முழுநேர வேலை கொண்டிருப்பது ஒரு காலத்தில் நிதிச் சுதந்திரத்தை அடைவதற்கான முக்கியப் படியாகக் கருதப்பட்டது. ஆனால், இன்றைய இளம் சிங்கப்பூரர்கள் பலருக்கு, வழக்கமான மாதச் சம்பளம் கிடைப்பது நிதி ரீதியாகப் பாதுகாப்பான உணர்வைத் தருவதில்லை.
இளையர்களின் மாறிவரும் இந்த வாழ்க்கைக் கண்ணோட்டத்தை ‘டிலாய்ட்’ நிறுவனத்தின் மே 2026 ஆய்வு எடுத்துரைக்கிறது. சிங்கப்பூரில் கருத்துக்கணிப்பில் பங்கேற்ற ‘ஜென் ஸி’ பிரிவினரில் 49 விழுக்காட்டினருக்கும் ‘மில்லெனியல்’ பிரிவினரில் 59 விழுக்காட்டினருக்கும் அன்றாட வாழ்க்கைச் செலவினமே முதன்மையான கவலையாக உருவெடுத்துள்ளது.
இதனால் திருமணம் செய்துகொள்வது, குடும்ப வாழ்க்கையைத் தொடங்குவது, புதிய தொழில் தொடங்குவது போன்ற முக்கிய முடிவுகளைத் தள்ளிப்போட நேரிட்டதாக ‘ஜென் ஸி’ பிரிவினரில் 51 விழுக்காட்டினரும் ‘மில்லெனியல்’ பிரிவினரில் 50 விழுக்காட்டினரும் தெரிவித்துள்ளனர்.
சம்பளம் பெறுவது சொந்தக் காலில் நிற்க உதவியுள்ளதாக சந்தைப்படுத்தல் துறையில் நிர்வாகியாகப் பணிபுரியும் 25 வயது அஞ்சலி கிருஷ்ணன், தமிழ் முரசிடம் தெரிவித்தார். இருப்பினும், அவர் எதிர்பார்த்த அளவிலான நிதி நிலைத்தன்மையை அது இன்னும் வழங்கவில்லை.
“வளரும்போது, வேலை செய்யத் தொடங்கினால் பணத்தைப் பற்றிய கவலைகள் இருக்காது என்று நம்பினேன். ஆனால், ஒரு பொருளுக்கான தொகையைச் செலுத்த முடிவதற்கும், அதை எவ்விதப் பொருளியல் சிரமமும் இன்றி வசதியாக வாங்க முடிவதற்கும் இடையே பெரும் வேறுபாடு உள்ளது,” என்றார் அவர்.
அஞ்சலி தமது மாதச் சம்பளத்தில் ஒரு பகுதியைச் சேமித்துவிட்டு, மீதமுள்ள தொகையை அன்றாடச் செலவுகள், காப்புறுதி, பயணங்களுக்குப் பயன்படுத்துவதாகக் கூறுகிறார்.
“சில நேரங்களில் மாத இறுதியில் எனது வங்கிக் கணக்கைப் பார்க்கும்போது, பணம் முழுவதும் எங்கே போனது என்று வியப்பேன்,” என்றார் அவர்.
மென்பொருள் பொறியாளராகப் பணிபுரியும் 26 வயது காயத்ரி அன்புச்செல்வனைப் பொறுத்தவரை, நிதிப் பொறுப்புடன் இருப்பது என்பது தமக்கு விருப்பமான பொழுதுபோக்குகளை முற்றிலும் தவிர்ப்பதைக் குறிக்காது.
பயணங்கள், இசை நிகழ்ச்சிக்குச் செல்வது, நண்பர்களுடன் வெளியே சென்று உணவருந்துவது போன்றவற்றுக்கு அவர் செலவிடுகிறார். இத்தகைய செலவுகளை அவருடைய பெற்றோரால் எப்போதும் புரிந்துகொள்ள முடிவதில்லை என்றார் காயத்ரி.
