ஆஷிகா சித்திகா
தாய்மொழியையும் இளையர்களையும் இணைக்கும் ஒரு பாலமாக வகுப்பறைக்கு அப்பால் மாணவர்கள் தலைமையில் நடந்தேறும் நிகழ்ச்சிகளும் திகழ்கின்றன.
பல ஆண்டுகாலமாகத் தமிழ் மாணவர்களுக்கென்றே பல நிகழ்ச்சிகளைக் கல்லூரிகள் நடத்திவருகின்றன.
மாணவர்களை இணைக்கவும், மொழியோடு அவர்களை உறவாட வைக்கவும் அவர்களிடையே தலைமைத்துவப் பண்புகளை வளர்க்கவும் இந்நிகழ்ச்சிகள் பெரிதும் உதவுகின்றன.
கல்லூரிகளில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள், பொதுவாகவே துடிப்புடனும் எழுச்சியுடனும் தொடர்ந்து நடந்துவருவதற்கு ஆசிரியர்களின் கடின உழைப்பும் மாணவர்களின் ஈடுபாடுமே முக்கியக் காரணங்களாகும்.
ஒரு தொடக்கக்கல்லூரி நடத்தும் நிகழ்ச்சிக்குப் பிற கல்லூரிகள், பள்ளிகள், கல்வி சார்ந்த அமைப்புகள் ஆகியவை ஆதரவு வழங்குவது பாராட்டுக்குரியது.
இதன்மூலம் தமிழ் சமூகம், தமிழுக்காகத் தொண்டாற்றும் நோக்கத்துடன் செயல்படுகிறது என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.
மாணவர்களின் கல்லூரி வாழ்க்கை அனுபவத்துடன் தாய்மொழி உணர்வும் சேர்ந்து பயணிக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
மாணவர்களின் 21ஆம் நூற்றாண்டு மொழித்திறன்களை வளர்ப்பதும் சூழலுக்கேற்றவாறு சிந்தித்து முடிவெடுக்கும் ஆற்றலை வளர்ப்பதும் இதுபோன்ற நிகழ்ச்சிகளால் சாத்தியமாகின்றன.
21ஆம் நூற்றாண்டுத் திறன்கள்
ஒரு நிகழ்ச்சி நடப்பதற்கு முதல்நாள், நிகழ்ச்சி படைக்கும் முக்கியமான ஒரு மாணவருக்கு உடல்நலம் குன்ற, அந்தச் சூழலை மற்ற மாணவர்கள் எவ்வாறு கையாண்டார்கள் என்பதைப்பற்றி கதிரவன் திவ்யா பகிர்ந்து கொண்டபோது இந்தக் கருத்து உண்மைதான் என்பதை உணரலாம்.
மாணவர்கள், தங்கள் கல்லூரி மாணவர்களுடன் மட்டுமல்லாமல், மற்ற கல்வி நிறுவன மாணவர்களுடனும் கலந்துரையாடும்போது மிகச் சிறந்த கருத்துப் பரிமாற்றத்துக்கு அது வழிவகுக்கிறது.
“தங்களுக்குத் தேவையான கருத்துகளை, நிகழ்ச்சிகள் படைக்கும் வழிமுறைகளை, நவீன உத்திகளை மாணவர்கள் மேலும் சிறப்பாக அறிந்துகொள்ள முடிகிறது,” என்றார் மாணவி ஸ்ருதி தமிழ் செல்வம்.
‘மொழி ஒரு காலக்கண்ணாடி’
“மொழியை மொழியாக மட்டும் சித்திரிக்காமல், அது நம் கலாசாரத்தையும், பண்பாட்டையும் வாழ்வுநெறியையும் அறிய உதவும் காலக்கண்ணாடியாக இருப்பதை இந்த நிகழ்ச்சிகள் காட்டுகின்றன,” என்றார் மாணவி ரவி கீதா திவிஜா.
