சமூகப் பணியில் ஆர்வங்கொண்ட தொழிற்கல்லூரி இளையர்கள்

4 mins read
6592cec7-d224-4c70-9f8a-1d896614069d
குழந்தை வேலுடையார் செந்தில்குமார் கெளதம். - படம்: பே.கார்த்திகேயன்

இன்றைய காலகட்டத்தில் இளைய தலைமுறையினர் தங்களின் கல்வியின் மீது மட்டும் கவனம் செலுத்தாது பிறர் நலன் பேணும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர். அவ்வாறு நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்கள் இருவரின் சமூகப் பணிகளை அடையாளங்காணும் வகையில் அண்மையில் விருது பெற்றிருந்தனர்.

கல்வித் தொண்டு அமைப்பை நடத்தும் கௌதம்

கல்வி, இணைப்பாட நடவடிக்கைகளுடன் சமூகப் பணியிலும் சிறந்து விளங்கும் 18 வயது குழந்தை வேலுடையார் செந்தில்குமார் கெளதம், நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியின் இந்த ஆண்டுக்கான ‘சேர்மன்’ விருதை வென்றுள்ளார். ஜூலை 13ம் தேதி நடைபெற்ற விழாவில் அவர் இவ்விருதைப் பெற்றார்.

உயர்நிலைப் பள்ளிக் காலத்தில் ‘லியோ கிளப்’ எனும் சமூக சேவை அமைப்பில் தொண்டாற்றிய கெளதம், ‘கூல் சயன்ஸ் இன்டர்நேஷனல்’ எனும் லாபநோக்கமற்ற அமைப்பை நண்பர்களுடன் சேர்ந்து தொடங்கினார்.

விவாதப் போட்டிகளிலும் ஆர்வமுள்ள கௌதமுக்கு ஐக்கிய நாட்டுச் சபையின் பாவனைக் கலந்துரையாடலில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் கல்வி உள்ளிட்ட சமூக வளர்ச்சிக்கான தலைப்புகளை விவாதித்து, உரிய தீர்வுகளை முன்வைத்தபோது, தீர்வுகள் கோட்பாடுகளாகவே இருப்பதால் பயன் இல்லை என்று உணர்ந்தார். உலகெங்கிலும் பல மில்லியன் குழந்தைகள் கல்வி பயிலாமல் இருக்கின்றனர், அதற்கான காரணம் என்ன, அதை மாற்ற என்ன வழி போன்ற கேள்விகள் அவருக்குள் எழுந்தன. அதுவே இந்தத் தொண்டு அமைப்பைத் தொடங்கக் காரணமாக அமைந்தது.

தனிப்பட்ட ஒருவரின் வளர்ச்சிக்கும் சமூக வளர்ச்சிக்கும் கல்வியே சிறந்த பாதையாக இருக்க முடியும் என்று கருதிய இவர், கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறுவதையும் கல்வி தொடர்பான சேவைகள் ஆற்றுவதையும் இந்த அமைப்பின் மூலம் மேற்கொள்கிறார்.

தலைமைத்துவப் பண்பு, மேடைப்பேச்சு உள்ளிட்ட வாழ்க்கைத் திறன் பயிலரங்குகளையும் இவ்வமைப்பின் மூலம் மேற்கொள்கிறார். பிலிப்பீன்ஸ், இந்தோனீசியா, மலேசியா முதலிய நாடுகளில் உள்ள நண்பர்களை இணைத்து புவி வெப்பமயமாதல் போன்ற உலகளாவிய பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்குகளையும் வழிநடத்துகிறார்.

அமைப்பைத் திறம்பட நடத்த மனிதவள நிர்வாகம், தொண்டு நிறுவன நெறிமுறைகள் தொடர்பான பண்புக்கூறுகளைக் கற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்ட கெளதம், “படிப்போடு, சமூக சேவையிலும் தீவிர ஈடுபாடு செலுத்த நேர நிர்வாகம் மட்டும் போதாது,” என்றார்.

நண்பர்கள், குடும்பத்தினரின் ஆதரவு, கொள்கை, அதன் மீதான ஈடுபாடு ஆகியவை காரணமாகவே தன்னால் இரண்டையும் சமாளிக்க முடிவதாகக் கூறினார்.

