தொழில்நுட்பக் கல்விக் கழகத்தினுள் (ஐடிஇ) 15 ஆண்டுகளுக்கு முன் முதன்முறையாகக் காலடி எடுத்துவைத்த சந்திரன் இளவரசன் சென்ற ஆண்டு ‘ஐடிஇ’க்கே விரிவுரையாளராகத் திரும்பியுள்ளார்.
தொழில்நுட்பக் கல்விக் கழக கிழக்குக் கல்லூரியில் சமுதாயப் பராமரிப்பு, சமூகப் பணியில் உயர் நைட்டெக் விரிவுரையாளரான 33 வயது சந்திரன், நைட்டெக், உயர் நைட்டெக், பட்டயம், இளநிலை, முதுநிலைப் பட்டக்கல்வி என 15 ஆண்டுகால இடைவிடாத கல்விப்பயணத்தை மேற்கொண்டவர்.
பல சவால்களை எதிர்கொண்டு, மனத்திடத்தால் சமாளித் தொடர்ந்து முன்னேறுபவர்.
விமர்சனங்களை எதிர்த்து தன் வழி வகுத்தவர்
“ஒரு காலத்தில் என் தாயார் என்னைச் சரியாக வளர்க்கவில்லை எனக் கூறியவர்கள், இன்று நான் முதுநிலைப் படிப்பை முடித்து தாயாரைப் பெருமைப்படுத்தியுள்ளேன்,” என்றார் சந்திரன்.
உறவினர்கள் உட்பட, தன் குடும்பத்தில் ‘ஐடிஇ’க்கு சென்ற முதல் உறுப்பினர் சந்திரன்தான்.
இரண்டாம் முறையும் வழக்கநிலைத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாதபோது அவருக்குக் கதவைத் திறந்த ஒரே கல்வி நிலையம் ‘ஐடிஇ’.
“முதல் முறை வழக்கநிலைத் தேர்வுகளில் தேர்ச்சியடையாதபோதே என் ஆசிரியர் ‘ஐடிஇ’ எனக்கு நல்ல சூழலாக இருக்கும் என்றார். நான் தேசிய மாணவ ராணுவப் படை (என்சிசி)யில் தலைமைத்துவப் பொறுப்பில் இருந்தேன். பள்ளி நிகழ்ச்சிகளுக்கு நெறியாளராகவும் இருந்தேன். முயற்சி செய்வோமே என மறுமுறை தேர்வு எழுதினேன். ஆனால் இரண்டாம் முறை மதிப்பெண்கள் இன்னும் குறைந்தன,” என்றார் சந்திரன்.
குடும்பத்தினர், உறவினர்கள் எதிர்மறையான கருத்துகளைக் கூறியபோதும், ‘ஐடிஇ’யில் சிறப்பாகச் செயல்படுவோம் என்ற உறுதியுடன் அவர் ‘ஐடிஇ’ மேற்குக் கல்லூரியில் உடற்கட்டுப் பயிற்சியில் ‘நைட்டெக்’ படிப்பைத் தொடங்கினார்.
தொடர்புடைய செய்திகள்
“ஏட்டுக் கல்வியைவிட செய்முறைப் பயிற்சியில் அதிக கவனம் செலுத்தப்பட்டது எனக்கு ஏற்புடையதாக இருந்தது; உதாரணத்துக்கு, வெளிப்புற முகாம்களை நடத்தக் கற்றுக்கொண்டேன். பலதுறைத் தொழிற்கல்லூரிக்குச் செல்லவேண்டும் என உறுதியாக இருந்தேன்,” என்றார் சந்திரன்.
அந்த முனைப்புடன் விளையாட்டு மேலாண்மையில் உயர் நைட்டெக் படிப்பை முடித்தவர், பின்பு தேசிய சேவையின்போது விளையாட்டுப் பயிற்றுவிப்பில், ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பகுதிநேரப் பட்டயப் படிப்பும் மேற்கொண்டார்.
சிண்டா இளையர் மன்றம்வழி திருப்பம்
‘உயர் நைட்டெக்’ படிக்கும்போது ‘ஐடிஇ’ வகுப்பு ஆலோசகர் திருவாட்டி டோனின் ஊக்குவிப்பில், சிண்டா இளையர் தலைமைத்துவத் திட்டத்தில் இணைந்தார்.
சிண்டா இளையர் மன்றத்தின்கீழ் சந்திரனும் நண்பர்களும் ‘ஐடெல்ப்’ (ITELP) என ஐடிஇ மாணவர்களுக்கான தலைமைத்துவத் திட்டத்தைத் தொடங்கினர்.
அத்திட்டம் இன்றுவரை பலரையும் சென்றடைகிறது.
அம்மன்றம்வழி 2015 முதல் 2018 வரையிலும் 2021லும் ‘ஐடெல்ப்’பில் சேவையாற்றினார்; 2021 முதல் 2022 வரை மன்றத்தின் செயற்குழு உறுப்பினராக இருந்தார்.
இளம் சீக்கிய சங்கம்வழி பஞ்சாப்பில் ஒரு நூலகம் கட்டும் முயற்சியிலும் சந்திரன் ஈடுபட்டார்.
