புதிய வாய்ப்பு, புதிய தொடக்கம்

3 mins read
6316bd2f-7aac-461f-97ac-b8587fc2cf5c
படிப்பு தொடர்பாக எடுத்த முடிவு சரியாக அமையாவிட்டால், துணிந்து வேறு வாய்ப்பை நாடத் தயங்கக்கூடாது என்றார் கிருஷ்ண குகனேஷ், 19. - படம்: கிருஷ்ண குகனேஷ்

சிறுவயதிலிருந்தே புத்தகம் படிப்பதுதான் என் இயல்பு. கைத்தொழில் தொடர்பான தேர்வுகளை விரும்பாமல் எழுத்துத் தேர்வுக்காகத் தயார் செய்வதையே நான் விரும்பினேன். 

தொடக்கக் கல்லூரியின் அறிவியல் பிரிவில் சேர்வதில் எனக்கு ஆர்வம். ஆனால், 2020ஆம் ஆண்டு உயர்நிலை 4ல் வழக்கநிலைத் தேர்வில் சிறப்பாகச் செய்த காரணத்தால் உயர்நிலை 5க்குச் செல்வதற்குப் பதிலாக பலதுறைத் தொழிற்கல்லூரி அடிப்படைப் பாடத்திட்டத்தை (பிஎஃப்பி) மேற்கொள்ளும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டது. 

பெற்றோரின் ஆலோசனைப்படி, சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியில் சேர்ந்தேன். பொறியியல் துறையில் பயின்ற நான், முதல் ஆண்டில் நன்கு தேர்ச்சிப் பெற்றேன்.

மாறுபட்ட சூழல் 

இரண்டாவது ஆண்டில் ஒருசில அம்சங்களை நான் கவனிக்கத் தொடங்கினேன். பள்ளிக் கலாசாரம் அவற்றில் ஒன்று. அதிக மாணவர்கள் இருந்ததால் எனக்கு அது மாறுபட்ட சூழலாக இருந்தது. விரிவுரையாளர்கள் வெளிநாட்டில் இருந்தவாறு பாடம் நடத்தினர். என் பெயரைக் கூட அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஐந்து மாதகாலமாக எனக்கு இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை மட்டுமே அவர்கள் பாடம் நடத்தினர்.  

இரண்டாவதாக, அதிகப்படியான கைத்தொழில் பாடங்கள் இருந்தன. என்னிடம் ‘ஓ’ நிலைத் தேர்வுக்கான சான்றிதழும் இல்லை என்பதாலும் பிஎஃப்பி சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதாலும் வேறு படிப்புக்கு மாற எனக்கு அனுமதி தரவில்லை. 

இந்தக் கட்டத்தில் நான் குழப்பத்தில் ஆழ்ந்தேன். நான் எடுத்த முடிவு சரியானதா என்ற பதற்றம் எனக்கு ஏற்பட்டது.

எப்போதும் மகிழ்ச்சியாக, கற்கும் ஆர்வத்துடன் பள்ளி செல்லும் நான், காலையில் எழுந்திருக்கவே தயங்கினேன். 

நான் என் இலக்கை இழந்துவிட்டவனாக, விரும்பாத ஒன்றைச் செய்வதாக உணர்ந்தேன். 

மாறியது நெஞ்சம்

மீண்டும் தொடக்கக்கல்லூரி செல்வதாக இருந்த என் கனவை நான் ஏன் நிறைவேற்றக்கூடாது என்று பலநாள் யோசனைக்குப் பிறகு முடிவெடுத்தேன். 

ஆனால், தொடக்கக்கல்லூரிக்கு நான் செல்ல வேண்டுமெனில் முழுமையான ‘ஓ’ நிலைப் பாடங்களுக்கான தேர்வை நான் மீண்டும் எழுத வேண்டும் என்று என்னிடம் கூறப்பட்டது. தனியார் தேர்வு வேட்பாளராக அத்தனைப் பாடங்களைச் செய்வது மிகக் கடினம். 

மீண்டும் யோசித்தேன். என் நிலை மாறவேண்டும் எனில் அதற்கு ‘ஓ’ நிலையை மீண்டும் செய்வதுதான் ஒரே வழி என்று உறுதிபட முடிவெடுத்தேன். 

வாய்ப்பை நாடிச் சென்றேன்

என் முன்னாள் பள்ளியான பீட்டி உயர்நிலைப் பள்ளிக்குச் சென்று இரண்டாவது வாய்ப்பு வேண்டும் என்று கோரினேன். என் நிலைமையைப் பள்ளி முதல்வரான திரு ஹார்மன் ஜோல்லிடம் விளக்கினேன். 

எனக்கு ஆதரவு அளிக்கும் வகையில் மீண்டும் பள்ளியில் ‘ஓ’ நிலைப் பயில அவர் அனுமதித்தார்.

இது மிகப் பெரிய ஒரு முடிவு. நான் எல்லாவற்றையும் புதிதாக ஆரம்பிக்க வேண்டும். இருந்தபோதிலும், நான் பலதுறைத் தொழிற்கல்லூரியை விட்டு வெளியேறும் முடிவைத் துணிந்து செயல்படுத்தினேன். 

தயக்கமும் ஆதரவும்

பீட்டி உயர்நிலைப் பள்ளிக்குள் மீண்டும் காலடி எடுத்துவைத்த நான், ஆசிரியர்களிடமும் நண்பர்களிடமும் எனது திட்டத்தை விளக்கினேன். இதற்கு முன்பு யாரும் செய்திராத ஒன்று இது என்பதால் அனைவரும் நம்பமுடியாத நிலையில் இருந்தனர். ஆனால், என்னை ஊக்குவித்தார்கள். சவால்மிக்க ஆண்டாக அது அமைந்தபோதும் நான் என் இலக்கை அடைவதற்காக உழைத்தேன். அந்த உழைப்பின் பலனாக, செயிண்ட் ஆண்ட்ரூஸ் தொடக்கக்கல்லூரிக்குத் தகுதிபெற்றேன். தற்போது என் 19வது வயதில் அறிவியல் பாடப் பிரிவில் பயின்று வருகிறேன்.

பீட்டிக்கு மீண்டும் திரும்பியது, சிறந்த முடிவாக எனக்கு அமைந்தது. எனக்கு 16 வயதில் ஏற்பட்ட சிக்கலில் இருந்து மீண்டுவருவதற்கு நான் இரண்டாவது வாய்ப்பை நாடத் துணிந்தேன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

குறிப்புச் சொற்கள்