தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தயக்கமின்றி தமிழில் பேச வித்திட்ட ‘தமிழே! அழகே!’

2 mins read
67512a40-46f5-4bda-8251-5de3eb19304d
‘தமிழே! அழகே!’ தமிழ்ப் பேச்சுப் பயிலரங்கில் பங்குபெற்ற மாணவர்களுடன் பயிற்றுவிப்பாளர் இலக்கியா செல்வராஜி, 32 (நடுவில்). - படம்: ‘தமிழ் அருவி’

பிரதான விழா 2018இன் சிறந்த தகவல் நிகழ்ச்சிப் படைப்பாளர் இலக்கியா செல்வராஜி ‘தமிழே! அழகே!’ எனும் நான்கு மணி நேரப் பயிலரங்கை, சனிக்கிழமை (செப்டம்பர் 9) தேசிய நூலகத்தில் நடத்தினார்.

தமிழ் இளையர் விழாவில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு 40 உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பதிவுசெய்திருந்தனர்.

தமிழில் சரளமாக, இயல்பாகப் பேசும் உத்திகளைக் கற்றுக்கொடுத்த பயிலரங்கில் நான்கு முக்கிய நடவடிக்கைகள் நடைபெற்றன.

ஒருவர் முதன்முதலில் அறிமுகமாகும்போது அவரது பெயருக்குக் கூர்ந்து செவிசாய்ப்பதன் அவசியத்தை இலக்கியா செல்வராஜி வலியுறுத்தினார்.
ஒருவர் முதன்முதலில் அறிமுகமாகும்போது அவரது பெயருக்குக் கூர்ந்து செவிசாய்ப்பதன் அவசியத்தை இலக்கியா செல்வராஜி வலியுறுத்தினார். - படம்: ரவி சிங்காரம்

முதலில் நடந்த ‘நீயா? நானா?’ சுற்றில் உடனடியாகப் பேச மாணவர்கள் பயின்றனர். ‘தயாராகு, உள்வாங்கு, கோவையாக்கு, பேசத் தொடங்கு, முடித்துவிடு’ எனும் பேச்சு அணுகுமுறையையும் கற்றுக்கொண்டனர்.

‘சர்ருன்னு பேசலாமா?’ சுற்றில் மாணவர்கள் நால்வர் கொண்ட அணிகளாக பிரிக்கப்பட்டனர். ஒவ்வோர் அணியும் விரும்பிய தலைப்பைத் தேர்ந்தெடுத்து, தயாரித்து ஆளுக்கு ஒரு நிமிடம் பேசினர்.

‘சர்ருன்னு பேசலாமா?’ சுற்றில் மாணவர்கள் ஒரு தலைப்பில், ஆளுக்கு ஒரு நிமிடம் முன்பு பேசியவரின் கருத்துகளைத் திரும்பக் கூறாமல் கோவையாக பேசப் பயின்றனர்.
‘சர்ருன்னு பேசலாமா?’ சுற்றில் மாணவர்கள் ஒரு தலைப்பில், ஆளுக்கு ஒரு நிமிடம் முன்பு பேசியவரின் கருத்துகளைத் திரும்பக் கூறாமல் கோவையாக பேசப் பயின்றனர். - படம்: ரவி சிங்காரம்

இதன்வழி, ஒவ்வொரு பேச்சாளரும் புதிய கருத்துகளை முன்வைத்து, தலைப்பையொட்டி அணியினருடன் கோவையாகப் பேசக் கற்றுக்கொண்டனர்.

மூன்றாம் சுற்றில் விரைவாக மாறும் தலைப்புகளில் குறுகப் பேசி ஒருவரையொருவர் மதிப்பிட்டனர்.

மூன்றாம் சுற்றில் மாணவர்கள் தங்கள் குழுவினரை மதிப்பிட்டனர். ஒவ்வொரு சுற்றுக்குப் பிறகும் தங்களுக்குப் பிடித்த பேச்சாளர்களைத்  தேர்ந்தெடுத்தனர்.
மூன்றாம் சுற்றில் மாணவர்கள் தங்கள் குழுவினரை மதிப்பிட்டனர். ஒவ்வொரு சுற்றுக்குப் பிறகும் தங்களுக்குப் பிடித்த பேச்சாளர்களைத் தேர்ந்தெடுத்தனர். - படம்: ரவி சிங்காரம்

இறுதியாக, ‘ஒரு கை பார்க்கலாமா?’ சுற்றில் மாணவர்கள் தமிழில் பேசுவதில் சந்திக்கும் சவால்களையும், அவற்றைச் சமாளிக்கப் பெற்றுள்ள உதவிகளையும், தமிழ்ப் பேச்சு சார்ந்த எதிர்கால இலட்சியங்களையும் பகிர்ந்தனர்.

“ஒரு தலைப்பில் பல கருத்துகள் தோன்றும். எவ்வாறு பிறர் சலிப்படையாத வகையில் புதிய கருத்துகளைத் தேர்ந்தெடுத்துச் சொல்வது எனக் கற்றுக்கொண்டேன்,” என்றார் கிரசெண்ட் பெண்கள் பள்ளியின் அட்சயஸ்ரீ, 14.

எழுத்துக்கும் பேச்சுக்கும் உள்ள தொடர்பு, இரண்டிற்கும் முன்னுரை, மையக் கருத்து, முடிவுரை இருப்பதை பயிலரங்குவழி கற்றுக்கொண்டதாக ராஃபிள்ஸ் கல்வி நிலைய மாணவர் சூரஜ், 15 கூறினார்.

பயிலரங்குமூலம் அதிகம் பயன்பெற்று, சிறப்பாகப் பங்களித்த மூன்று மாணவர்களுக்குப் பற்றுச்சீட்டுகளும் பங்குபெற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

பயிலரங்குமூலம் அதிகம் பயனடைந்த யூனிடி உயர்நிலைப் பள்ளி மாணவி இளமாறன் தாரிணி (13)​ முதல் பரிசை வென்றார்.
பயிலரங்குமூலம் அதிகம் பயனடைந்த யூனிடி உயர்நிலைப் பள்ளி மாணவி இளமாறன் தாரிணி (13)​ முதல் பரிசை வென்றார். - படம்: ரவி சிங்காரம்

“இப்பயிலரங்கின் சுவாரசியமான நடவடிக்கைகளின்மூலம் தமிழில் துணிச்சலாக, தெளிவாக, சரளமாகப் பேசக் கற்றுக்கொண்டேன்,” என்றார் முதல் பரிசை வென்ற யூனிடி உயர்நிலைப் பள்ளி மாணவி இளமாறன் தாரிணி, 13.

மொத்தத்தில், தமிழில் பேசுவதற்கான தயக்கத்தைத் தகர்த்தெறிய இப்பயிலரங்கு பெரிதும் கைகொடுத்ததாக, கலந்துகொண்ட மாணவர்கள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்