சமூகப் பணியிலிருந்த ஆர்வத்தால், சிரமமான பின்னணிகளைச் சார்ந்த சிறுவர்களுக்கு வசிப்பிடம் வழங்கும் ‘பாய்ஸ் டவுன்’னில் முழுநேர வேலையில் சேர்ந்து, அங்கேயே ஏழு ஆண்டுகள் பணிபுரிந்தார்.
இளையர்களைப் பார்த்துக்கொள்ளும் அதிகாரியாகத் தொடங்கி, படிப்படியாக முன்னேறி, சிறுவர் பாதுகாப்பு மேலாளராக ஓர் அணியை வழிநடத்தினார்.
“அங்கிருந்த சிறுவர்களுக்கு நான் ஓர் அண்ணனாக இருந்தேன்; அவர்கள் வீட்டுப்பாடங்கள் செய்கிறார்களா? சரியாக உண்டார்களா? என பார்த்துக்கொள்வேன். மன உளைச்சலில் இருக்கும்போது என்ன செய்யலாம்? எந்த பள்ளி, துறையைத் தேர்ந்தெடுப்பது? போன்ற வழிகாட்டுதல்கள் வழங்குவேன்,” என்றார் சந்திரன். சிறுவர்களைப் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பும் அரும்பணி அவருக்கு மேலும் உந்துதலளித்தது.
கடமைக்குக் கைகொடுத்த கல்வி
‘பாய்ஸ் டவுனின்’ நிதியாதரவுடன் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் (எஸ்யுஎஸ்எஸ்) சமூகப் பணியில் பகுதிநேரப் பட்டப்படிப்பை முடித்த அவர், அதே பல்கலைக்கழகத்தில் லாப நோக்கமற்ற அமைப்பு நிர்வாகத்தில் பகுதிநேர முதுநிலைப் பட்டப்படிப்பை பயின்றார்.
இவ்வாண்டு பட்டம் பெற இருக்கும் சந்திரன், “என் மனைவி எனக்கு மிகப் பெரிய முன்னுதாரணம். அவர் எனக்கு முன்பே சமூகப் பணியில் இளநிலை, முதுநிலைப் பட்டங்கள் பெற்றவர்,” என்றார்
பல்கலைக்கழகத்தில் படித்தபோது, வாரம் மூன்று முறையாவது பள்ளிக்குச் செல்லவேண்டும். நேரம், நிதி இரண்டையும் சரியாக நிர்வகிக்கவேண்டியிருந்தது.
வாழ்க்கை ஒரு வட்டம்
‘பாய்ஸ் டவுன்’னுக்கு கற்றல் பயணத்துக்கு வந்த ஐடிஇ கிழக்குக் கல்லூரி மாணவர்களின் துடிப்பைக் கண்டு வியந்த சந்திரனுக்கு, ‘ஐடிஇ’க்கே திரும்பச் சென்று அடுத்த தலைமுறை சமூக சேவகர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்ற ஆசை பிறந்தது.
சென்ற ஜூலை மாதம் ‘ஐடிஇ’ கிழக்கு கல்லூரியில் சேர்ந்த சந்திரன் தான் படித்த காலத்திலிருந்து இன்று ‘ஐடிஇ’ பற்றிய மக்களின் மனப்போக்கு அதிகம் மேம்பட்டுள்ளது என்றார்.
“இன்று ‘ஐடிஇ’க்கு நற்பெயர் உள்ளது. பெற்றோரே தம் பிள்ளைகளை ‘ஐடிஇ’க்கு செல்ல ஊக்குவிக்கின்றனர். பரவாயில்லை, கொஞ்ச நேரம் எடுக்கும் பலதுறைத் தொழிற்கல்லூரிக்குச் செல்ல. ஆனால், உனக்கு ஏற்ற வேகத்தில் படி என்கின்றனர். மாணவர்களும் உற்சாகத்துடன் படிக்கின்றனர்,” என்றார் சந்திரன்.
“ஐடிஇ மாணவர்கள் வேலைப்பயிற்சியில் நிஜ வாழ்க்கைச் சூழல்களை எதிர்கொள்வர். ஆசிரியர்களும் அந்தந்த துறைகளில் பணியாற்றிய அனுபவமிக்கவர்கள். அவர்கள் ஒட்டுமொத்தமாக வளர்ச்சியடைகின்றனர்,” என்றார் சந்திரன்.
கல்லூரியின் ‘கேர் கனெக்ஷன்’ மன்றத்தையும் நிர்வகிக்கும் பொறுப்பில் அவர் உள்ளார். அதன்வழி, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வெவ்வேறு சமூகத் தரப்பினருடன் தொண்டூழியம் புரிய அவர் மாணவர்களை அழைத்துச் செல்கிறார்.
தற்போது கற்றலில் இருந்து இடைவேளை எடுத்து, கற்பித்தலில் கவனம் செலுத்த விரும்பும் சந்திரனின் எதிர்கால இலட்சியம், சொந்தமாக ஒரு லாபநோக்கற்ற அமைப்பைத் தொடங்க வேண்டும் என்பதே.

