அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என அனைவரும் விரும்புவது இயல்புதான்.
ஆயினும், அந்த ஆசை மிகையாகும்போது அதுவே ஆபத்தாகிறது. சுற்றியிருப்போரின் வீண்சொற்கள் மட்டுமன்றி, சமூக ஊடகங்களும் இளையரிடையே உடல் தோற்றத்தைப் பற்றிய தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தி, கவலையில் ஆழ்த்துகின்றன.
இந்தப் பாதிப்பு பரவலாக உள்ளது. 2024ல் வெளிவந்த தேசிய இளையர் மனநல ஆய்வில், 15 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்டோரில் ஐவரில் ஒருவர்க்குத் தனது உடலைப் பற்றி நீடித்த கவலை இருப்பது தெரியவந்துள்ளது. ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு இந்தக் கவலை அதிமாக இருப்பதாகக் கூறும் ஆய்வு, அந்தப் பெண்களிடையே மற்ற இனத்தவரைக் காட்டிலும் இந்தியப் பெண்களுக்கு அதிகமாக இருப்பதாகவும் குறிப்பிடுகிறது.
உடற்பருமன், சிறுவயது மனக்காயம் போன்றவையும் பிற்காலத்தில் உடல் தோற்றம் தொடர்பான மிகுந்த மனக்குறைக்கு வித்திடுவதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பான தனிப்பட்ட அனுபங்கள் சிலவற்றை இளம்பெண்கள் மூவர், இளைய தலைமுறை வலையொளியில் பகிர்ந்து[Ϟ]கொண்டனர்.
சிறுவயது அனுபவங்களும் தன்னம்பிக்கைப் பயணமும்
“சிறுவயதில் என்னைச் சுற்றியிருந்தவர்களைவிட நான் சற்றுப் பருமனாக இருந்தது எனக்குப் பிடிக்காமல் இருந்தது. எனக்குள் தன்னம்பிக்கையை வளர்க்கப் போராடினேன்,” என்று கூறினார் 25 வயது பிரீத்திக்கா பாலசுப்பரமணியன். அவர் எட்டு வயதிலேயே அச்சவாலை எதிர்கொண்டதாகக் குறிப்பிட்டார்.
19 வயது ரிக்தா ஜெனி, தனது தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளிக் காலத்தில் தங்கையுடன் ஒப்பிடப்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.
“என் தங்கை மெலிந்திருப்பதால், என் உடல் எடையை எப்படியாவது குறைக்கும்படி உறவினர்கள் என் பெற்றோரிடம் கூறுவர். இது என் மனத்தைப் பெரிதும் காயப்படுத்தியது. பின்னர் உயர்நிலைப் பள்ளியில் மற்றத் தோழிகள் ஒல்லியாக, உயரமாக மாறிய நிலையில் எனது உடல்வாகு மாறாமல் இருந்தது,” என்று ஜெனி கூறினார்.
“தாழ்வு மனப்பான்மை என்னை நெடுநாள் வாட்டியது. பலதுறைத் தொழிற்கல்லூரியில் நுழைந்த பிறகுதான் உலகம் பற்றிய பார்வை விரிவடையத் தொடங்கியது. தன்னம்பிக்கையும் மெல்லக் கூடியது,” என்றார் ரிக்தா.
‘ஃபில்டர்’ பயன்பாடு
16 முதல் 17 வயது வரை சமூக ஊடகங்களின் தாக்கம் ஏற்படும்வரை எந்தவித நெருக்குதலும் இன்றி மகிழ்ச்சியாக இருந்ததாகத் தெரிவித்தார் லாவண்யா சுப்ரமணியன், 20.
சமூக ஊடகப் பயன்பாடு தொடங்கிய பிறகே தனது தோற்றம் குறித்த கவலைகள் எழுந்ததாக அவர் குறிப்பிட்டார். சமூக ஊடகங்களில் உள்ள ‘ஃபில்டர்’ அம்சங்கள் எவ்வாறு மக்களின் உண்மையான தோற்றத்தை மறைத்துப் போலி பிம்பத்தை உருவாக்குகிறது என்பதையும் அவர் விவரித்தார்.
“தொடக்கத்தில் இன்ஸ்டகிராம், ஸ்னாப்சேட் போன்ற தளங்களில் பொழுதுபோக்கிற்காக ஃபில்டர்களைப் பயன்படுத்தினேன். ஒரு கட்டத்தில் ஃபில்டர் இல்லாமல் படம் எடுக்கவே அச்சமாக இருந்தது. கண்ணாடியைப் பார்க்கும்போது நன்றாகத் தெரிந்த முகம், கேமராவில் பார்க்கும்போது மனநிறைவு அளிக்கவில்லை. இதனால் டிக்டாக், ஸ்னாப்சேட் செயலிகளை நீக்கிவிட்டு ஃபில்டர் இல்லாத உண்மையான தோற்றத்தை ஏற்றுக்கொள்ள எனக்கு மூன்று ஆண்டுகளாயின,” என்றார்.