உயர்நிலைப் பள்ளி காலத்தில் மிகக்குறைந்த மதிப்பெண்கள் பெற்று வந்த இவர், ஆசிரியர் பெர்னாண்டஸ் அளித்த ஊக்கத்தால் வகுப்பில் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றார். தற்போது முதல் 30 மாணவர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.

தன்னைப் போன்றவர்களை ஊக்குவித்து முன்னேற்றுவதே தன் அமைப்பின் நோக்கம் என்றார் கௌதம்.

இந்த அமைப்பை எதிர்காலத்தில் ஓர் அறக்கட்டளையாக மாற்றத் திட்டமிட்டுள்ள கௌதமிற்கு, இதய அறுவை சிகிச்சை மருத்துவராக வேண்டும் என்ற கனவும் உள்ளது.

சமூக விழிப்புணர்வுக்காக ஏற்பாடு செய்யப்படும் மராத்தான் ஓட்டங்களில் பங்குபெற்று, தானும் பங்காற்ற முனைகிறார்.

“நீங்கள் கற்றுக்கொண்டதை அடுத்தவருக்குச் சொல்லிக் கொடுங்கள், அவர்களையும் அடுத்தவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும்படி சொல்லுங்கள், இம்முறையில் கற்றல் சுழற்சி ஏற்பட்டு மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும்,” என்றார் கெளதம்.

பின்தங்கிய இளையர்களுக்கு உதவும் கிளாடியா

கிளாடியா ரூத் செல்வகுமார்.
கிளாடியா ரூத் செல்வகுமார். - படம்: பே. கார்த்திகேயன்

நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் சமூக சேவைப் படிப்பை மேற்கொண்டுள்ள 21 வயது கிளாடியா ரூத் செல்வகுமார் சிறந்த சமூக ஈடுபாட்டாளருக்கான விருதைப் பெற்றுள்ளார்.

சிறுவயதில் திறன்களை வளர்த்துக்கொள்ள தனக்குப் பல்வேறு வாய்ப்புகள் கிடைத்தபோதும் பின்தங்கிய மாணவர்கள் பலருக்கு அவ்வாறு கிடைக்காததை அவர் அறிந்தார். அதனால் வேலைவாய்ப்புகளை அவர்கள் கண்டறிவதற்கான உதவிகளைச் செய்கிறார்.

தொழில்நுட்பக் கல்வி பயின்ற காலத்தில், மாணவர் அமைப்பில் இணைந்து பல்வேறு கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளார்.

சமூக சேவையில் கொண்டுள்ள ஈடுபாடு காரணமாக, தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் கணினியியல் படிப்பு பயின்ற இவர், பலதுறைத் தொழில் கல்லூரியில் சமூக சேவைத் துறைக்கு மாறினார். லாப நோக்கமற்ற சமூக இயக்கமான ‘ஆக்சஸ்’ நிறுவனத்தின் தொடர்புத் துறையில் தொண்டாற்றும் கிளாடியா, மாணவர்களுக்கு வழிகாட்டிகளை அறிமுகம் செய்யும் தொடர்புத்துறையில் பங்காற்றி வருகிறார்.

மாணவர்கள் பிடித்த வாழ்க்கையை உருவாக்கிக்கொள்வதே சிறந்த சமூகத்திற்கு அடித்தளமிடும். அவ்வாழ்க்கையை உருவாக்கப் பங்காற்ற வேண்டும் என்பது இவரின் விருப்பம்.

மேலும், மனநல விழிப்புணர்வைப் பரவலாக்கும் நோக்குடன், ‘டெலிகிராம்’ தளம் மூலம் இயங்கிவரும் தனது சேனலில் மனநல மேம்பாட்டுக்கான வழிமுறைகள், ஊக்கத்துடன் செயலாற்றுவதற்கான குறிப்புகள் ஆகியவற்றைப் பகிர்ந்து வருகிறார். 400க்கும் மேற்பட்டோர் இதன்வழி பலனடைந்தும் வருகின்றனர்.

எதிர்காலத்தில் சமூக சேவை அமைப்பு ஒன்றைத் தொடங்க வேண்டும் என்பதே கிளாடியாவின் குறிக்கோள்.

குறிப்புச் சொற்கள்