தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விளையாட்டு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த விழையும் இளையரணி

3 mins read

முழுமைத் தற்காப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தற்காப்பு அமைச்சு பல முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.

அதில் தன் பங்களிப்பாக இணைய விளையாட்டு ஒன்றை வடிவமைத்துள்ளார் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக கணித அறிவியல் உயர்நிலைப்பள்ளி மாணவர் சித்தார்த் தரணி, 17. 

முழுமைத் தற்காப்பு விழிப்புணர்வு முயற்சி தொடர்பில் அனுப்பப்பட்ட நூற்றுக்கணக்கான இணைய விளையாட்டு முன்மாதிரிகளில் இருந்து சிறந்த மூன்று வடிவமைப்புகளில் ஒன்றாக சித்தார்த், தன் நண்பர் வோங் யூ ஹெங்குடன் சேர்ந்து வடிவமைத்த விளையாட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 

இருவரும் தங்கள் பள்ளியின் தேசிய மாணவர் படையுடன் இணைந்து வடிவமைத்த கோபுரத் தற்காப்பு விளையாட்டு ஜூன் 21ஆம் தேதி வெளியிடப்பட்டது. 

சித்தார்த் சிறுவயதிலிருந்தே இணைய விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டவர். பின்னாளில் அவருக்கு விளையாட்டுகளின் வடிவமைப்பில் ஆர்வம் ஏற்பட, அது தொடர்பான திறன்களை வளர்த்துக்கொள்ளத் தொடங்கினார்.

எதையும் விளையாட்டாக அணுகும் இளையரிடம் முழுமைத் தற்­காப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு வேடிக்கையான இணைய விளையாட்டே சிறந்த வழி எனக் கருதி, தன் எண்ணத்திற்கு வடிவம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார் சித்தார்த். 

அவர் வடிவமைத்த விளையாட்டு, எதிரியின் செயல்பாடுகளுக்கு எதிராக சிங்கப்பூரைப் பாதுகாப்பதாக அமைந்தது.

ராணுவத் தற்காப்பு, குடிமைத் தற்காப்பு, பொருளியல் தற்காப்பு, சமுதாயத் தற்காப்பு, மின்னிலக்கத் தற்காப்பு, உளவியல் தற்காப்பு என முழுமைத் தற்காப்பின் ஆறு அம்சங்களையும் வெளிக்கொணரும் வகையில் இந்த விளையாட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 

சிங்கப்பூர்  நகரத்தைப்போல் வடிவமைக்கப்பட்டுள்ள முகப்பில் நுழைந்ததும் எதிரிகள் உள்நுழையத் தொடங்குவார்கள். இணையத் தாக்குதல், பயங்கரவாதத் தாக்குதல், பொருளியல்  சிக்கல், சமூக மோதல் எனப் பல சம்பவங்கள் நிகழத் தொடங்கும். அதிலிருந்து சிங்கப்பூரைத் தற்காப்பதற்கு உரிய கூறுகளை உரிய இடத்தில் அமைத்து எதிரிகளை வீழ்த்துவதே இந்த விளையாட்டின் நோக்கம்.

இந்த விளையாட்டு சிங்கப்பூரைத் தற்காப்பதில் ஒவ்வொருவருக்கும் உள்ள பங்கைக் கோடிட்டுக் காட்டுகிறது.

இதில் ஈடுபட்டதை, இணைய விளையாட்டு வடிவமைப்பிற்கான தொழில்நுட்பத் திறன்களை வளர்த்துக்கொள்ள தனக்குக் கிடைத்த வாய்ப்பாகவே சித்தார்த் கருதுகிறார்.

இந்தப் போட்டிக்காக ஓராண்டு காலத்தில் ஏறத்தாழ 300 மணி நேரத்திற்குமேல் பல மாணவர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டனர். அப்போது குழு நிர்வாகம், தொழில்நுட்ப அறிவு, உயிரோவியம் எனப் பலவற்றை இணைத்து கற்றுக்கொண்டது மகிழ்ச்சியாக இருந்ததாக சித்தார்த் சொன்னார்.

“தேசப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக்காக நாங்கள் பல மாதங்களாகக் கண்ட கனவு, வடிவம் பெற்றிருப்பது பெருமைக்குரியது,” எனக் குறிப்பிட்ட சித்தார்த், தற்காப்பு அமைச்சு, ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனத் தங்களின் முயற்சிக்கு பலரும் உறுதுணையாக இருந்ததைக் குறிப்பிட்டார்.

“தொழில்நுட்பத் துறையில் ஆர்வமுள்ள மாணவர்கள் தொடர்ந்து இணையத்தில் பல்வேறு தளங்களிலும் உள்ள தகவல்களைப் பயன்படுத்தி, தங்களது அறிவாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும். உரிய வாய்ப்புகளைக் கண்டடைந்து, கிடைக்கும் வாய்ப்புகளைச் சரியான முறையில் பயன்படுத்தித் தங்கள் திறமைகளை அவர்கள் வெளிக்கொணர வேண்டும்,” என்றார் அவர்.

சித்தார்த் மற்றும் அவரின் குழுவினர் பற்றி குறிப்பிட்ட நெக்ஸஸ் சமூக ஈடுபாட்டு இயக்குநர் மூத்த லெப்டினன்ட் கர்னல் சால்ம் லியூ, “சித்தார்த் அணியினரின் உற்சாகமும் ஆர்வமும் கடின உழைப்பும் வியப்பளிப்பதாக இருந்தது. இளையர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அவர்கள் எடுத்துள்ள முயற்சி வெற்றி அடையும்,” என்றார்.

இயற்பியல், கணினி அறிவியல் துறையில் சாதிக்க வேண்டும் என்ற இலக்கைக் கொண்டிருக்கும் சித்தார்த்தின் தற்போதைய செயல்திட்டம், இவ்விளையாட்டை நிரந்தரச் செயலியாக அறிமுகப்படுத்துவதும் மேம்படுத்துவதுமே.

குறிப்புச் சொற்கள்