தன்னம்பிக்கையும் தலைமைத்துவமும்: தொண்டூழியம் செதுக்கிய ஆளுமைகள்

3 mins read
6261c286-1a12-4914-a789-0eb848031b5e
இவ்வாண்டின் இளையர் படைத் தலைமைத்துவச் சடங்கில் அதிகாரபூர்வமாகத் தலைமைப் பதவி ஏற்ற பூபதி பிரியங்கா. - படம்: சிங்கப்பூர் இளையர் படை

பிள்ளைகளை வளர்க்க வேண்டிய பெற்றோர்களே சிறைக்கைதிகளாகும்போது அப்பிள்ளைகளின் நிலை கேள்விக்குறியாகிறது. 

அத்தகைய பிள்ளைகளுக்கு ஆதரவளித்து, அவர்களது வாழ்க்கையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முற்பட்டது ‘கிட்ஸ் அனூ (Kids Anew)’ தொண்டூழியத் திட்டம். 

ஆறு முதல் 16 வயது வரையுள்ள குழந்தைகளுக்கான அத்திட்டத்திற்குத் தலைமை தாங்கினார் பூபதி பிரியங்கா. 

ஐந்து முக்கியப் பண்புகளை மையமாகக் கொண்டு, ஐந்து வெவ்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது திட்டத்தின் நோக்கம். 

“ஆரஞ்சுப் பழத்தோலை உரமாகப் பயன்படுத்துவதால் சிறுவர்கள் ஐந்து பண்புகளில் ஒன்றான அர்ப்பணிப்பின் முக்கியத்துவத்துவத்தை கற்றுக்கொள்கிறார்கள்”, என்றார் பிரியங்கா.

இவ்வாறு, தொடக்கத்தில் தொண்டூழியத்தின்மீது எந்த ஆர்வமும் கொண்டிராத பிரியங்காவுக்கு இன்று தொண்டூழியம் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாகக் கலந்துவிட்டது.

இவ்வாண்டின் இளையர் படைத் தலைமைத்துவச் சடங்கில் அதிகாரபூர்வமாக தலைமைப் பதவியை ஏற்றார் அவர்.

ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் தகவல் தொழில்நுட்பப் பட்டயக்கல்வி பயிலும் பிரியங்காவின் தொண்டூழியப் பயணம் 2023ஆம் ஆண்டில் தொடங்கியது.

சிங்கப்பூர் இளையர் படை ஏற்பாடு செய்த தலைமைத்துவப் பயிற்சி முகாமான ‘மிஷன் எக்ஸ்’ இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

“நான் தன்னம்பிக்கையோடு பேசக்கூடியவள். என்றாலும், கொவிட்-19 பரவலுக்குப் பிறகு அத்திறனை இழந்துவிட்டதுபோல் உணர்ந்தேன்,” என்றார் 19 வயதான இந்த இளையர்.

அவரது தன்னம்பிக்கைக்கு மீண்டும் உயிர்கொடுத்தது மிஷன் எக்ஸ் பயிற்சி முகாம். 

அதனையடுத்து, தொண்டூழியத்தில் உள்ள ஆர்வத்தையும் தலைமைத்துவ ஆற்றலையும் மேலும் வளர்த்துக்கொள்ள சிங்கப்பூர் இளையர் படைத் தலைவர் திட்டத்தில் சேர்ந்தார் பிரியங்கா. 

தொண்டூழியம் மூலம் கிடைக்கும் மனநிறைவிற்கு என்றும் முடிவில்லை என்பது இவரது கருத்து.

“தொண்டூழியத்தால் எனக்குத் தனிப்பட்ட முறையில் பயனேதும் இல்லை என்றெண்ணி, தொடக்கத்தில் என் பெற்றோர் எனக்கு அவ்வளவு ஆதரவு தரவில்லை,” என்றார் பிரியங்கா.

இதனால், தொண்டூழியப் பயணத்தில் தனியாகப் பயணிப்பதுபோல் உணர்ந்த பிரியங்காவிற்கு அதன்மூலம் கிடைத்த நண்பர்கள் உறுதுணையாக இருந்தனர். 

பலருடன் ஒன்றிணைந்து ஒரு திட்டத்தைச் செயல்படுத்துவது என்பது எளிதான செயலன்று.

பல்வேறு கருத்துகளுக்குச் செவிமடுக்க பக்குவம் தேவை; கருத்துவேறுபாடுகள் ஏற்படும்போது அதனை எதிர்கொள்ளும் திறனும் தேவை. 