“எடைக் குறைப்பு, உணவுமுறை தொடர்பான பதிவுகளை நாம் அதிகம் பார்த்தால், இன்ஸ்டகிராம் நமக்கு அதையே காட்டி மன உளைச்சலை அதிகப்படுத்தும். உடல்வாகு குறித்த பல்வேறு நேர்மறைக் கருத்துகளைப் பகிரும் படைப்பாளர்களைப் பின்தொடர்வதால் நன்மைகள் விளையும்,” என்றார் பிரீத்திக்கா.
சமூக ஊடகங்களில் ஆரோக்கியமற்ற உணவுமுறைக் காணொளிகளைப் பார்த்துவந்த ரிக்தா, உணவை முற்றிலுமாகத் தவிர்த்ததால் பள்ளி ஓட்டப்பந்தயத்தின்போது மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவத்தைப் பகிர்ந்துகொண்டார்.
“அதன்பிறகுதான் போலித்தனமான உணவுமுறைகளில் இருந்து மீண்டு, என் தங்கைகளுக்கு நல்ல முன்மாதிரியாக வாழ வேண்டும் என்று முடிவெடுத்தேன்,” என்றார் அவர்.
தலைமுறை இடைவெளியும் சமூகத்தின் கருத்துகளும்
முந்தைய தலைமுறையினர்க்கும் தற்போதைய தலைமுறையினர்க்கும் இடையே உள்ள நெருக்கடிகளை மூவரும் ஒப்பிட்டனர்.
முந்தைய தலைமுறையில் ஒருவர் அழகாக இருக்கிறாரா இல்லையா என்ற பொதுவான பார்வை மட்டுமே இருந்ததாகக் குறிப்பிட்ட பிரீத்திக்கா, இன்று உடலின் ஒவ்வொரு பாகத்திற்கும் ஒவ்வொரு பெயர் வைத்து, நுணுக்கமாகக் குற்றம் கண்டுபிடிக்கும் சொற்கள் இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக் தளங்களில் பெருகிவிட்டதாகக் கூறுகிறார்.
“நம் பெற்றோர் காலத்தில் திரைப்பட நடிகர்களை மட்டுமே அழகாகப் பார்த்தனர். இன்று நம்மைச் சுற்றியுள்ள இன்ஸ்டகிராம் புகழாளர்கள், நண்பர்கள் என அனைவரும் உடற்பயிற்சிக் கூடம், உணவுமுறை எனப் பதிவிடுவதால், நமக்குள் நாமே தேவையில்லாத நெருக்கடியை ஏற்படுத்திக் கொள்கிறோம்,” என்று லாவண்யா கூறினார்.
உறவினர்களின் கருத்துகள் குறித்து பிரீத்திக்கா கூறுகையில், “அன்பின் வெளிப்பாடாகவோ அக்கறையினாலோ சொல்லப்பட்டாலும் பிறருடைய எடையைப் பற்றித் தேவையில்லாமல் பேசுவது சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, பிறர் கேட்காதவரை அவர்களின் எடையைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்காமல் இருப்பதே சிறந்தது,” என்றார் அவர்.
வாழ்க்கை கற்றுத்தரும் பாடம்
வெளித்தோற்றத்தைப் பற்றிய மிதமிஞ்சிய கவலையால் மன நிம்மதி குறைவதுடன் பலவித ஆபத்துகள் ஏற்படுவதால் அது முற்றிலும் அகற்றப்பட வேண்டும் என்பது இந்த இளையர்கள் மூவரின் பொதுவான கருத்து.
16 வயதிற்குட்பட்ட இளையர் சமூக ஊடகப் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று சக இளையர்களைக் கேட்டுக்கொள்கிறார் பிரீத்திக்கா. உண்மைத்தன்மைதான் வாழ்வின் அத்தனை நல்ல அனுபவங்களுக்கும் அடித்தளம் என்பதை அறியும் மனப்பக்குவம், இளையர்க்கு மிகப் பெரிய வலிமை என்பதையும் அவர் உணர்ந்துள்ளார்.
உடற்பயிற்சிக் கூடத்திற்குச் செல்பவர்கள் வெளிப்புறத் தோற்றத்திற்காக அன்றி, உடல்நலன்மீது கவனம் செலுத்தி பயிற்சி செய்ய வேண்டும் என்று லாவண்யா வலியுறுத்தினார்.
“ஒவ்வொருவரின் உடல் அமைப்பும் நலமும் வேறுபட்டவை. நாம் பிறருக்காக நமது உடலை மாற்ற முடியாது. காலப்போக்கில் உடல் தோற்றத்தைவிட, நாம் எப்படியிருக்கிறோமோ அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனப்போக்கே மிக முக்கியம்,” என்றும் அவர் அறிவுறுத்தினார்.