தமிழ்மொழியை வகுப்பறைக்கு அப்பால் கொண்டுசெல்வதுடன் பழமையையும் புதுமையையும் இணைக்கும் ஒரு பாலமாகவும் இந்த நிகழ்ச்சிகள் அமைகின்றன என்றார் ஆசிரியர் திருவாட்டி கமலவாணி.
முழுமையாக மாணவர்களே தலைமையேற்று நடத்தும்போது அதன் முழுசெயல்முறையும் என் மனதில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எதற்காக நடத்தப்படுகிறது, எப்படி நடத்தப்படுகிறது, என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது, என்னென்ன மாற்றங்களைச் செய்ய வழிவகுக்கிறது என்றெல்லாம் ஆழமாகச் சிந்திக்கத் தோன்றுகிறது என்றார் மாணவர் நந்தகுமார் ஷரவன்.
திறமைக்கு ஒரு தளம்
இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தும்போதுதான், எங்களுக்குள் இருக்கும் திறமையை நாங்களே அறிந்துகொள்ள முடிகிறது. பொதுவாக, ஆடல்பாடல் நிகழ்ச்சிகளே மாணவர்களை வெகுவாக ஈர்க்கும் என்றாலும் ஒருங்கிணைப்பதற்குத் தொண்டூழியர்கள் அதிகம் தேவைப்படுவதாலும் மற்ற பள்ளி மாணவர்களை ஈர்க்கச் சரியான அணுகுமுறைகள் தெரியவேண்டும் என்பதாலும் எல்லாவகையிலும் நல்லதொரு வழிகாட்டியாக அமைந்தோம் என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார் மாணவி ஆராதனா பாண்டிப்பெருமாள்.
தமிழ் மன்றங்கள் கல்லூரிகளில் ஆக்கபூர்வமாகச் செயல்படுவதைப் பார்க்கும்போது தமிழ்மொழி கற்பிக்கும் உயர்நிலைப் பள்ளிகளில் தமிழ் மன்றங்கள் தொடங்கப்படவேண்டும். மொழி, பண்பாடு மட்டுமல்லாமல் மாணவர்களின் இதர ஆற்றல்களான தலைமைத்துவப் பண்புகள், ஆடல்பாடல், நடிப்புத் திறன்கள் வெளிப்படும் ஓர் உன்னத உணர்வுத் தளமாக உருவாக வாய்ப்புள்ளது என்றார் ஆசிரியர் முனைவர் ச ஜகதீசன்.
மக்கள் இலக்கியத்தை, மின்னியல்வழி கற்க விரும்புகிறார்களா அல்லது நூல்களாகப் படிப்பதை விரும்புகிறார்களா என்று நான் ஆய்வு செய்தேன். ஆய்வு செய்வது எனக்குப் புதிய அனுபவம். இந்த அனுபவம், எனக்குப் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியதுடன் எதிர்காலத்தில் இன்னும் நிறைய சாதிக்கலாம் என்ற மனஉறுதியையும் ஏற்படுத்தியது என்றார் மாணவர் ராஜகுமார் ராம்குமார்.
நம்பிக்கையூட்டும் நிகழ்ச்சிகள்
தமிழ் மட்டுமே என் வீட்டில் பேச்சுமொழியாக இருக்கிறது. அதனால்தான், தமிழை மிகவும் சரளமாகவும் இயல்பாகவும் என்னால் பேச முடிகிறது. அந்தத் திறன்தான் இதுபோன்ற நிகழ்ச்சிகளை வழிநடத்தும் தன்னம்பிக்கையைக் கொடுக்கிறது என்றார் மாணவி பாலசுந்தரி மாமன்னன்.