“வெவ்வேறு பங்காளிகளுடன் இணைந்து செயல்படுவது ஒருவித சவால். ஒவ்வொருவருக்கும் அவரவர் கருத்தை முன்வைக்கும்போது முடிவுகள் எடுப்பது சற்று சவாலாக இருந்தது”, என்றார் பிரியங்கா.

சரியான பாதையில்தான் செல்கிறேன் என்பதை நினைவூட்டும் வகையில் அமைந்த ஒரு சம்பவத்தை இவர் பகிர்ந்துகொண்டார்.  

“ஐந்து நாள் நிகழ்ச்சி ஒன்று முடிந்தவுடன், சிறுவர்களிடம் அவர்கள் யாருக்கு நன்றி சொல்ல விரும்புகிறார்களோ அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதச் சொல்லியிருந்தோம். அவர்களில் ஒருவர், தம்முடன் நேரம் செலவழித்ததற்காக என்னிடம் நன்றிதெரிவித்தார்”, என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் பிரியங்கா.

எதிர்காலத்தில் பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் அல்லது வணிகப் பகுப்பாய்வில் பட்டக்கல்வி பயில விரும்புகிறார் இந்த இளையர்.

திறன்களைக் கற்றுக்கொடுத்த தொண்டூழியம்

சிங்கப்பூர் இளையர் படைத் தலைமைத்துவப் பயிற்சித் திட்டத்துடன் தொடங்கியது கவி வர்ஷினியின் தொண்டூழியப் பயணம்.
சிங்கப்பூர் இளையர் படைத் தலைமைத்துவப் பயிற்சித் திட்டத்துடன் தொடங்கியது கவி வர்ஷினியின் தொண்டூழியப் பயணம். - படம்: சிங்கப்பூர் இளையர் படை

பிரியாங்காவைப் போலவே தொண்டூழியத்தில் கால்பதித்தார் 20 வயது கவி வர்ஷினி.

இவரது தொண்டூழியப் பயணம் தொடக்கக் கல்லூரியில் தொடங்கியது. 

தொடக்கத்தில் பள்ளியில் தலைமைத்துவ பொறுப்புகளை வகித்தார் கவி.

2023இல் சிங்கப்பூர் இளையர் படைத் தலைமைத்துவ பயிற்சித் திட்டம் பற்றி கேள்விப்பட்டவுடன் சமூகம் சார்ந்த தலைமைத்துவப் பொறுப்புகளை ஏற்க இவர் முடிவெடுத்தார். 

அதன்வழி வசதி குறைந்த குழந்தைகளுக்குக் கணிதம் கற்றுத்தரும் பயிற்சித்திட்டமான ‘கிட்ஸ்கவுன்ட்’ நிகழ்ச்சியில் கவி பங்கெடுத்தார்.

“முதியவர்களுக்கு நிறைய தொண்டுசெய்துள்ளேன். அதனால், சிறுவர்களுடன் இணைந்து தொண்டூழியம் செய்வது எனக்குப் புதிய அனுபவமாக இருந்தது”, என்றார் கவி. 

முதல் தவணைக்காலத்தில் ஒரு துணைத்தலைவராகத் பொறுப்பு வகித்து, நிதிக்குழுவில் ஒரு உறுப்பினராக இருந்தார் இவர்.

“வரவுசெலவு பற்றி நிறைய கற்றுக்கொண்டேன். திட்டத்தைத் தொடங்குவதற்கு முன்பு அரசாங்கம் வழங்கும் மானியத்தை தவிர்த்து, நிதி திரட்டுவதற்கு எப்படி அணுகுவது என்று கற்றுக்கொண்டேன்,” என்று கவி பகிர்ந்துகொண்டார்.

இரண்டாவது தவணைக்காலத்தில் தொண்டூழியர்களை நிர்வகிக்கும் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

அதன்மூலம், அணுகுதிறன், கவனிப்புத்திறன், எதிர்பாராத நேரத்தில் ஒரு சவால் எழும்போது அச்சூழ்நிலையைப் பதற்றமின்றிக் கையாளும் திறன் போன்றவற்றை இவர் கற்றுக்கொண்டார்.

மிக முக்கியமாக, குறிக்கோளை மறக்காமல் செயல்படுவதன் முக்கியத்துவத்தை கற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டார் கவி. 

குறிப்புச் சொற்கள்