சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி ஏற்பாடு செய்திருந்த பொது வரவேற்பு தினம், ஜனவரி 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
எட்டுக் கல்விக் கழகங்கள் வழங்கும் பாடப்பிரிவுகளைப் பற்றி மாணவர்கள், பெற்றோர்களுக்கு விரிவாக எடுத்துக் கூறியது. மேலும், நீடித்த நிலைத்தன்மை, உருமாற்றம், ஏட்டுக்கல்வியில் புத்தாக்கம் உள்ளிட்டவற்றைச் சார்ந்த 27 புத்தாக்கப் பணித்திட்டங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.
முள் சீத்தாப்பழ எண்ணெய், நீடித்த நிலைத்தன்மை
முள் சீத்தாப்பழ (soursop) விதைகளிலிருந்து எண்ணெய் தயாரிக்கும் பணித்திட்டத்தை நான்கு மாணவர்கள் ஓராண்டாக மேற்கொண்டு வருகின்றனர்.
ஐக்கிய நாடுகள் நீடித்த நிலைத்தன்மை வளர்ச்சிக் குழுவின்கீழ் அமைந்துள்ள 17 இலக்குகளில் ஒன்றான ‘நீடித்த நிலைத்தன்மை கொண்ட சமூகங்கள் மற்றும் நகரங்கள்’ அடிப்படையில் இந்த நான்கு மாணவர்கள் தங்கள் திட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
முள் சீத்தாப்பழ எண்ணெய்யில் ‘ஆன்டிஆக்சிடன்ட்டுகள்’ இருப்பதால் இயற்கை முறையில் மேனிப் பராமரிப்புக்குப் பெரிதும் உதவும். அதுமட்டுமல்லாமல், முள் சீத்தாப்பழ விதைகளை மறுபயனீடு செய்வதால் கழிவுகள் குறையும் என்று கூறினார் வேதிப் பொறியியலில் பட்டயக் கல்வி பயிலும் மாணவி தாஸ்னா பிரசில், 20.
“மனித மேனிக்கு இணையாக சீன வெள்ளெலிகளின் கருப்பை உயிரணுக்களைப் பயன்படுத்தி இந்த எண்ணெய்யைத் தற்போது பரிசோதித்து வருகிறோம்,” என்றார் தாஸ்னா.
வருங்காலத்தில் மேனிப் பராமரிப்பு நிறுவனங்களுக்கு ஒரு வணிக வாய்ப்பாக மட்டுமின்றி, பல விவசாயிகளுக்கு மறுபயனீடு பற்றிய விழிப்புணர்வுத் திட்டமாகவும் இந்த முள் சீத்தாப்பழ எண்ணெய்த் திட்டம் விளங்கும் என்று நம்புகின்றனர் இந்த மாணவர்கள்.
உணவுத்துறையில் ‘ஏஐ’
உணவில் ஆபத்தான கண்ணாடித் துண்டுகள் இருப்பதை அடையாளம் காண்பது மட்டுமல்லாமல் தானியங்கி முறையில் உணவுக்கான சுவையூட்டிகளை வழங்க தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு சேர்ந்த ஒரு பணித்திட்டத்தை 19 வயதான கணினிப் பொறியியல் பட்டயக்கல்வி மாணவர்கள் எஸ்ரா யூசோஃப், டேவியர் லிம் மேம்படுத்தியுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
“சோர்வு, மன உளைச்சலால் சில வேளைகளில் உணவகங்களில் மனிதத் தவறு நேரலாம். அத்துடன், நேரத்தைச் சரிவர நிர்வகிக்க தொழில்நுட்பம் பெரிதும் கைகொடுக்கிறது,” என்று விவரித்தார் டேவியர்.
“இந்தத் திட்டம் நமக்கு முன்னால் படித்த பட்டயக்கல்வி மாணவர்களால் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தைக் கிட்டத்தட்ட 18 வாரங்களாக நாங்கள் மெருகேற்றி வருகிறோம்,” என்றார் எஸ்ரா.
தற்போது இத்திட்டம் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக ‘யூ-டவுன்’ (U-Town) வளாகத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் உணவுத்துறையைத் தவிர மருத்துவத் துறைக்கும் பயன்படும் என்றார் டேவியர்.
“ஆபத்தான கண்ணாடித் துண்டுகளைக் கண்டறியும் தொழில்நுட்பம் மருத்துவமனைகளில் இருப்பது உதவியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்,” என்றும் அவர் சொன்னார்.
“தானியங்கி முறையில் சுவையூட்டிகளை வழங்கும் தொழில்நுட்பம் மருந்தகங்களில் மருந்துகளைத் துல்லியமாக விநியோகிக்கப் பயன்படும்,” என்றார் எஸ்ரா.
