்றம் சாத்தியமாகும் என்பதை இங்குள்ள மாணவர்களிடம் காண முடிகிறது,” என்றார்.

சிறந்த யோசனைகள் தனித்திருக்கும்போது உருவாவதில்லை எனக் கூறிய திருவாட்டி கோ, மற்றவர்களுடன் கலந்துரையாடி, கருத்துகளைப் பகிர்ந்து, இணைந்து செயல்படும்போது அவை பிறப்பதாகச் சொன்னார்.

“உலகின் எதிர்காலமாகத் திகழும் மாணவர்களுக்குத் தேவையான இத்தகைய வாய்ப்புகளையும் தளத்தையும் சிங்கப்பூர்ப் புதுப்புனைவு மாநாடு அமைத்துத் தருகிறது,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் கோ ஹான் யான் உரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் கோ ஹான் யான் உரையாற்றினார். - படம்: ஸ்டெமி அட்வான்டேஜஸ்

ஆண்டுதோறும் இம்மாநாட்டில் வெற்றிபெறும் சிறந்த மாணவர்களில் சிலர், 10 முதல் 19 வயதுக்குட்பட்ட கண்டுபிடிப்பாளர்களுக்கான ‘உலகளாவிய இளையர்ப் புதுப்புனைவு உச்சநிலை மாநாட்டில்’ சிங்கப்பூரைப் பிரதிநிதித்துப் பங்கேற்கத் தேர்ந்தெடுக்கப்படக்கூடும்.

இம்மாதிரியான சிறிய முன்னெடுப்புகளும் நாளை உலகை மாற்றும் வல்லமை பெற்றவை என்பதை இம்மாநாடு மெய்ப்பிப்பதாக மாநாட்டின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்