உனக்குள் யார்: நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்கள் படைக்கும் மேடை நாடகம்

உனக்குள் யார்: நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்கள் படைக்கும் மேடை நாடகம்

படம்: கிருஷ்மிதா ஆர். மூர்த்தி

29 Jun 2023 - 6:11 pm

1 mins read

நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி நடத்தவிருக்கும் ‘ஆர்ட்ஸ் ஃபியெஸ்டா 2023’ விழாவின் ஓர் அங்கமாக தொழிற்கல்லூரியின் இந்திய கலாசார மன்றம் ‘உனக்குள் யார்’ என்ற மேடை நாடகத்தைப் படைக்கவிருக்கிறது.

இயல்பு வாழ்க்கையில் மனிதர்கள் எதிர்கொள்ளக் கூடிய சவால்களையும் உணர்வுகளையும் ‘உனக்குள் யார்’ ஆராயும்.

‘குடும்ப உறவுகளின் சித்திரிப்பு அனைவரும் தங்களைத் தொடர்புபடுத்திக் கொள்ளும்படி அமைந்திருக்கும்,’ என்று நாடகத்தில் நடிக்கவிருக்கும் மன்ற உறுப்பினர் விஐயஶ்ரீ ஈஸ்வரன் கூறினார்.

ஆத்திசூடியிலிருந்து எடுக்கப்பட்ட சில கருப்பொருள்கள் நாடகத்தில் பயன்படுத்தப்படும்.

இக்கட்டான சூழல்களில் முடிவெடுக்கும் தெளிவு, விடாமுயற்சி, பொறுப்புணர்வு போன்ற பண்புகளின் முக்கியத்துவத்தை பார்வையாளர்களிடம் எடுத்துக்கூறுவதே இந்நாடகத்தின் நோக்கம் என்று அதன் இயக்குநரும் மன்றத்தின் துணைத் தலைவருமான கிருஷ்மிதா ஆர். மூர்த்தி கூறினார்.

“கதை, திரைக்கதை, இயக்கம், மேடை அலங்காரம், மேடை நிர்வாகம், ஒப்பனை, தளவாடம் எனப் பல பிரிவுகளையும் நிர்வாகம் செய்வது சவாலாக இருந்தாலும் இந்த அனுபவம் பல பாடங்களையும் திருப்தியையும் கொடுத்துள்ளது,” என்றார் நாடகத்தின் மேடை ஒருங்கிணைப்பாளரும் மன்ற ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான சையது பக்கீர் முகம்மது சைனுல் பானு.

ஆட்டம், பாட்டம், நாடகம் எனப் பல அம்சங்களின் கலவையாக அரங்கேறவிருக்கிறது இந்நாடகம்.

50க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கும் ‘உனக்குள் யார்’ நாடகம், ஜூலை 6ஆம் தேதி நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் நடக்க உள்ளது.

குறிப்புச் சொற்கள்
இளையர்சிங்கப்பூர்