இளையர்களின் உயர்வுக்கான சிண்டா காற்பந்துத் திட்டம்

இளையர்களின் உயர்வுக்கான சிண்டா காற்பந்துத் திட்டம்

4 mins read
b400b874-f5fe-44ad-ab41-791037288f33
முன்னாள் சிண்டா காற்பந்துத் திட்ட விளையாட்டாளரும் இந்நாள் சிண்டா இளையர் வழிகாட்டியுமான திரு சரண்ராஜ் கருணாநிதி. - படம்: சிண்டா

இளையர்களுக்குக் கல்விவழி மட்டுமன்றி, விளையாட்டு, வழிகாட்டுதல் போன்ற பல்வேறு வழிகளில் அவர்களை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச்செல்ல சிண்டா முயன்று வருகிறது.

அம்முயற்சிகளில் முக்கிய ஒன்றாக அதன் காற்பந்துத் திட்டம் விளங்குகிறது.

பயனாளரிலிருந்து வழிகாட்டி

தாம் முன்பிருந்த நிலையில் இன்றிருக்கும் இளையர்களுக்கு உதவ முனைகிறார் திரு சரண்ராஜ் கருணாநிதி.

இயந்திரப் பொறியாளராகப் பணிபுரியும் இவர் 16 வயதில் சிண்டாவின் காற்பந்துத் திட்டத்தில் இணைந்தார்.

இன்று தமது 28வது வயதில் சிண்டாவின் முயற்சிகளில் ஈடுபடும் இளையர்களுக்கு முன்மாதிரியாகவும் வழிகாட்டியாகவும் இவர் திகழ்கிறார்.

நினைவலைகளைப் பின்னோக்கிப் பார்த்த திரு சரண், தமது பதின்ம வயதில் அங் மோ கியோ வட்டார அடுக்குமாடி வீட்டொன்றின்கீழ் ஏறக்குறைய 15 நண்பர்களுடன் காற்பந்து விளையாடிய காலத்தில் சிண்டா ஊழியர் ஒருவர் தங்களைக் கண்டறிந்ததை நினைவுகூர்ந்தார்.

“உயர்நிலை மூன்று, நான்கு நிலைகளில் படித்துவந்த எங்களுக்குப் போட்டித்தன்மைமிக்க காற்பந்து ஆட்டங்களைச் சிண்டா ஏற்பாடு செய்து கொடுத்ததை மறக்க முடியாது,” என்றார் இவர்.

ஒவ்வொரு சனிக்கிழமையும் தனியார் லீக் போட்டி ஒன்றில் தாங்கள் போட்டியிட்டோம் என்றும் மூத்த விளையாட்டாளர்களுடன் மோதும் வாய்ப்பு கிடைத்தது நல்ல கற்றல் அனுபவமாக அமைந்தது என்றும் இவர் சொன்னார்.

“அவ்வயதில் கட்டணம் செலுத்தி போட்டிகளில் பங்கேற்பது கடினமாக இருந்தது. ஆனால், நிதிச் சுமையில்லாமல் சுதந்திரமாக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது எங்கள் அதிர்ஷ்டம்,” என்றார் திரு சரண்.

போட்டியில் பங்கேற்ற முதல் ஆண்டில் குழு மோசமான தோல்விகளைச் சந்தித்தபோதும் இரண்டாம் ஆண்டிலிருந்து தங்களது திறன் மேம்பாட்டிற்காகப் பயிற்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, பின்னர் சிறப்பாக விளையாடியதாக அவர் பகிர்ந்துகொண்டார்.

திட்டத்தின்கீழ் விளையாடிய சில விளையாட்டாளர்கள் பின்பு சிங்கப்பூர் பிரிமியர் லீக் அணிகளின் இளையர் குழுக்களில் இணைந்ததாக இவர் சொன்னார்.

திரு சரண், தமது 17ஆம் வயதில் ஆண்டர்சன் தொடக்கக் கல்லூரியில் பயின்று வந்தபோது ஆசியான் பள்ளி விளையாட்டுகளில் (ASEAN School Games) கலந்துகொண்ட ஒன்றுபட்ட சிங்கப்பூர் பள்ளிகள் (Combined Schools) அணியைக் காற்பந்தாட்டத்தில் பிரதிநிதித்தார்.

திரு சரணும் அவரது குழுவினரும் காற்பந்தில் தொடர்ந்து உயர்ந்து வந்தாலும் அவர்களது 25ஆம் வயதுவரை அனைவரும் சிண்டா காற்பந்துத் திட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

திட்டத்தின் பயனாளரிலிருந்து வழிகாட்டியாக தம்மை மாற்றியது பல்கலைக் கழகத்தின்போது அவர் இந்தியாவில் கலந்துகொண்ட மாநாடு ஒன்றென இவர் பகிர்ந்துகொண்டார்.

“அந்த மாநாட்டில் நான் சந்தித்த ஒருவர் தொண்டூழியம்மீது மிகுந்த நாட்டம் கொண்டிருந்தார். அதை என்னால் அப்போது சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.

