தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உணர்வுகளுக்கு உயிரூட்டும் ஓவியம்

2 mins read
c4bd5d8a-c8f3-4d83-8d17-29fd43964903
சிராங்கூன் கார்டன் உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்த நவ்யா, தெமாசிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் சேரக் காத்திருக்கிறார். - படம்: நவ்யா

நவ்யா

என்னால் வார்த்தைகளில் வெளிப்படுத்த இயலாத உணர்வுகள், நான் வரையும் ஓவியங்களின் மூலம் உயிர்பெற்று நடம்புரிகின்றன.

மனதில் மோதும் எண்ணற்ற எண்ண அலைகளின் துளிகள் வெளிப்படுவது, என் தூரிகை நுனியிலிருந்தே. 

கலைப்படைப்பு ஒன்றை நான் படைக்கும்போது அந்தப் படைப்பை நான் முழு உரிமையுடன் கட்டுப்படுத்த முடிகிறது. எனது இந்தக் கலையார்வத்திற்கு வாசிப்புப் பழக்கம் ஆதரவு தருகிறது. 

இப்போது எனக்கு வயது 16. வாழ்க்கையின் உண்மை முகத்தை படிப்படியாகப் புரிந்துகொள்கிறேன். புத்தகங்களின் மூலம் இந்தப் புரிதல் ஆழமடைகிறது. ஆனாலும் ஆழமான எண்ணங்களும் உணர்வுகளும் அவ்வப்போது சோர்வையும் குழப்பத்தையும் ஏற்படுத்துகின்றன.  

அப்படிப்பட்ட நேரத்தில் வரைவேன். என் பென்சிலைக் கொண்டு, நினைத்ததைத் தீட்டுவேன்.

கலைக்குக் கட்டுப்பாடுகள் இல்லை. கலைப்படைப்புகள் மெய்யான ஆர்வத்திலிருந்து உதிக்கின்றன.

எனக்கு ஜப்பானிய ஓவியங்கள் பிடிக்கும். கஸுஹிரோ ஹோரி, ஹயாடோ மியாஸாக்கி ஆகியோரின் படைப்புகளை ரசிப்பேன். இருவருமே வெவ்வேறு பாணிகளில் வரையும் ஓவியர்கள். முதலாமவர், பதின்ம வயதுப் பெண்களின் மனக் கொந்தளிப்புகளை மையப்படுத்தி ஓவியங்களை வரைபவர். இரண்டாமவரான ஹயாடோ, ஜப்பானில் பிரபலமான ஸ்டுடியோ கிப்லி என்ற வரைகலை அரங்கின் இயக்குநர். 

உயிரோவியப் படங்கள் பிள்ளைகளுக்குரியது எனச் சிலர் நினைக்கலாம். அந்த மனப்போக்கை ‘ஸ்டுடியோ கிப்லி’ படைப்புகள் மாற்றக்கூடும். உயிரோவிய நுட்பங்களையும் கதை சொல்லும் திறன்களையும் அலசி ஆராயும் தன்மையைக் குறைவாக எடைபோடக்கூடாது என்பதே என் கருத்து.

எனக்கு, மியாஸாக்கியின் படங்கள்மீது மையல் உண்டு. பார்ப்பவரைப் பரவசப்படுத்தி சிந்திக்கவைக்கும் ரகத்தைச் சேர்ந்தது இவரது கலை. 

சில நேரங்களில் ஓவியக்கலை எனக்கு ஆர்வமூட்டும். ஆனால், வேறு சில நேரங்களில் ஓவியக் கலையை முழுமையாகக் கைவிடும் எண்ணம் எழும். அந்நேரங்களில் என் சிந்தனைகளைத் தூய்மைப்படுத்தும் விதமாக ஓய்வெடுப்பேன். புத்துணர்ச்சியுடன் மறுபடியும் கையில் தூரிகையை எடுப்பேன். 

குறிப்புச் சொற்கள்