இளவயதிலிருந்தே செல்லப்பிராணிகளுடன் வளர்ந்தார் 22 வயதான மிகேலா இஷானி நாநாயாகாரா.
இரு கிளிகளை வளர்த்த அவர், அதன்வழி விலங்குகள்மீது அக்கறைகொள்ளத் தொடங்கினார்.
சிங்கப்பூரில் பலர் செல்லப்பிராணிகளை வளர்த்து வந்தாலும் அவர்களில் சிலர் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வதில்லை என்பது மிகேலாவின் கருத்து.
ஒருவர் செல்லப்பிராணியை வளர்க்க வேண்டும் என்று முடிவெடுத்தால் அவர் அதற்காகச் செலவிடத் தயாராக இருக்க வேண்டும் என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டுமென்று மிகேலா வலியுறுத்துகிறார்.
விலங்குகள்மீதான தமது பேரன்பை வெளிப்படுத்தும் வகையில் மிகேலா ‘லவ் குச்சிங் புராஜெக்ட்’ எனும் விலங்குநலக் காப்பகத்தில் தொண்டூழியராகச் சேர்ந்தார்.
அங்கு அவரது கவனம் பூனைகள்மீது திரும்பியது. பூனைகளுக்கு எவ்வகை உணவளிப்பது, எத்தகைய நோய்கள் அவற்றைத் தாக்கும் என்பன குறித்து அவர் கற்றுக்கொண்டார்.
கைவிடப்படும் செல்லப்பிராணிகளைப் பற்றியும் அங்குதான் அவர் அறிந்துகொண்டார்.
செல்லப்பிராணி வளர்ப்பு மற்றும் பிராணிகள் கைவிடப்படுவது பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ளத் தொடங்கிய அவர், சிங்கப்பூரில் அதனை நெறிப்படுத்தும் சட்டங்களையும் தெரிந்துகொள்ள முனைந்தார்.
தொடர்புடைய செய்திகள்
தற்போது தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு விலங்குநல மருத்துவத் தொழில்நுட்பத்தில் பட்டயப் படிப்பு பயிலும் மிகேலா, முதலாண்டில் கால்நடை, வனவிலங்குப் பாதுகாப்பு ஆர்வலர் குழுவின் முதன்மைக் குழு உறுப்பினராக இருந்தார்.
அதில் அவர் வனவிலங்குப் பாதுகாப்பு, பொறுப்பான செல்லப்பிராணி பராமரிப்பு, விலங்குநலம் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க உதவினார்.
விலங்குநலத்தில் பெருநாட்டம் கொண்டுள்ள மிகேலா, வருங்காலத்தில் கால்நடை மருத்துவ உதவியாளராகப் பணிபுரிய விரும்புகிறார்.
பல நாடுகளுக்கும் சென்று பணி அனுபவம் பெற விரும்பும் மிகேலாவிற்கு அண்மையில் தேசியப் பூங்காக் கழகத்தின் பீட்டர் லிம் உபகாரச் சம்பளம் கிடைத்தது.
சுற்றுச்சூழல், தோட்டக்கலை, விலங்குநல மருத்துவம், விலங்கியல் போன்ற துறைகளில் திறம்படச் செயல்பட விரும்பும் மாணவர்களை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது இந்த உபகாரச் சம்பளம்.
அதன்கீழ் முதன்முறையாக திறன் அடிப்படையிலான புதிய உபகாரச் சம்பள விருது 27 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அவர்களில் ஒருவர் மிகேலா.
இந்த உபகாரச் சம்பளம் தமது குடும்பத்தின் நிதிச் சுமையை தீர்க்க உதவும் எனக் குறிப்பிட்ட மிகேலா, இளவயதிலிருந்தே நிதி நெருக்கடிக்கு ஆளாகியவர்.
பெற்றோர் இருவரின் சம்பளமும் போதாமல் இருந்த சூழ்நிலையைக் கடந்துவந்த அவர், பள்ளிப் பருவத்தில் ஒரு கட்டத்தில் கல்வியில் கவனம் செலுத்த நாட்டமின்றிப் போனார்.
உயர்நிலைப் பள்ளிக்குப் பிறகு பலதுறைத் தொழிற்கல்லூரியில் பயிலத் தொடங்கியதும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டுமென்ற உந்துதல் அவருக்கு ஏற்பட்டது.
“எப்போதும் நிதிச் சவால்கள் இருக்கத்தான் செய்யும். அவற்றை நினைத்து மனமுடைந்து போவதற்குப் பதிலாக, நான் முழுக் கவனத்தையும் கல்வியில் மட்டுமே செலுத்தி வருகிறேன்,” என்றார் மிகேலா.
தம்மைப்போல நிதி நெருக்கடியுள்ள சூழலில் வளரும் இளையர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ விரும்பும் மிகேலா, துவண்டுபோகாமல் கனவை நனவாக்க தொடர்ந்து முயல வேண்டும் என்கிறார்.