மீட்புப்பணிக்கு ‘டிரோன்’
பயணக் கப்பல்களிலிருந்து ஒருவர் தவறி நீருக்குள் விழும்போது, ஆளில்லா வானூர்தி ஒன்றைப் பயன்படுத்தி விழுந்தவருக்கு மிதவையை அனுப்பும் பணித்திட்டத்தைக் கடல்சார் பொறியியல் பட்டயக்கல்வி மாணவர்களான முருகன் சிவக்குமாரும் குவேந்திர நாயரும் மேற்கொண்டுள்ளனர்.
சிறிய கேமரா, ஒலிபெருக்கி பொருந்திய இந்த வானூர்தி, கப்பலிலிருந்து விழுந்த ஒருவரை 50 நிமிடங்கள் வரை தேடிக் கண்டுபிடித்த பிறகு அவருக்கு ஒரு மிதவையை அளிக்கும் தொழில்நுட்பத் திட்டத்தை ஏறக்குறைய ஆறு மாதங்களாக மேற்கொண்டு வருவதாக முருகன், 23, கூறினார்.
கப்பலிலிருந்து விழுபவர்கள் இறந்துபோக 72% வாய்ப்பு உள்ளது என்பது கவலைக்குரிய ஒன்று.
“கடல்சார் தொழிலில் விரைவான, பாதுகாப்பான மீட்புமுறைக்குத் தேவை உள்ளது என்று நாங்கள் உணர்ந்தோம். அதுவே இந்தத் திட்டத்தை உருவாக்க ஊக்குவிப்பாக அமைந்தது,” என்றார் முருகன்.
அதிக பரப்பளவில் நில, கடல் பகுதிகளின் மீட்புப் பணியில் ஆளில்லா வானூர்திகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
“மேலும், இணைக்கப்பட்ட சிறிய கேமரா, ஒலிபெருக்கி மூலம் விழுந்தவருடன் தொடர்புகொள்ள முடிகிறது. இதனால் பதற்றம் குறைந்து அடுத்து என்ன செய்யலாம் என்று தெளிவாக யோசிக்கலாம்,” என்றும் முருகன் கூறினார்.
மூத்தோருக்கான மெய்நிகர் தொழில்நுட்பம்
கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக முதியவர்கள் பலர் தனிமையில் முடங்கிப் போயினர்.
அவர்களது தனிமையைப் போக்க மெய்நிகர் தொழில்நுட்பத்தைச் சிகிச்சை முறையில் பயன்படுத்தும் பணித்திட்டத்தை மின், மின்னணுப் பொறியியல் பட்டயக்கல்வி பயிலும் நான்கு மாணவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
மெய்நிகர் தொழில்நுட்பத்தில் 12 விளையாட்டுக் காட்சிகள் இடம்பெறும். முதியவர்கள் மருத்துவமனை, சிகிச்சை நிலையத்துக்குச் செல்லாமல் தங்கள் வீட்டிலேயே அமர்ந்தபடி மெய்நிகர் விளையாட்டுகள் மூலம் உடல் அசைவுப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம் என்று மாணவர் கணேஷ் குமார் ஹிராஜ் கிஷார், 19, கூறினார்.
மூவாண்டுகளாகத் தொடரும் இந்த மெய்நிகர் தொழில்நுட்ப சிகிச்சைத் திட்டம், 2022ஆம் ஆண்டு முதல்முறையாக முதியோரிடையே பரிசோதிக்கப்பட்டது.
“தொழில்நுட்பத்தை அணுகும் முறை சற்று சிரமமாக இருந்தது என்று சில முதியவர்கள் எங்களிடம் கருத்து தெரிவித்தனர். அவர்கள் கூறும் கருத்துகளை மனத்தில் வைத்து நாங்கள் இத்திட்டத்தை மேம்படுத்தி வருகிறோம்,” என்றார் கணேஷ்.
இதனால், காலப்போக்கில் முதியோருக்கான சிகிச்சைமுறைகளில் இந்த மெய்நிகர் தொழில்நுட்பம் பங்காற்றும் என்று நம்பிக்கை தெரிவித்தார் கணேஷ்.
“முதியவர்கள் மட்டுமல்லாமல் அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் குடும்ப உறுப்பினர்களும் சேர்ந்து இந்த மெய்நிகர் தொழில்நுட்ப சிகிச்சைமுறையை அணுகினால் மூத்த தலைமுறையினருக்கு ஆறுதலாகவும் இருக்கும்,” என்றார் கணேஷ். காட்சிப்படுத்தப்பட்ட 27 புத்தாக்கப் பணித்திட்டங்களைப் பற்றிய மேல்விவரங்களுக்கு https://sopossible.sp.edu.sg/student-life/annual-events/sp-industry-innovation/spii2025/sustainability-innovation என்ற இணையப்பக்கத்தை நாடலாம்.

