கையடக்க உலகத்தால் இளம் தலைமுறைக்கு பாதிப்பா...

யுகேஷ் கண்ணன்

அதிகப்படியான சமூக ஊடகப் பயன்பாடு உள்ளிட்ட பல காரணங்களால் சிங்கப்பூரில் இளையர் மத்தியில் மனநலப் பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளதன் தொடர்பில் கூடுதல் ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

இந்த அதிகரிப்புக்கு மூலகாரணங்களைக் கண்டறிய உலக ஆய்வாளர்களுடன் சிங்கப்பூர் கைகோத்துள்ளது என்று இவ்வாண்டு பிப்ரவரி 7ஆம் தேதி துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியிருந்தார்.

புள்ளிவிவரங்கள்

சிங்கப்பூரில் 2018ஆம் ஆண்டு சமூக ஊடகப் பயனாளர்களின் எண்ணிக்கை 4.74 மில்லியனாக இருந்தது. அது 2028ல் 6.05 மில்லியனாகும் என்று ‘ஸ்டேட்டிஸ்டிகா’ இணையத்தளம் கணித்துள்ளது.

2024ஆம் ஆண்டுக்கும் 2029ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் சிங்கப்பூரில் சமூக ஊடகப் பயனாளர்களின் எண்ணிக்கை 3.4% அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அத்தகைய சமூக ஊடகம் தற்போது நமது வாழ்க்கையில் ஓர் இன்றியமையாத அங்கமாகிவிட்டது.

வங்கிக் கணக்கு இல்லாத இளையர்களிடம கூட சமூக ஊடகக் கணக்குகள் இருப்பது ஓர் உண்மைநிலை ஆகிவிட்டது.

சமூக ஊடகம் என்பது சமூகத்தின் பல்வேறு பிரிவினரையும் ஒன்றுசேர்க்கும் கருவியாகப் பயன்படுத்த உருவாக்கப்பட்டது.

இருமுனைக் கூர்கத்தி

அதன்வழி, சமூகத்தினர் இணைந்து பயனுள்ள பணிகளிலும் செயல்களிலும் ஈடுபட்டு வந்தாலும், அதன் இருள் சூழ்ந்த பக்கம், அதன் பயன்பாட்டாளர்களுக்குச் சாபமாக உருவெடுத்துள்ளது.

இத்தளம் இருமுனைக் கூர்கத்தியைப் போன்றது என்பதைப் பலரும் அறிவதில்லை.

கருத்துகளை வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பு அளிக்கும் சமூக ஊடகம், அக்கருத்து சரியா தவறா என்பதைச் சரிபார்க்கத் தவறிவிடுகிறது.

அபாயங்களும் பாதிப்புகளும்

இதனால், சமூகத்தின் குறிப்பிட்ட சில குழுக்களைத் தாக்கும் வண்ணம் பல கருத்துகள் வெளியிடப்படுகின்றன.

நாளடைவில் சமூகங்களுக்கிடையே மோதலும் பூசலும் வெடிக்கத் தொடங்கிவிடுகின்றன. 

இவ்வாறு நிகழும்போது சமூக ஊடகத் தளம் ஆரோக்கியமற்ற சூழலாக மாறுகிறது.

இன்று பலரும் தங்களது ஓய்வு நேரத்தைச் சமூக ஊடங்களில் கழிப்பதால், அதில் நிலவும் இந்த ஆரோக்கியமற்ற சூழல் அவர்களை உளவியல் சார்ந்தும் பாதிக்கிறது. மனநலனைச் சீராக வைத்திருக்க இது நிச்சயம் உதவுவதில்லை.

அது மட்டுமின்றி, சமூக ஊடகத்தைப் பற்றிய புரிதலும் கல்வியும் இன்று அதிகரித்திருந்தாலும் அதன் ஆபத்துகளில் சிக்கிக்கொள்ளும் பலரை நாம் இன்றும் பார்த்துவருகிறோம்.

பண மோசடி, பாலியல் மோசடி, விளையாட்டு மோசடி எனப் பல்வேறு மோசடிகளில் பயன்பாட்டாளர்கள் சிக்கிக்கொள்கின்றனர். 

இதனால், அவர்களுக்குப் பண நெருக்கடி ஏற்படுவது மட்டுமல்லாமல், சமூகத்தின்மீது ஒரு சந்தேகப் பார்வையும் உருவாக்குகிறது.

அவர்கள் அத்தகைய மோசடிகளுக்கு ஆளானபின், கூடுதல் கவனத்துடன் இருக்க முற்பட்டு, சமூக ஊடகங்களின் வழி நற்பணிகளைச் செய்ய விரும்புவோரையும் நம்பாமல் போகின்றனர். 

இதன் விளைவாக, சமூகத்திற்குப் பலனளிக்கும் நிதிதிரட்டு போன்ற நிகழ்வுகளும் பாதிப்புறுகின்றன. 

அத்துடன், சமூக ஊடகம் பலரது கவனத்தைத் திசைதிருப்பும் தளமாகவும் மாறிவிட்டது.

இளம் வயதினர் கிடைக்கும் முதல் வாய்ப்பில் கைப்பேசித் திரையை, குனிந்த தலை நிமிராமல் பார்த்துச் சமூக ஊடகங்களிடமே தஞ்சம் புகுகின்றனர். 

இதனால், கவனம் செலுத்தும் அவர்களின் ஆற்றல் வெகுவாகக் குறைந்து, காலப்போக்கில் அவர்களின் வேலைகளைப் பாதிக்கிறது. 

இளையர்கள் தங்களுக்குள் ஓர் இணைப்பை ஏற்படுத்திக்கொள்ள சமூக ஊடகமே பெரிதும் நாடப்படும் ஒரு சாதனமாக விளங்குகிறது.

இப்போக்கு இனிவரும் காலத்தில் மெதுவடையப் போவதில்லை.

காணொளிகளைக் கண்டு இன்புறுதல், நண்பர்களுடன் உரையாடுதல், செயலிகளில் நேரத்தைக் கழித்தல் என இளம் தலைமுறையினர் ஊடகத் தளங்களை நாளும் நாடுவதை மாற்றவும் முடியாது. 

சமூக ஊடகம் முற்றிலும் சாபமா என்றால் நிச்சயம் கிடையாது. ஆனால், அதன் சாதக அம்சங்களைப் பயன்படுத்தி, தீங்கிழைக்கும் அம்சங்களைத் தவிர்ப்பது வாழ்வுக்கு ஏற்றம் தரும் என்ற புரிதல் நம்மிடையே தேவை.

யுகேஷ் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் அரசியல், தெற்காசியக் கல்வி துறைகளில் பயிலும் மாணவர். அவர் தமிழ் முரசு கல்விமானும் ஆவார். தற்போது என்யுஎஸ் தமிழ் பேரவையின் துணைத் தலைவராகவும் இருக்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!