தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நடனப் படைப்புவழி நிதி திரட்டிய நர்த்தகி

2 mins read
c47bcc37-3e89-4826-8bf1-f9ec58d6bb63
ஆறு வயது முதல் பரதநாட்டியம் பயின்ற ஷ்ரேயா மூர்த்தி, சிறந்த மாணவர் என்ற பட்டத்தை 2019ஆம் ஆண்டில் பெற்றார். - படம்: ஷ்ரேயா மூர்த்தி

வி. கே. சந்தோஷ் குமார்

சிங்கப்பூர் இந்திய நுண்கலைக்கழகம் (சிஃபாஸ்) அடுத்த மாதம் மிடில் ரோட்டிலுள்ள தனது புதிய வளாகத்திற்கு இடம் மாறுகிறது. அதற்கு முன்னதாக, ஸ்டார்லைட் ரோட்டிலுள்ள அதன் அரங்கில் இறுதி நிகழ்வாக ஷ்ரேயா மூர்த்தியின் நடனப் படைப்பு இடம்பெற்றது.

தற்போது பெர்த் நகரில் மேற்கு ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயிலும் 21 வயது சிங்கப்பூரரான ஸ்‌ரேயா, ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 15ஆம் தேதி நுண்கலைக்கழகத்திற்கு நிதி திரட்ட நடனமாடினார்.

ஷ்ரேயாவின் இரண்டு மணி நேர நிகழ்ச்சி, அப்பள்ளிக்காகக் கிட்டத்தட்ட $4,000 நிதியைத் திரட்டித் தந்தது.

“சிஃபாஸ் என்பது எனக்கு மற்றோர் இல்லம் போன்றது,” என்ற ஷ்ரேயா, “என் பாட்டியும் தாயாரும் அங்குதான் கலைகளைக் கற்று வளர்ந்தனர். இங்கு படித்துள்ள அநேகரின் மனதிற்கும் இந்தப் பள்ளி நெருக்கமானது,” என்றார்.

ஆறு வயது முதல் பரதநாட்டியம் பயின்ற ஷ்ரேயா, பின்னர் எட்டு ஆண்டு பட்டயப் படிப்பை முடித்து சிறந்த மாணவர் பட்டத்தை 2019ல் பெற்றார். 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நாட்டிய அரங்கேற்றம் செய்த அவர், பின்னர் சென்னைக்குச் சென்று பரதநாட்டியக் கலைஞர் பிரியதர்ஷினி கோவிந்திடம் நடனத்தில் மேலும் பயிற்சி பெற்றார். தற்போது பல்கலைக்கழக விடுமுறையின்போது சென்னையிலும் அமெரிக்காவிலும் மேடை நிகழ்ச்சிகளில் நடனமாடி வருகிறார்.

“நடன அமைப்பு கடினமாக இருந்தபோதும் ஷ்ரேயா தமது உடல் அசைவுகளில் துல்லியம், இலகுத்தன்மை, நளினம் ஆகியவற்றை வெளிக்காட்டினார்,” என்றார் மூத்த இயக்குநர் லலிதா சுப்பிரமணியம்.

சிபாஃஸ் பள்ளி அடுத்த மாதம் முதல் தனது புதிய வளாகத்திற்குப் படிப்படியாகப் இடம் மாறும். ஜூன் மாதம் முதல் அந்தப் பள்ளி புதிய வளாகத்தில் முழுமையாகச் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளாவிய இந்திய அனைத்துலகப் பள்ளியில் சிறப்பு விருந்து நிகழ்ச்சி ஒன்றை சிஃபாஸ் பள்ளி கடந்த மார்ச் 8ஆம் தேதி நடத்தியது.

குறிப்புச் சொற்கள்