தமது சமூகச் சேவைக்காக ‘இம்பார்ட்’ எனும் இளையர்நல ஆர்வலர் அமைப்பின் நிறுவனர் நரசிம்மன் திவாசிக மணி, அண்மையில் கௌரவிக்கப்பட்டார். 2024ஆம் ஆண்டின் ‘எஸ்டி’ சிங்கப்பூரருக்கான விருதுக்கு முன்மொழியப்பட்டோரின் பட்டியலில் இடம்பெற்றுள்ளார் இவர்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் ஏற்பாட்டில் யுபிஎஸ் நிறுவனம் வழங்கும் ‘எஸ்டி’ சிங்கப்பூரருக்கான விருது, சமூகத்திற்குப் பெரும் பங்காற்றியுள்ள நபர்களையும் சமூகத்தையும் சிறப்பித்து வருகிறது.
பிப்ரவரி 24ஆம் தேதியன்று நடைபெற்ற விருது நிகழ்ச்சிக்கு வருகைதந்து சிறப்பித்த அதிபர் தர்மன் சண்முகரத்னம், திரு நரசிம்மன் உட்பட இறுதிச் சுற்றில் இடம்பெற்ற எட்டு தரப்பினருக்கும் விருதை வழங்கினார். உடற்குறையுள்ளோரை வேலையில் அமர்த்தும் ‘ஃபோர் டிக்னிட்டி கிட்சன்’ (For Dignity Kitchen) நிறுவனர் கோ செங் சூன்னுக்கு ‘எஸ்டி சிங்கப்பூரர்’ விருது வழங்கப்பட்டது.
தற்போது 40 வயது நரசிம்மன், தொடக்கத்தில் சிங்கப்பூர் குடியரசு கடற்படையில் பணிபுரிந்தார்.
தமது 28வது வயதில் மருத்துவத்துறைக்கான நேர்முகத் தேர்வுக்கு திரு நரசிம்மன் அழைக்கப்பட்டிருந்தபோதும் பணிசார்ந்த காரணங்களால் அந்த நேர்முகத் தேர்வுக்குச் செல்ல முடியவில்லை.
இருந்தபோதும், திரு நரசிம்மன், மனம் தளராமல் மாற்று வழியைக் கையாண்டார். இளம் குற்றவாளிகளுக்கான புனர்வாழ்வு நடுவமாக உள்ள சிங்கப்பூர் சிறுவர் விடுதியில் (Singapore Boys’ Hostel) ஓராண்டு வேலை செய்ய முடிவு செய்தார்.
வேலையில் சேர்ந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆன பிறகு, அந்த வேலையில் தொடர்ந்து இருக்க ஆசைப்பட்டதாக திரு நரசிம்மன் கூறினார்.
“இளையர்களை நல்வழிப்படுத்தும் பணியே என் வாழ்நாள் பணி என்ற தெளிவு எனக்கு ஏற்பட்டது. என் குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாகத்தான் நான் இந்த முடிவை எடுத்தேன்,” என்றார் திரு நரசிம்மன்.
2015ல் சிறார் விடுதியில் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவர் ஜோஷுவா டேயைச் சந்தித்தார். அந்த விடுதியில் பணியாளர் பற்றாக்குறையை உணர்ந்த திரு டே, அந்த விடுதியிலேயே பணியாற்ற முடிவு செய்தார்.
புனர்வாழ்வு விடுதியில் தங்களின் ஆதரவோடு இருந்த இளையர்கள், வெளியில் ஆதரவின்றி மீண்டும் தவறிழைப்பதைப் பலமுறை இருவரும் கண்கூடாய்க் கண்டனர்.
“உண்மையைச் சொல்லப் போனால், எனக்கு அது மிகவும் கரடுமுரடான ஒரு காலகட்டம். இதைச் செய்துபார்க்க என் குடும்பத்தினர் எனக்கு ஆறு மாத காலம் அவகாசம் அளித்தனர்,” என்று அவர் கூறினார்.
இறுதியில் இவ்விருவரும் 2021ல், தங்களது அறநிறுவனத்திற்குத் தேவைப்படும் நிதியையும் முதலீட்டாளர்களையும் பெற்றனர். ‘இம்பார்ட்’ மூலமாக கிட்டத்தட்ட 1,400 இளையர்கள் உதவி பெற்றுள்ளதாகவும் இந்த அமைப்பின்வழி ஏறத்தாழ 1,000 தொண்டூழியர்கள் சேவையாற்றுவதாகவும் திரு நரசிம்மன் கூறினார்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இதழும் யுபிஎஸ் நிறுவனமும் அளித்துள்ள இந்த அங்கீகாரத்தால் தங்களது அறப்பணி பற்றிய விழிப்புணர்வு மேலும் பெருகியுள்ளதைக் கண்டு திரு நரசிம்மன் மகிழ்கிறார். பங்காளிகளாகவும் தொண்டூழியர்களாகவும் இந்த அமைப்பில் சேரும்படியும் இவர் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறார்.
இந்தச் சேவைக்காகத் தாம் செய்த தியாகங்கள் ஏராளம் என்றாலும் உறுதியுடன் தம் லட்சியப் பயணத்தைத் தொடர்வதாக திரு நரசிம்மன் கூறினார்.
“நாம் தோள்கொடுக்கும் ஒவ்வோர் இளையரின் உலகமும் மாறுகிறது. இந்த ஓர் உணர்வே, இப்பணியைத் தொடர்ந்து செய்வதற்கான உந்துதலை எனக்குத் தருகிறது,” என்று நரசிம்மன் கூறினார்.