நிகழ்ச்சியை முழுமையாகப் பார்க்கும்போது, இது மிகவும் பெரிய சவாலாகத் தெரிந்தது. ஆனால், மூத்த மாணவர்களின் துணையுடன் செய்யும்போது நம்மாலும் முடியும் என்ற நம்பிக்கை இயல்பாகவே ஏற்படுகிறது. ஒரு பெரிய வேலையைப் பிரித்துச் செய்யும்போது, எல்லாவற்றிலும் ஒருவரின் திறமையையே நம்பி இருக்கவேண்டிய அவசியமில்லாமல் போவதுடன் ஒதுக்கப்பட்ட வேலையை மட்டும் செய்வதால் சிறப்பாகச் செய்யவும் முடிகிறது என்று பெருமிதத்துடன் கூறினார் மாணவி காமாட்சி சந்திரசேகர்.
இந்தக் குழுவில் எவரையுமே எங்களுக்கு முன்பின் தெரியாது. பார்த்ததுமில்லை. பேசியதுமில்லை. ஆனால் இப்போது நிலைமையே வேறு. நாங்கள் அனைவரும் சிறந்த நண்பர்களாகிவிட்டோம். புதிய நம்பிக்கையூட்டும் சிறந்த நண்பர்களை இப்போது பெற்றிருக்கிறேன் என்றார் மாணவி பாலமுருகன் பூஜாஶ்ரீ.
ஒத்துழைப்பே பலம்
ஒவ்வோர் ஆண்டும் மாணவர்களுக்குத் தேவையான தலைப்புகளில் பல கருத்துகளை ஆய்ந்து அவை படைக்கப்பெறுகின்றன என்றார் ஆசிரியர் திருவாட்டி அ மல்லிகா. கடந்த 35 ஆண்டு காலமாக இதனை நடத்த முடிகிறது என்றால் அது மாணவர்களின் ஒத்துழைப்பு இன்றி நடத்த வாய்ப்பில்லை என்றார் அவர்.
பலன் காண்பதில் பெருமிதம்
துடிப்புடன் செயல்படுதல், கருத்துப்பரிமாற்றங்களை முழுமனதாகச் செய்தல், உடனிணைந்து செயலாற்றும் திறன்களை வளர்த்துக் கொள்ளுதல், தகவல்சார் திறன்களை மேம்படுத்திக் கொள்ளுதல் ஆகிய எல்லாத் துறைகளிலும் மாணவர்கள் சிறப்பாகச் செயல்படுகிறார்கள்.
தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும் புத்தாக்கச் சிந்தனை நிறைந்தவர்களாகவும் மீள்திறன் கொண்டவர்களாகவும் இவர்கள் வளர்ந்திருப்பதைப் பார்க்கும்போது தங்களுக்குப் பெருமிதம் என்றனர் ஆசிரியர்கள்.
இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பெற்றோர்களும் முன்னாள் மாணவர்களும் தற்போதைய மாணவர்களும் ஆர்வத்துடன் கலந்துகொள்வதே வெற்றி. இந்த நிகழ்ச்சிகள் மேன்மேலும் சிறப்பாகப் படைக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.
கல்லூரிகளுக்குத் தொழில்நுட்பக் கலைப்படைப்புகளுக்கான போட்டிகள், உயர்நிலைப் பள்ளிகளுக்கான போட்டிகள், தொடக்கப்பள்ளிகளுக்கான பயிலரங்குகள் என்று கல்லூரி மாணவர்கள் வெவ்வேறு போட்டிகளை முன்னெடுத்துச் செல்வதும், நடத்துவதும் சிறப்பாக உள்ளது.
எல்லாவற்றையும் ஒருங்கிணைப்பது தமிழ்மொழியின் தனித்துவமாகவும் விளங்குகிறது. எல்லா நிலை மாணவர்களையும் ஒருங்கிணைத்து முனைப்பாகச் செயல்படும் இன்றைய மாணவர்களே, நாளைய சமூகத் தலைவர்களாக மிளிரவிருக்கிறார்கள்.
எதிர்காலத்தில், தமிழ்மொழி தழைத்தோங்கி வளர்ந்து உலகளவில் சிறந்த இடத்தில் நிலைக்கும் என்ற நம்பிக்கையை இன்றைய மாணவர் சமுதாயம் தமிழ் உலகுக்குத் தந்திருக்கிறது.