செய்யும் தொழிலில் மனநிறைவு காண விரும்பும் இளையர்கள்

செய்யும் தொழிலில் மனநிறைவு காண விரும்பும் இளையர்கள்

2 mins read
b7752d92-84f9-4d4b-805b-53fb065afa3f
புதிதாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றில் 97% சிங்கப்பூரர்கள் தங்களது வேலையில் மனநிறைவு இருப்பதை இன்றியமையாத ஒன்றாகக் கருதுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. - படம்: பிக்‌சாபே

சிங்கப்பூரின் போட்டித்தன்மைமிக்‌க வேலைச்சூழலுக்கிடையே ஊழியரணியில் சேரவிருக்கும் இளையர்கள் சம்பளத்தையும் தாண்டி வேறு பல அம்சங்களை முக்கியமாகக் கருதுகின்றனர் என்று அண்மைய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.

‘Jobs that makesense Asia’, ‘Manpower Singapore’ ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து நடத்திய ஆய்வில், 97% சிங்கப்பூரர்கள் தங்கள் வேலையில் நோக்கத்தைக் கண்டறிவதை இன்றியமையாத ஒன்றாகக் கருதுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

ஆனால், ஐவரில் ஒருவர் மட்டுமே தற்போது தாங்கள் வகிக்கும் பதவியில் மனநிறைவு காண்பதாகக் கருத்துக்கணிப்பு காட்டுகிறது.

இளையர் கருத்து

“நான் செய்யும் பணி எனது விழுமியங்களுடன் ஒத்துப்போக வேண்டும்,” என்றார் அண்மையில் சுற்றுச்சூழல் கல்வியில் பட்டம் பெற்று தற்போது நீடித்த நிலைத்தன்மை ஆலோசனைத் துறையில் பயிற்சி நிலையில் பணியாற்றிவரும் பிரியா ராமகிருஷ்ணன், 22.

தமக்‌குக் கிடைக்‌கும் ஊதியம் ஓரளவு மனநிறைவு தந்தாலும் நேர்மறையான தாக்‌கத்தை ஏற்படுத்தும் செயல்களில் தாம் பங்கேற்க விரும்புவதாக அவர் கூறினார்.

“இத்துறையில் பணிபுரிவதால் எனக்குக் கிடைக்கும் மனநிறைவு நான் எதிர்கொள்ளும் எந்தச் சவாலையும் கடந்துசெல்ல ஊக்‌கமளிக்கும் என்று நம்புகிறேன்,” என்றார் அவர்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் தகவல் தொடர்புத் துறையில் பணியாற்றிவரும் 28 வயது தினேஷ் குணசேகரன், தமது தொழிலில் நிலையான வருமானம் இருந்தாலும் வாழ்வில் மனநிறைவு அடையாததைப் போன்று உணர்வதாகச் சொன்னார்.

“அதிக சம்பளம், வேலைப் பாதுகாப்பு, தொடர்ந்து பதவி உயர்வு போன்ற அனைத்தும் நான் இந்த வேலையில் பெற்றாலும், சில ஆண்டுகளுக்குப் பிறகு ‘நான் உண்மையில் இங்கு என்ன செய்கிறேன்?’ என்று என்னை நானே கேட்கத் தொடங்கினேன்,” என்றார் அவர்.

தான் செய்துவரும் பணியில் ஆழமான அர்த்தம் ஏதுமில்லாததைப் போல் உணர்ந்த தினேஷ், குறைவான சம்பளம் பெற்றாலும் பரவாயில்லை என்று சமூக நிறுவனத்திற்கு மாறுவது குறித்து தற்போது யோசித்து வருகிறார். இருப்பினும், வேலை மாறுவதால் அவர் சவால்கள் பலவற்றை எதிர்கொள்ள நேரலாம் என்பதையும் ஒப்புக்கொண்டார்.

மருதாணி இடும் வர்த்தகத்தை நடத்தி வரும் 26 வயது வெ.சுதா, அதைத் தக்‌கவைத்துக்கொள்வது சவால்மிக்‌கதாக இருப்பதாகச் சொன்னார். இந்த வர்த்தகத்திலிருந்து கிடைக்கும் வருமானம், வாழ்வாதாரத்திற்குப் போதவில்லை என்றார் அவர்.

அதனால், சில்லறை விற்பனைத் துறையில் பகுதிநேர வேலைகளையும் செய்து வருகிறார் சுதா.

நிதி நிலையானதாக இல்லாததுடன் குடும்பத்தார் வேறொரு பாதுகாப்பான வேலைப் பாதையைத் தேர்ந்தெடுக்க அழுத்தமும் கொடுப்பதாக அவர் குறிப்பிட்டார். இருப்பினும், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலான வேலைகளைவிட இந்த வாழ்க்கைமுறையைத் தாம் விரும்புவதாக சுதா சொன்னார்.

“வேலைப்பளுவால் அவ்வபோது சோர்வடைந்தாலும் எனக்‌கு அதிக ஆர்வமும் ஈடுபாடும் இருக்கும் ஒன்றைச் செய்வதில் ஒரு தனி இன்பம்தான்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்