தொழில்நுட்பம், கலை, பண்பு ஆகியவற்றில் சிறந்து விளங்கும் கல்யாணி அழகப்பன், 22, தன் சிறுவயது நாட்டத்தை சீரிய முறையில் செயலாக்கிவருகிறார்.
அக்டோபர் 12ஆம் தேதி நடைபெற்ற சிங்கப்பூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (எஸ்ஐடி) பட்டமளிப்பு விழாவில், ‘எஸ்ஐடி’, ‘டிஜிபென்’ இணைந்து வழங்கும் மின் இயந்திரவியல் அமைப்புகள் படிப்பில் சிறப்புத் தேர்ச்சியோடு கெளரவநிலைப் பட்டத்தையும் இவர் பெற்றார்.
கல்வி, தலைமைத்துவத்தில் முன்னுதாரணமாகத் திகழ்ந்ததோடு, ‘எஸ்ஐடி’க்கும் சமூகத்திற்கும் பங்காற்றியதற்காக, ‘ரோட் & ஷ்வார்ஸ்’ தலைசிறந்த மாணவர் விருதையும் பெற்றார் கல்யாணி.
தற்போது, ‘எஸ்டி லாஜிஸ்டிக்ஸ்’ வழங்கும் உபகாரச் சம்பளத்தில் ‘எஸ்ஐடி’யிலேயே தொழில்துறை முதுநிலைப் பட்டம் பயிலத் தொடங்கியுள்ளார் இவர்.
அதேநேரத்தில், ‘எஸ்டி லாஜிஸ்டிக்ஸ்’சில் புத்தாக்க நிபுணராகப் பணியாற்றும் இவர் செயலிகளை உருவாக்கிவருகிறார்.
சிறுவயதுக் கனவு
“என் தந்தை சிறுவயதில் பொறியியல் சார்ந்த விளையாட்டுப் பொருள்களை வாங்கிக் கொடுப்பார்.
“அவரும் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுவதால் தன் அனுபவங்களைப் பகிர்ந்து எனக்குள் ஆர்வமூட்டினார்,” எனத் தன் தொழில்நுட்பப் பயணத்தின் தொடக்கத்தை நினைவுகூர்ந்தார் கல்யாணி.
‘குளோபல் இண்டியன்’ அனைத்துலகப் பள்ளியில் படித்த கல்யாணி, கணினி அறிவியல் பாடத்தினாலும் தன்னார்வத்தாலும் கணினிக் கல்வியை நன்கு கற்றார்.
தொடர்புடைய செய்திகள்
பொறியியல் அங்கங்களில் மேம்பட்ட கல்வி பெற விரும்பி எஸ்ஐடி-டிஜிபென் பொறியியல் பட்டப்படிப்பைத் தேர்ந்தெடுத்தார்.
கல்வியில் சிறந்து விளங்கியதால் மூன்று ஆண்டுகளாக டிஜிபென் துணை ஆசிரியராக கணினி அறிவியல், கணிதம், மின்னணுவியல் பாடங்களுக்கு உதவினார். 2020ல் பேராசிரியர் ஒருவருடன் இணைந்து ஆய்வுசெய்து அண்மையில் ஓர் ஆய்வுக் கட்டுரையும் வெளியிட்டார்.
கல்விக்கு அப்பாலும் வளர்ச்சி
2019 முதல் இன்றுவரை ‘எஸ்ஐடி’ தூதராக பல நிகழ்ச்சிகளை வழிநடத்திய அனுபவமும் பல்கலைக்கழகத்தைப் பிரதிநிதித்த அனுபவமும் கல்யாணிக்கு உண்டு.
மாணவர் மேலாண்மைக் குழுவிற்கு 2021ல் தலைமைதாங்கிய இவர், மாணவர்களைப் பிணைக்க பல நடவடிக்கைகளை ஏற்பாடுசெய்தார்.
‘எஸ்ஐடி வேங்கார்ட்’ திட்டத்தின்வழி, மூன்று மாணவர் குழுக்களுக்கு ஆலோசகராகவும் இருந்தார்.
கடந்த ஐந்தாண்டுகளாக மருதாணிக் கலைஞராக சமூக நிகழ்ச்சிகளில் கல்யாணி சேவையாற்றியுள்ளார்.
புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வம் இருப்பதால் @kreative_kaptures என்ற ‘இன்ஸ்டகிராம்’ பக்கத்தை இவர் வைத்துள்ளார்.
‘எஸ்ஐடி’ போட்டிகளில், பெண்களுக்கான சதுரங்கப் போட்டியில் தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளைக் குவித்த சிறப்புக்கு உரியவர் இவர்.
தொடரும் பயணம்
எதிர்காலத்தில் சிறு பிள்ளைகளுக்கு மென்பொருள் கற்றுக்கொடுக்க விரும்பும் இவர், அதன் முதற்படியாக @kalyanialagappan6152 எனும் ‘யூடியூப்’ ஒளிவழியைத் தொடங்கியுள்ளார்.
அதில் உள்ள காணொளிகள் மூலம் பயனடைந்ததாகச் சிலர் மின்னஞ்சல்வழி தெரிவித்துள்ளனர்.
“தொழில்நுட்பங்கள் விரைவாக மாறிவருகின்றன. அவற்றின் மூலம் உலகில் முக்கிய மாற்றங்களை உண்டாக்கமுடியும்,” என்கிறார் கல்யாணி.