சொந்த தாத்தா பாட்டிகளைக்கூட சிறப்பு அக்கறை எடுத்து பராமரிக்கத் தயங்குவோர் இடையில் மூத்தோருக்கு ஆதரவு தரும் இளையர்கள் தொடர்ந்து பிறருக்கு முன்னுதாரணமாக விளங்குகின்றனர்.
தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் சமூக நிறுவனத்துடன் தொண்டூழியம் செய்து வருகின்றனர் இளையர்களான கிரிஷ்ணவ் கோயல், நயனா உமாசங்கர்.
“சிறு வயதில் படுத்த படுக்கையாக இருந்த என் தாத்தாவைக் கண்டு, மூத்தோருக்கு ஆதரவாக இருக்கவேண்டும் என்று எண்ணினேன். சிங்கப்பூர் மூப்படையும் சமுதாயமாக இருக்கையில் நம்மில் பலர் அவர்களுக்கு உதவும் எண்ணம் கொண்டிருக்கவில்லை,” என்று குறிப்பிட்டார் கிரிஷ்ணவ், 17.
தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி சுகாதாரம்) சமூக அமைப்பு மூலம் இசையில் இருக்கும் தன் ஆர்வத்தை மூத்தோருக்கு பயனுள்ள வகையில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் இறங்கினார் கிரிஷ்ணவ்.
10 ஆண்டுகளாக கிட்டார் வாசித்து வரும் கிரிஷ்ணவ் தன் வயதான அண்டை வீட்டுக்காரர், நண்பர்கள் சிலருடன் இசைக்குழு அமைத்து வாசிப்பதை பார்த்து வியந்தார்.
இசை மூலம் மூத்தோர் மகிழ்ச்சியான தருணங்களைப் பெறலாம் என்பதை உணர்ந்த கிரிஷ்ணவ் ‘ஈஸ்டர் கிட்டார்’ திட்டத்தைத் தொடங்கினார்.
“தொண்டூழியம் ஆற்றிய அனுபவத்திலிருந்து இறுதியில் கிடைக்கும் வெற்றியை விட நாம் சென்ற பாதை தரும் நினைவுகள் தான் முதன்மையானவை என்பதை கற்றுக் கொண்டேன். எந்த தடங்கல் வந்தாலும் ஒவ்வொரு முறையும் மூத்தோருக்கு இன்பமான அனுபவம் கிடைப்பதை உறுதி செய்வதுதான் முக்கியம்,” என்று பகிர்ந்துகொண்டார் கிரிஷ்ணவ்.
வடிவமைப்புத் துறையில் பயின்று வரும் கிரிஷ்ணவ், எதிர்காலத்தில் மூத்தோருக்கு உதவியாக அமையும் சேவைகளையும் பொருட்களையும் தயாரிக்க ஆசைப்படுகிறார். ஒரு பொருளைக் கொண்டு ஆயிரம் மூத்தோரின் வாழ்வை மேம்படுத்த முடியும் என்று நம்புகிறார் கிரிஷ்ணவ்.
தொடர்புடைய செய்திகள்
ஹார்ட்பீட்@பிடோக் முதியோருக்கான பகல்நேரப் பராமரிப்பு நிலையத்தின் மேலாளர் சாண்டி நியோ, “கிரிஷ்ணவ் பெரும் உதவியாக இருந்துள்ளார். நேரடியாக இசையை முதியவர்களுக்கு கொண்டு சேர்த்து அவர்களுக்குச் சிறப்பாக கற்றுக் கொடுத்தார். இதர ஊழியர்களிடமும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் கிரிஷ்ணவ்,” என்று கூறினார்.
“தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (சுகாதாரம்) சமூக அமைப்புடன் தொண்டூழியம் செய்துவந்தது மனநிறைவு தந்துள்ளது. பல புதிய மனிதர்களைச் சந்தித்துள்ளேன். அவர்களிடமிருந்து பல வாழ்க்கை அனுபவங்களைக் கற்றுக்கொண்டேன்,” என்று தெரிவித்தார் நயனா, 17.
“மற்ற மனிதர்களின் வாழ்வில் எழுந்துள்ள பிரச்சினைகள் அனைத்தையும் தெரிந்துகொள்ள இயலாது. எனவே, இரக்க உணர்வு, பரிவு போன்ற விழுமியங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என உணர்ந்தேன்,” என்று கூறினார் நயனா.
“கல்வியிலும் தொண்டூழியத்திலும் கவனம் செலுத்துவது கடினமாக இருந்தாலும் நேர நிர்வாகத்தில் கவனம் செலுத்தி அதிக சோர்வடையாமல் என் வேலைகளில் ஈடுபட்டேன். தேர்வுகள் நெருங்கும் வேளையில் மனவுளைச்சல் அதிகரிக்கும். அந்நேரத்தில் இங்கு வந்து வசிப்போருடன் நேரம் செலவிடுவது பாதிப்பிலிருந்து இடைவெளி தருகிறது,” என்று பகிர்ந்துகொண்டார் நயனா.
நாயனாவுடன் பணியாற்றியுள்ளார் தேசிய தொழிற்சங்க காங்கிரஸ்(சுகாதாரம்) மூத்த நிர்வாகி இனெஸ் ஓ பீ லெங். “முதல் நாளிலிருந்தே, நயனா குடியிருப்பாளர்களுக்குத் தோழமை, ஆதரவை வழங்குவதில் உண்மையான ஆர்வத்தைக் காட்டினார். அவருடைய அன்பான புன்னகையும் நட்பான நடத்தையும் உடனடியாக அனைவரையும் கவர்ந்தது,” என்று பாராட்டினார் இனெஸ்.
கிரிஷ்ணவும் நயனாவும் தொடர்ந்து தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசின் சுகாதார அமைப்புடன் சேர்ந்து மூத்தோருக்கு ஆதரவாகவும் நல்ல நண்பர்களாகவும் திகழ உறுதிபூண்டுள்ளனர்.
sabitha@sph.com.sg

