தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இளையரிடம் பிரபலமாகி வரும் மறுபயனீட்டு உடைகள்

3 mins read
bd09b56f-e1ca-4424-9d60-b9ad258a38c4
பிடோக் கடைத்தொகுதியில் அமைந்துள்ள பிரபல பயன்படுத்திய உடைகளை விற்பனை செய்யும் கடை ‘ரீஃபா‌ஷ்’. - படம்: சாவ் பாவ்

மற்றவர் உடுத்திய உடையை வாங்கி அணிவது தரக்குறைவானது என்ற மனப்போக்கு தற்போது மாறி வருகிறது.

சிக்கனக் கடை ‘த்ரெடப்’ அண்மையில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் 2023இல் அனைத்துலக அளவில் 65% இளையர்கள் சிக்கன விலையில் பயன்படுத்திய உடைகளையே விரும்பி வாங்கியதாகத் தெரிவித்தது.

பயன்படுத்திய உடை விற்பனை, ஆடை சில்லறை விற்பனைத் துறையைவிட (retail clothing sector) 15 மடங்கு வேகமாக வளர்ந்துள்ளது என்றும் அது தெரிவித்துள்ளது.

மறுவிற்பனை செய்யப்படும் பழைய பொருள்களை, குறிப்பாக ஆடைகளை மலி­வு­வி­லையில் வாங்கும் இந்தப் பழக்‌கம் ‘த்ரிபிட்டிங்’ என்று அழைக்‌கப்படுகிறது.

அண்மைய ஆண்டுகளில் சிங்கப்பூரிலும் பிரபலமாகி வருகிறது இந்த ‘த்ரிபிட்டிங்’ பழக்‌கம். தொடக்கத்தில் தேவைக்காக துணி வாங்கத் தொடங்கிய 23 வயது சுஜா குணசேகரன், கடந்த நான்கு ஆண்டுகளாக விரும்பி வாங்கி வருகிறார். சமூக ஊடகப் பிரபலங்கள் ஏற்படுத்திய தாக்கத்தால் பயன்படுத்திய ஆடைகளை வாங்கத் தொடங்கிய 23 வயது சுஜா குணசேகரன், இது சிக்கனமானது என்பதுடன் சுற்றுச்சூழலின் நிலைத்தன்மைக்‌கும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை உணரத் தொடங்கினார் தன்னுடைய அம்மாவையும் வயதான உறவினர்களைப்போல மறுபயனீட்டு ஆடைகள் வாங்குவதை தரக்குறைவானதாக தான் ஒருபோதும் கருதியதில்லை என்றார். “பண்டிகைகளின்போது புதிய உடைகளையே வாங்கி அணியும் பழக்கம் என் குடும்பத்தில் இருப்பதால் மறுபயனீட்டு உடைகளை வாங்கி அணிவதை குடும்பத்தினர் விரும்புவதில்லை. அத்துடன், பழைய உடைகளை வாங்குவது புதிய உடைகளை வாங்கும் அளவிற்கு நிதி வசதி இல்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் என அவர்கள் நினைக்கிறார்கள் என்பதே உண்மை. “இந்த எண்ணத்தைக்‌ களைய, மறுபயனீட்டினால் ஏற்படும் நன்மைகளை எடுத்துக்கூறி அம்மாவை மெதுவாக இதில் ஈடுபடுத்த முயற்சி செய்து வருகிறேன்,” என்றார் அவர். இது இப்போது வேடிக்கையான பொழுதுபோக்காகவும் மாறிவிட்டதாகக் கூறினார் சுஜா. “மலை போலக் குவிந்து கிடக்கும் உடைகளில் எனக்கான அந்த ஓர் உடையைத் தேடி கண்டுபிடித்து வாங்குவது மகிழ்ச்சியாகவும் மனநிறைவாகவும் இருக்கிறது,” என்றார் அவர்.

மறுபயனீடு பிரபலமாகி வந்தாலும் சில சவால்களையும் சந்தித்து வருகிறது.

தேவை அதிகமானதால் ‘ரீபா‌ஷ்’ போன்ற மறுபயனீட்டு உடைகளை விற்பனை செய்யும் கடைகளில் விலை அதிகரித்திருப்பதுடன் பெரிய அளவு உடைகள் கிடைப்பதும் சிரமமாக இருக்கிறது என்றார் சுஜா. சமூக ஊடகங்கள் ஏற்படுத்திய தாக்கத்தால் ஈராண்டுகளுக்கு முன்னர் மறுபயனீட்டு உடைகளை வாங்கத் தொடங்கிய 23 வயது ‌சுந்த­ரம் மோகன் ‌‌ஷக்தி, அந்த உடைகளின் தனித்துவத்தைப் பெரிதும் பாராட்டுகிறார்.

“இந்தக்‌ கடைகளில் கிடைக்கும் உடைகள் பெரிய அளவில் தயாரிக்கப்படும் புதிய உடைகளைவிட தனித்துவம் மிக்கதாக இருப்பதால், தேவைக்கேற்ப பலதரப்பட்ட ஆடைகளைக்‌ குறைந்த விலையில் வாங்கி அணிந்து பார்க்கமுடிகிறது,” என்றார் அவர்.

இது மறுபயனீட்டை ஆதரிப்பதுடன் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையைப் பாதுகாப்பதற்கும் வழிவகுக்கிறது என்று ‌‌ஷக்தி கருதுகிறார்.

“இளையர்கள் பயன்படுத்தப்பட்ட உடைகளை வாங்கி விற்பதோடு, நல்ல நிலையில் உள்ள தங்களுடைய பழைய உடைகளைக்‌ கடைகளுக்கு நன்கொடையாகவும் கொடுக்கின்றனர்,” என்றார் அவர். நல்ல நிலையில் உள்ள உடைகளைத் தூக்கி எறிந்து, குப்பையை அதிகரிப்பதை இதன்மூலம் தடுக்க முடிகிறது. மேலும், அவற்றை விற்பதன்வழி சிறு பணத்தையும் சம்பாதிக்க முடிகிறது என்று ‌‌ஷக்தி கூறினார்.

குறிப்புச் சொற்கள்