“இவற்றைத் தவிர்த்தால் இன்னும் அதிகமாகச் சேமிக்க முடியும் என்பது எனக்குத் தெரியும். ஆனால், இன்னும் நிகழாத எதிர்காலத்திற்காகத் தயாராகிக்கொண்டே எனது இருபதுகளின் பொன்னான காலத்தை கழிக்க நான் விரும்பவில்லை,” என்றார் அவர்.
இருப்பினும், காயத்ரி மாதந்தோறும் குறிப்பிட்ட சேமிப்பு இலக்கை எட்ட முயல்கிறார். “இது ஒரு சமநிலையைக் கண்டறிவதைப் பொறுத்தது. வாழ்க்கையை ரசித்து வாழ்வதால் ஒருவரைப் பணம் தொடர்பானவற்றில் பொறுப்பற்றவர் என்று கூற முடியாது,” என்றார் அவர்.
இத்தகைய இளையர்களிடம் நிலவும் புதிய முன்னுரிமைகளை ‘டிலாய்ட்’ ஆய்வு மேலும் உறுதிப்படுத்துகிறது.
சிங்கப்பூர் ‘ஜென் ஸி’ பிரிவினரில் 81 விழுக்காட்டினர் தங்களின் வாழ்க்கைப் பாதையில் எப்போதாவது தலைமைப் பொறுப்புகளை ஏற்க விருப்பம் தெரிவித்தாலும், வெறும் 6 விழுக்காட்டினரே அதைத் தங்களின் முதன்மைத் தொழில் இலக்காகக் குறிப்பிட்டுள்ளனர். அதற்கு மாறாக, ‘ஜென் ஸி’ பிரிவினரில் 26 விழுக்காட்டினருக்கு நிதிச் சுதந்திரமே முதன்மை இலக்காக உள்ளது.
வாழ்க்கையின் பெரிய மைல்கற்களை நோக்கி நகரத் தொடங்கும்போது இத்தகைய சமநிலையைக் கையாள்வது மேலும் சவாலாகிறது.
மனிதவள மேலாளராகப் பணிபுரியும் 33 வயது ரா. அரவிந்தைப் பொறுத்தவரை, சொந்த வீடு வாங்குவது, திருமணத் திட்டங்களைத் தீர்மானிப்பதில் பணம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
“இவையெல்லாம் வேண்டாம் என்று நான் கூறவில்லை. ஆனால், இவற்றுக்கான செலவுகளைக் கணக்கிட்டுப் பார்க்கத் தொடங்கும்போது, அவற்றை எங்களால் தொடர்ந்து சமாளிக்க முடியுமா என்ற அச்சம் எழுகிறது,” என்றார் அவர்.
அரவிந்தின் கவலையைப் பிரதிபலிக்கும் வகையில், 2026 ஆகஸ்டில் வெளியான ‘யூகோவ்’ ஆய்வின் முடிவுகளும் அமைந்துள்ளன.
சிங்கப்பூரில் தங்களால் விரும்பிய தரத்தில் பிள்ளைகளை வளர்க்க இயலாது என்று 51 விழுக்காட்டினர் கருதுகின்றனர். இந்தக் கவலை திருமணமானவர்களிடையே 57 விழுக்காடாக உள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது.
குழந்தை வளர்ப்பு தங்களின் தற்போதைய வாழ்க்கைமுறையைப் பாதிக்கும் என்று 39 விழுக்காட்டினரும், தங்களின் பணி உயர்வு பாதிக்கப்படும் என்று 22 விழுக்காட்டினரும் அஞ்சுவதாகவும் ஆய்வு குறிப்பிடுகிறது.
பணியிடங்களில் கூடுதல் நெகிழ்வுத்தன்மை கொண்ட பணிச் சூழல் அமைந்தால், அது தங்களுக்குப் பெரும் ஆதரவாக இருக்கும் என்று யூகோவ் ஆய்வில் 55 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.
“ஒவ்வொரு முறையும் செலவுகளைப் பற்றி யோசிக்காமல், தேவையான தேர்வுகளைச் செய்யப் போதிய பொருளியல் நிதானம் இருப்பதே உண்மையான சுதந்திரம்,” என்று அஞ்சலி கூறினார்.


