படித்து முடித்த பிறகும் வாழ்க்கையைச் சீராக வடிவமைத்து வாழ்க்கைக் குறிக்கோளை எட்டிப் பிடிக்க ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி 2025ஆம் ஆண்டு முதல் ‘டிசைனிங் யுவர் லைஃப்’ (Designing Your Life) எனும் புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.
இதுகுறித்து கல்வி மேம்பாட்டு நிலைய இயக்குநர் முனைவர் கிரிஜா வீரப்பன் விளக்கமளித்தார்.
வெற்றியைக் கண்டறிதல்
“வேலைக்குச் செல்வது ஒருவருக்கு வெற்றியாகப் பொருள்படலாம். வேறொருவரின் வெற்றி சமூகச் சேவை செய்வதாக இருக்கலாம், மற்றொருவருக்கு அது மேற்கல்வி பயில்வதாக இருக்கலாம். மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து வெற்றியை நிர்ணயிக்காமல் தன்னால் என்ன செய்ய முடியும் என்பதை வாழ்க்கைக் குறிக்கோளாக்க மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
“இவற்றிற்குச் செயல்வடிவம் அளிக்கும் வகையில்தான், இப்புதிய பாடத்திட்டத்தை வகுத்துள்ளோம்,” என்று குறிப்பிட்டார் முனைவர் கிரிஜா.
தொடர்ந்து பேசிய அவர், வாழ்க்கை என்பது தீர்க்க வேண்டிய சிக்கலன்று, அது தொடர்ந்து வாழ வேண்டியது என்றார். அதைத் தாங்களே வடிவமைக்க முடியும் என்பதை மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் புதிய பாடத்திட்டத்தின் அங்கங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பலத்தை அறிந்துகொள்ளுதல்
“இதைவிட இன்னும் மேம்பட்ட நிலையில் இருப்பேன்,” என்பதை அடிப்படையாகக் கொண்டுள்ள பாடத்திட்டத்தில் மாணவர்கள் தங்களின் பலம் என்ன, சவால்கள் என்னென்ன என்பதைப் புரிந்து அதற்கேற்ற வகையில் செயல்பட இயலும்.
“படிப்பை முடித்தபிறகு ஆறு மாதம் கழித்து மாணவர்களுக்கான புத்தாக்கப் பயிலரங்குகள் நடத்தப்படும். தங்கள் வாழ்க்கைக்கான பாதையைத் தெரிவுசெய்துவிட்டார்களா? மாணவர்களுக்கு அது மனநிறைவை அளித்துள்ளதா? அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்காமல் உள்ளனரா? என்பதை அறிந்து அதற்கேற்ற மதியுரைகளையும் இந்தப் பாடத்திட்டம் வழங்குகிறது.
திறனாளர்களாக உருவெடுத்தல்
படித்து முடித்து எட்டு முதல் 15 மாதங்களுக்குப் பிறகு, அவர்கள் தங்களது முதல் வேலையைப் பெற்றவுடன் வேறு ஏதும் புதிய இலக்கு கொண்டுள்ளனரா என்பது குறித்தும் அறியும் வகையில், கலந்துரையாடல் நடத்தப்படும் என்றார் முனைவர் கிரிஜா.
தொடர்புடைய செய்திகள்
தங்களது முதல் வேலைக்கு மாணவர்களை ஆயத்தப்படுத்துவது மட்டுமல்லாமல், அவர்கள் வாழ்க்கைக்கான வளர்ச்சிப் பயணத்தை வெற்றிமிக்கதாய் மாற்றிடச் செய்யும் இந்தப் புதிய பாடத்திட்டம் மாணவர்களை ஆற்றல்மிகு திறனாளர்களாக மாற்றும் என்றும் அவர் கூறினார்.
பதின்ம வயதினர் எதிர்கொள்ளும் சவால்களைப் பொறுத்தமட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பாடத்திட்டம் சிறந்த வாய்ப்பு என்று கூறினார் மாணவி மணிஷா சரவணன். இவர் தற்போது பலதுறைத் தொழிற்கல்லூரி அடிப்படைப் பாடத்திட்ட மாணவராக பயின்று வருகிறார்.
“படிப்பை முடித்தவுடன் வாழ்க்கையின் அடுத்தகட்டத்தில் எவ்வாறு செயல்படுவது என்ற உறுதி பலருக்கு இல்லாதிருக்கலாம். இந்தப் புதிய பாடத்திட்டத்தில் இருக்கும் மதியுரை வழிகாட்டிகள் மூலமாக நான் படித்து முடித்தபிறகும் இரண்டு ஆண்டுகளுக்கு வழிகாட்டுதல் கிடைக்கவிருப்பது பயனுள்ளதாக இருக்கும்,” என்றார் அவர்.
தன்னம்பிக்கை மேம்படுதல்
படித்து முடித்தவுடன் எல்லோருக்கும் உடனடியாக வேலை கிடைத்திடும் என்று சொல்ல முடியாது. அப்படிப்பட்ட நிலையில் இருக்கும் இளையர்கள், அடுத்தது என்ன என்பது குறித்து ஆலோசனை பெற இந்தப் பாடத்திட்டம் உதவியாக இருக்கும் என்று தாம் கருதுவதாகச் சொன்னார் மாணவி வர்ஷினி அன்பழகன்.
தம்மைப் போன்ற இளையர்கள் ஒரு மேம்பட்ட நிலையை அடையும்போது அவர்களிடத்தில் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் மேலும் சிறப்பாகச் செயலாற்றவும் இயலும் என்று குறிப்பிட்டார் வர்ஷினி.


