உணர்வுகளை உயர்த்த முற்படும் சஞ்சய்யின் இன்னிசை

உணர்வுகளை உயர்த்த முற்படும் சஞ்சய்யின் இன்னிசை

1 of 5
படம்: சஞ்சய் சுவாமிநாதன்
படம்: சஞ்சய் சுவாமிநாதன்
படம்: சஞ்சய் சுவாமிநாதன்
படம்: சஞ்சய் சுவாமிநாதன்
படம்: சஞ்சய் சுவாமிநாதன்

26 Oct 2026 - 6:00 am

2 mins read

இளையர்களுக்கு உரமளித்து அவர்களை மீள்திறன்மிக்க மனிதர்களாய் உருவாக்குவதில் பெரியவர்கள் காட்டும் அக்கறையும் வழிகாட்டுதலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. 

குறிப்பாக, இளைய ஆண்களின் முழுமையான, சமச்சீரான மனமுதிர்ச்சிக்கு பக்குவமடைந்த முன்மாதிரிகள் மிக அவசியம்.

இத்தகைய உறவைப் போற்றும் நோக்கில் இசையமைப்பாளர் சஞ்சய் சுவாமிநாதன்,  எதிர்பாராவிதமாக மறைந்த தம் தாய்மாமாவின் நினைவைப் போற்றும் பாடல் ஒன்றைத் தயாரித்துள்ளார்.

‘எஸ்ஜேஒய்’ என்ற பெயரில் இயங்கிவரும் 23 வயது சஞ்சய், மூன்று ஆண்டுகளாகத் தற்சார்புக் கலைஞராக இயங்கி வருகிறார். 

வழக்கமாகக் காதலும் கொண்டாட்டமும் பீறிடும் இவரது பாடலமைப்பு, தற்போது வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்து துணையிருந்த முக்கியமான உறவைப் பற்றி விரித்துரைக்கிறது.

வீட்டில் பெற்றோர் பாடிய பாடல்கள் வழியே இசையின்பால் ஆர்வம் கொண்ட சஞ்சய்க்கு, அவரது அப்பா பெரும்பலம். 

இளவயதில் இசையமைப்பாளராக வேண்டும் என்ற அப்பாவின் நிறைவேறாத கனவை இதயத்தில் சுமந்தே அவர் இசைத்துறையில் புகுந்தார்.

தந்தைக்கு நிகராக நின்ற தாய்மாமா, தம் இசை முதலீடுகளுக்கு உறுதியான தூணாக இருந்ததாக சஞ்சய் குறிப்பிட்டார். 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தாய்மாமா எதிர்பாராவிதமாக மறைந்தபோது, அந்த ஆழமான துயரத்தை ஒரு படைப்பாக மாற்ற முடிவெடுத்தார் சஞ்சய். அதன் விளைவாக ‘ஏடன் தோட்ட ரோசா’ என்ற புதிய தமிழ்ப் பாடலை வெளியிட்டார்.

மரணத்தைத் தாண்டியும் வாழும் அன்பின் நிரந்தரத்தை எடுத்துரைக்கும் இப்பாடலை அவர், அக்டோபர் 17ஆம் தேதி வெளியிட்டார். தமிழ்த் திரைப்பட பாணியிலான இந்த இசைக் காணொளியை சஞ்சய் இயக்கியுள்ளார்.

சஞ்சய்யைப் பொறுத்தவரையில் உணர்வே இசையின் உரமாகும். “காதல் பாடல்களும் இந்தப் பாடலும் சரி, என் இசையின் ஒவ்வொரு வரியும் உணர்வுகளின் வெளிப்பாடு. அன்புக்குரியவரை நடுநாயகமாக நிறுத்தி எனது வரிகள் அமையும்,” என்று அவர் கூறினார்.

தமிழ் வழியாக இன்று பலரைத் தம்பால் ஈர்க்கும் சஞ்சய், பள்ளிப் பருவத்தில் சரியாகத் தமிழில் பேசத் தெரியாததால் வகுப்பறைக்கு வெளியே நிற்கவைக்கப்பட்ட அனுபவத்தைப் புன்சிரிப்புடன் நினைவுகூர்ந்தார். 

ஏளனங்களை எதிர்கொண்ட அவர், வகுப்பு இடைவேளையில் தனியாக அமர்ந்து பள்ளியிலிருந்த பியானோவை வாசிக்கக் கற்றுக்கொண்டார். 

யூடியூப் பார்த்து அவர் பழகி, வாசித்த முதல் பாடல் ‘ஸ்பைடர்மேன்’ திரைப்படப் பாடல். அந்தக் கதாபாத்திரம்போல அனைவருமே நாயகர்களாய்த் திகழ முடியும் என்பது சஞ்சய்யின் நிலைப்பாடு. 

தமிழின் மீதான பற்று விருப்பத்திலிருந்து வளருமே தவிர பிள்ளைகளை அச்சுறுத்துவதாலோ அவமதித்தாலோ உருவாகாது என்பது அவரது கருத்து.  

“எனது முன்னாள் தமிழ் ஆசிரியர், புதிய மாணவர்களிடம் என் சாதனைகளையும் பாடல்களையும் பகிர்வது குறித்து நெகிழ்கிறேன்.  

“தமிழ் வகுப்பிலிருந்து இசையுலகம் சென்று உருவாக்கிய எனது பாடல்கள், மீண்டும் வகுப்பறைகளை அடைந்தது என்னைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய அங்கீகாரம்,” என்றார் சஞ்சய்.

குறிப்புச் சொற்கள்