தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எதிர்காலத்துக்குத் திட்டமிட உதவிய ‘சாதனா 2025’

2 mins read
550ed3a6-8064-4ea1-86be-40b58a576ee2
‘சாதனா 2025’ நிகழ்ச்சியின் முதல் நாளன்று பங்கேற்ற இளையர்கள். - படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை

‘ஏ’ நிலைத் தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ள நேரத்தில் மாணவர்கள் பலருக்கும் எந்தப் பல்கலைக்கழகத்தில் மேற்கல்வியைத் தொடர்வது என்பது குறித்த கேள்வி இருக்கக்கூடும்.

இதுகுறித்துச் சிந்திக்க மாணவர்களுக்கு உதவும் வகையில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத் (என்யுஎஸ்) தமிழ்ப் பேரவை, பிப்ரவரி 8, 9ஆம் தேதிகளில் ‘சாதனா 2025’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

என்யுஎஸ் வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஆண்டுதோறும் சிண்டா இளையர் மன்றமும் இணைந்து ஏற்பாடு செய்துவருகிறது. இந்த ஆண்டு முதன்முறையாகச் சிங்கைத் தமிழ்ச் சங்கமும் ‘சாதனா’ ஏற்பாட்டுக் குழுவில் இணைந்தது.

தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்குத் துணைப்பாட வகுப்புகளை வழங்கும் நோக்கத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிய ‘சாதனா’, பல்கலைக்கழக வாழ்வை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் இரண்டு நாள் நிகழ்ச்சியாக பின்னர் உருமாறியது.

இம்முறை புதிய அம்சமாக ‘சாதனா’வின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி, உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக வழங்கப்பட்டது.

“உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடிப்பதற்கு முன்பே எந்த பலதுறைத் தொழிற்கல்லூரி, தொழில்நுட்பக் கல்விக் கழகம் அல்லது தொடக்கக் கல்லூரிக்குச் செல்வது என்பது குறித்து மாணவர்கள் திட்டமிடுவதற்கு இது உதவியது.

“பிடித்த கல்லூரி அல்லது பாடத்திட்டத்தில் இடம் கிடைக்காவிட்டாலும் மாணவர்கள் எவ்வாறு மற்ற வழிகளில் தங்கள் லட்சியங்களை அடையலாம் என்பது குறித்தும் நாங்கள் ஆலோசனை வழங்கினோம்,” என்றார் ஏற்பாட்டுக் குழு உறுப்பினர் கண்ணன் வை‌ஷ்ணவி, 20.

இரண்டாம் நாளன்று, சிண்டா இளையர் மன்றம் ‘மனித நூலகம்’ அங்கத்தை வழங்கியது. வெவ்வேறு துறைகளைச் சார்ந்தவர்களுடன் பேசி, தமக்கென இலக்குகளை உருவாக்கிக்கொள்ள மாணவர்களுக்கு அது வாய்ப்பாக அமைந்தது; தொடக்கக் கல்லூரியே தலைசிறந்தது என்ற எண்ணப்போக்கையும் தகர்க்க அது உதவியது.

முதல் நாளன்று, மாணவர்கள் முன்கூட்டியே தமக்குப் பிடித்ததாகக் குறிப்பிட்டிருந்த மூன்று இளநிலைப் படிப்புகளிலிருந்து இரண்டு தேர்ந்தெடுக்கப்பட்டு, அவற்றைச் சார்ந்த பள்ளிகளில் சுற்றுலாக்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

“என்யுஎஸ் விண்ணப்ப முறைகள், கல்வித்திட்டங்கள் பற்றியும் மாணவர்கள் தெரிந்துகொண்டனர்,” என்றார் ஏற்பாட்டுக் குழு உறுப்பினர் சரவணன் சந்தோஷ், 21.

சிங்கைத் தமிழ்ச் சங்க இளையர் பிரிவின் பொதுச் செயலாளர் தயாநிதி செல்வராஜு, 21, அதன் விளம்பரப் பிரிவின் தினே‌ஷ் பிரபா, 19, இருவரும் நேர்முகத் தேர்வுகளில் சிறப்பாகச் செய்வது, தன்னம்பிக்கையை வளர்ப்பது போன்றவை பற்றி விளையாட்டு, உரை மூலம் மாணவர்களுக்குச் சொல்லித் தந்தனர்.

பள்ளி, வேலையில் உதவும் திறன்களை மாணவர்கள் கற்றுக்கொண்டனர்.
பள்ளி, வேலையில் உதவும் திறன்களை மாணவர்கள் கற்றுக்கொண்டனர். - படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை

“நான் பலதுறைத் தொழிற்கல்லூரியில் படித்தது அறிவியல். ஆனால், பல்கலைக்கழகத்தில் படிக்கவுள்ளது கணினி அறிவியல். அது எப்படி இருக்குமோ என சிந்தித்துக்கொண்டிருந்தேன். என் வினாக்களுக்கு விடைகாண இந்நிகழ்ச்சி உதவியது,” என்றார் ரெங்க பாலாஜி, 21.

“தொடக்கக் கல்லூரியில் கணினி அறிவியல் எடுப்பதா என்ற குழப்பம் இருந்தது. இணையப் பாடங்கள்வழி தனிப்பட்ட முறையில் கற்கலாம் எனத் தெரிந்துகொண்டேன்,” என்றார் பிரவீன், 17.

தமக்குப் பிடித்த கல்லூரியில், பாடத்திட்டத்தில் இடம் கிடைக்காவிட்டாலும் எவ்வாறு மற்ற வழிகளில் தங்கள் லட்சியங்களை அடையலாம் என்பது குறித்தும் ஆலோசனை வழங்கினோம்.
ஏற்பாட்டுக் குழு உறுப்பினர் கண்ணன் வை‌‌‌ஷ்ணவி, 20

“சென்ற ஆண்டு கூடுதலான விளையாட்டுகள் இடம்பெற்றன. இந்த ஆண்டு பல்கலைக்கழகம் சார்ந்த நிகழ்ச்சிகள் ஒரு நாள் எனச் சுருக்கப்பட்டதால் கல்வியின்மேல் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது,” என்றார் சென்ற ஆண்டும் ‘சாதனா’ நிகழ்ச்சிக்கு வந்திருந்த வசந்த்.

பிறரிடமிருந்து வாழ்க்கைத் திறன்களைக் கற்றுக்கொள்ள வாய்ப்பாக ‘சாதனா 2025’ அமைந்தது.
பிறரிடமிருந்து வாழ்க்கைத் திறன்களைக் கற்றுக்கொள்ள வாய்ப்பாக ‘சாதனா 2025’ அமைந்தது. - படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை
குறிப்புச் சொற்கள்