தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வட்டாரத் தொழில்துறை கட்டமைப்பு மாநாடு 2025

2 mins read
54939379-0f77-4810-afe6-8f6210d19d2e
வட்டாரத் தொழில்துறை கட்டமைப்பு மாநாடு 2025. - படம்: சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரி

விமானியாகும் இலக்கைக்கொண்ட செல்வகுமார் லோகே‌ஷ், சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியின் விமான மின்னணுவியல் துறையில் படிக்கிறார்.

தேசிய சேவை, பொறியியல் பல்கலைக்கழகப் படிப்பை முடித்தபின் விமானியாக விரும்பும் அவருக்கு சென்ற மாதம் நடைபெற்ற ஒரு மாநாடு அத்துறை குறித்த அவரது அறிதலை மேலும் வளர்த்துக்கொள்ள உதவியது.

சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியும் ‘ஆட்டோமே‌‌ஷன்எஸ்ஜி’யும், இணைந்து வட்டாரத் தொழில்துறை தொடர்புக் கட்டமைப்பு மாநாட்டை ஜூலை 30ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்தன. மாநாட்டின் சிறப்பு விருந்தினராக வர்த்தக, தொழில்; தேசிய வளர்ச்சித் துணையமைச்சர் ஆல்வின் டான் பங்கேற்றார்.

“மாநாட்டில் பல நிறுவனங்கள் பங்கேற்றன. பல உரைகளும் கலந்துரையாடல்களும் இடம்பெற்றன. தற்போதைய ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவுத் துறையின் வளர்ச்சி பற்றி பலவற்றையும் தெரிந்துகொண்டேன். எதிர்காலத்துக்கான பல புதிய யோசனைகளையும் மாநாடு முன்வைத்தது. அவற்றை என்னாலும் என் துறையில் பயன்படுத்த முடியும்,” என்றார் லோகே‌ஷ்.

“மாநாட்டில் விமானிகளிடம் பேச இயலாவிட்டாலும், விமானத்தின் மூளையாக இயங்கும் பகுதி மின்கடத்திப் பொறிகளின் உற்பத்தி குறித்து என்னால் அறிந்துகொள்ள முடிந்தது. தானியக்கமுறை உற்பத்தி அதிகரிக்கிறது என்பதையும் கற்றுக்கொண்டேன்,” என்றார் அவர்.

தன் சக மாணவர்களுடன் லோகே‌ஷ் (பின்வரிசை, இடமிருந்து மூன்றாவது).
தன் சக மாணவர்களுடன் லோகே‌ஷ் (பின்வரிசை, இடமிருந்து மூன்றாவது). - படம்: சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரி

தம் இறுதியாண்டு வேலைப்பயிற்சியில் அவர் ‘சேட்ஸ்’ நிறுவனத்தில் விமானக் கட்டுப்பாட்டாளராக வேலைப்பயிற்சிப் பெறவுள்ளார்.

லோகேஷ் பேசிய தொழில்துறை நிபுணர் ஒருவர், “வாழ்வில் எதைச் சாதிக்க விரும்பினாலும் தேவைப்படுவது சரியான மனப்பான்மை - தெளிவான இலக்கு, அந்த இலக்கை அடைவதற்கான திறன்கள் போன்றவை,” எனக் கூறியது அவரது மனத்தில் பதிந்ததுள்ளது.

பெரும்பாலும் தென்கிழக்காசிய நாடுகள் மாநாட்டில் பங்கேற்றதாகக் கூறிய லோகே‌ஷ், ஜோகூர் - சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் வட்டாரம் பற்றியும் மாநாட்டில் அறிந்துகொண்டதாகச் சொன்னார்.

“சிறப்புப் பொருளியல் வட்டாரத்தால் வணிகத்துறை மேலும் பயனடையும். பகுதி மின்கடத்திகள் அனைத்திலும் பயன்படுத்தப்படுகின்றன. அந்த முயற்சியால் எதிர்காலத்தில் பகுதி மின்கடத்திகளின் விலை குறையும். அவற்றைக் கூடுதலாகச் சிங்கப்பூரில் பெறலாம்,” என்றார் லோகே‌ஷ்.

“ஸ்கேன்டியம் எனும் மூலப்பொருள் பற்றியும் தெரிந்துகொண்டேன்,” என்றார் லோகே‌ஷ்.

நிகழ்ச்சியில் சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரி புதிய ‘தள ஆதரவு பங்காளித்துவத்தை (Enabling Platform Partnership) அறிமுகப்படுத்தியது. அது ஜோகூர்-சிங்கப்பூர் பொருளியல் வட்டாரத்தில் நுழையவுள்ள சிங்கப்பூர் சார்ந்த வணிகங்களுக்குத் துணைபுரியும்.

அந்தப் பங்காளித்துவம் சிங்கப்பூர், மலேசியாவில் உயர்கல்விக் கழகங்கள், வணிகச் சங்கங்கள், அமைப்புகளை இணைக்கும். மனிதவளம், திறன் மேம்பாடு, தொழில்நுட்பம் போன்ற அங்கங்களில் மேம்பாடுகள் கொண்டுவரும்.

அந்தப் பங்காளித்துவம் மூலம் ஏப்ரல் 7 முதல் 11ஆம் தேதி வரை நடைபெற்ற சஸ்ட்ஹேக் முகாம், ஹேக்கத்தான் எனும் ஐந்து நாள் நிகழ்ச்சியில் 20 சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்கள் மலேசியாவின் சன்வே பல்கலைக்கழகத்துடன் இணைந்து நீடித்த நிலைத்தன்மை தொடர்பான சவால்களுக்குத் தொழில்நுட்பத் தீர்வுகளைக் கண்டறிந்தனர்.

குறிப்புச் சொற்கள்