‘மறுபடியுமா?’ - நக்‌ஷத்திராவின் பத்தாவது மேடை நாடகம்

‘மறுபடியுமா?’ - நக்‌ஷத்திராவின் பத்தாவது மேடை நாடகம்

படம்: ஏற்பாட்டுக் குழு

24 Jul 2023 - 5:30 am

2 mins read

நகைச்சுவை கலந்த மர்ம நாடகத்தைக் காண வந்திருந்தோரை மீண்டும் மீண்டும் சிரிக்க வைத்தது ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி இந்திய கலாசார குழுவின் பத்தாவது நக்‌ஷத்திரா மேடை நாடகம், ‘மறுபடியுமா?’.

ஆடலும் பாடலும் கலந்த இந்த நிகழ்ச்சி, கடந்த 14ஆம், 15ஆம் தேதிகளில் ரிபப்ளிக் கலாசார நிலையத்தில் நடந்தது. ‘தி ரியல் இன்ஸ்பெக்டர் ஹவுண்ட்’ என்ற ஆங்கில நாடகம், தமிழ் பிரியரான திரு சௌந்தரராஜன் ஜீவாவால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு மேடை ஏற்றப்பட்டது. 

இரு நாடக விமர்சகர்கள் ஒரு மர்ம நாடகத்தை ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கும்போது உண்மையில் ஒரு கொலை நடந்துவிடுகிறது. அந்த நாடகத்திற்குள் மாட்டிக்கொண்டு எப்படி சிக்கித் தவிக்கிறார்கள் என்பது தான் கதை. 

ஒலிவாங்கி இல்லாமலேயே நடிகர்கள் தங்களின் கம்பீரக் குரலால் வந்திருந்தோரை மகிழ்வித்தனர். மர்மம் நிறைந்த கதை எல்லாரையும் கட்டிப்போட்டதோடு அதன் நகைச்சுவையான வசனங்கள் வயிறு குலுங்க சிரிக்க வைத்தன. 

முன்னாள் மாணவரான ஹரிந்திரன் தமிழ்மாறனும் தொலைக்காட்சி பிரபலம் திரு எபி சங்கராவும் இந்நாடகத்தைச் சேர்ந்து இயக்கினர். 

இதுவரை கதைகளைப் புதிதாக எழுதி மேடையேற்றிய நக்‌ஷத்திரா, ஒரு தழுவலை மொழிபெயர்த்து மேடையேற்றுவது இதுவே முதல் முறை என்றார் இயக்குநர் ஹரிந்திரன். 

“ஒரு முன்னாள் மாணவராக நான் புதிய மாணவர்களுடன் உரையாடி அவர்களின் தேவைகளையும் ஆற்றல்களையும் எதிர்பார்ப்புகளையும் புரிந்துகொண்டு இக்கதையை புதுப்பித்தோம்,” என்றார் ஹரிந்திரன். 

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மேடை நாடகம் அனுபவமில்லாத மாணவர்களுடன் நக்‌ஷத்திராவை மேடையேற்றுவது சற்று தயக்கத்தை ஏற்படுத்தியபோதும் மாணவர்களின் கடும் உழைப்பையும் விடாமுயற்சியையும் கண்டு தான் வியந்து போனதாக திரு எபி குறிப்பிட்டார். 

“ஒரு பள்ளிக்கான மேடை நாடகத்தை இயக்குவது எனக்கு இதுவே முதல் முறை. இந்த பயணம் மூலம் பலவற்றை நான் கற்றுக்கொண்டதோடு மாணவர்களின் திறன்களைக் கண்டறிந்து அவற்றை மேம்படுத்த உதவியுள்ளேன் என்று நம்புகிறேன்,” என்றார் திரு எபி. 

முன்னாள் மாணவர்களின் ஆதரவும் உதவியும் இந்த நாடகத்திற்கு உறுதுணையாக இருந்ததாகவும் கூறப்பட்டது. 

இதில் முதல் முறையாக குழுவை வழிநடத்தி நாடகத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் குழுவின் தலைவர் லோகேஷ்வரன் சிவானந்தன். இவர் தன் குழுவின் உழைப்பையும் பாராட்டிப் பேசினார். 

“நக்‌ஷத்திராவின் பத்தாவது நிகழ்ச்சியை வழிநடத்தியதில் எனக்கு பெருமை. வேலை, வகுப்புகள், தனிப்பட்ட வாழ்க்கை, நாடக ஒத்திகைகள் போன்ற பொறுப்புகளை ஒரே நேரத்தில் கையாளக் கற்றுக்கொண்டோம்,” என்றார் லோகேஷ்வரன். 

சக மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், குடும்பங்கள், நண்பர்கள் என இரு நாள்களிலும் மக்கள் திரண்டு வந்து இந்நாடகத்துக்கு ஆதரவளித்ததையும் இவர் பகிர்ந்துக்கொண்டார்.

ஒரு மேடை நாடகத்தைத் தயாரிக்கத் தேவையான நுணுக்கங்களை இந்த பயணம் மூலம் கற்றுக்கொண்டதைப் பகிர்ந்துகொண்டார் நாடகத்தின் தயாரிப்பாளர் ஷக்கிரா ஷபானா. 

“உடை, நடனம், அலங்காரங்கள், ஒலி, ஒளி, தொழில்நுட்பம் என்ற மேடை நாடகத்திற்குத் தேவையான பல்வேறு அம்சங்களை அறிந்ததோடு முன் அனுபவமில்லாத நாங்கள், பல சவால்களை ஒற்றுமையாக எதிர்கொண்டதில் பெருமையடைகிறோம்,” என்றார் ஷக்கிரா. 

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்இளையர்