“அவரிடம் அந்நாட்டத்தின் பின்னுள்ள காரணத்தை வினவியபோது, ‘நான் செய்யவில்லையெனில் வேறு யார் செய்வார்?’ என்ற ஒற்றைக் கேள்வியுடன் எனக்குத் தெளிவளித்தார்,” எனத் திரு சரண் நினைவுகூர்ந்தார்.

மாநாடு முடிந்து சிங்கப்பூர் திரும்பிய திரு சரண், மீண்டும் சிண்டாவைத் தொடர்புகொண்டு பிற இளையர்களுக்கு உதவ முன்வந்தார்.

தற்போது தாம் கடந்து வந்த வாழ்க்கை அனுபவங்களை உதவி தேவைப்படும் இளையர்களுடன் பகிர்ந்து, அவர்களுக்குப் புதிய கண்ணோட்டங்களை இவர் வழங்கி வருகிறார்.

“பெரும்பாலான நேரங்களில் இளையர்களுக்குத் தேவைப்படுவது தங்கள் கவலைகளையும் பிரச்சினைகளையும் கேட்கும் செவிகள்தான். அச்செவிகள் அண்மைக் காலத்தில் அவர்களின் வாழ்க்கை சூழலைக் கடந்து வந்தவருடையதாக இருக்கும்பட்சத்தில் நாம் கூறுவதைக் கேட்க அவர்கள் தயாராக உள்ளனர்,” என்றார் இவர்.

உலகில் எவரும் 100 விழுக்காடு சரியானவர்கள் இல்லை; செய்யும் தவறுகளைச் சரியான நேரத்தில் திருத்திக்கொண்டு வாழ்வை மேல்நோக்கி திசைதிருப்புவது அவர்களின் கைகளில்தான் உள்ளது என்பதைத் திரு சரண் இளையர்களுக்கு உணர்த்த முனைகிறார்.

பெண் சிங்கங்கள்

சிண்டா காற்பந்துத் திட்டத்தில் தடம்பதிக்கும் (இடமிருந்து வலது) ஒமான்ஷி சிங், ஒமித்ரா சிங், ஒமிஷா சிங் சகோதரிகள்.
சிண்டா காற்பந்துத் திட்டத்தில் தடம்பதிக்கும் (இடமிருந்து வலது) ஒமான்ஷி சிங், ஒமித்ரா சிங், ஒமிஷா சிங் சகோதரிகள். - படம்: சிண்டா

தங்களது சனிக்கிழமை பிற்பகலை சிண்டாவின் காற்பந்துத் திட்டத்தில் செலவிடுவதன்வழி மகிழ்ச்சி காண்கின்றனர் சகோதரிகள் மூவர்.

ஒமிஷா சிங், 17, ஒமித்ரா சிங், 14, ஒமான்ஷி சிங், 13, ஆகிய அம்மூவரும் தங்கள் தந்தையினால் காற்பந்தின்பால் ஈர்க்கப்பட்டனர்.

“பெண்களும் தற்காப்புக் கலைகள், விளையாட்டுகள் ஆகியவற்றில் ஈடுபட வேண்டுமென்று எங்கள் தந்தை ஆணித்தரமாக நம்புபவர்,” என்று ஒமிஷா கூறினார்.

தொடக்கப் பள்ளி முதல் வகுப்பிலிருந்து சிண்டாவின் ‘ஸ்டெப்’ துணைப்பாட வகுப்பில் பயின்று வரும் ஒமிஷா, நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரிக்குச் சென்ற பிறகு ஓய்வு நேரம் அதிகமிருப்பதாக உணர்ந்ததால் காற்பந்துத் திட்டத்தில் இளைய தலைவராக பொறுப்பெடுத்தார்.

அக்காவின் பாதையில் தங்கைகளும் தொடர்ந்தனர். ஒமித்ராவின் பள்ளியான சிராங்கூன் கார்டன்ஸ் உயர்நிலை பள்ளியிலும் ஒமான்ஷி பயிலும் ஹோலி இன்னசன்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியிலும் பெண்களுக்கான காற்பந்து இணைப்பாடம் இல்லாததால் இருவரும் சிண்டாவின் காற்பந்துத் திட்டத்தில் துடிப்புடன் பங்கேற்கின்றனர்.

விளையாடுகையில் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்வதும் ஆதரித்துக்கொள்வதும் வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு அளவுகளில் நடக்குமென்று அவர்கள் சிரித்தவாறு கூறினர்.

பலரும் தாங்கள் காற்பந்து விளையாடுவதை ஆதரித்தாலும், சிலர் தங்களைக் கேலி செய்வதும் ஏளனமாக பார்ப்பதும் தொடர்கிறது என்று கூறிய சகோதரிகள், அத்தகைய சம்பவங்கள் தங்களை மேலும் சிறப்பாக விளையாட ஊக்குவிப்பதாகக் கூறினர்.

மூவரும் தலைமைத்துவம், விடாமுயற்சி, துணிவு ஆகிய முக்கிய பண்புகளைக் காற்பந்துவழி கற்பதாகக் கருதுகின்றனர்.

இனித் திட்டத்தில் இணையும் பெண்களுக்கும் ஆதரவு வழங்கி, விளையாட்டுமீதான நாட்டத்தை வளர்க்க உதவ சகோதரிகள் விரும்புகின்றனர்.

குறிப்புச் சொற்கள்