பசுமையான, நிலைத்தன்மை வாய்ந்த உலகத்தை உருவாக்க வேண்டும் என்ற இலக்குடைய 19 வயது முஹமத் ஷமீம், 18 வயது சலஸ் ப்ரியா எசேக்கியேல் ஆகியோரை சுற்றுச்சூழல் நிலைத்தன்மைத் தலைவர்களாகத் தேர்வு செய்துள்ளது தேசியச் சுற்றுப்புற வாரியம்.
மரினா பே சேண்ட்ஸ் எக்ஸ்போ மாநாட்டு மையத்தில் 19 ஜூன் முதல் 21 ஜூன் வரை நடைபெற்ற தூய்மையான சுற்றுச்சூழல் மாநாட்டில் இருவரும் அந்த அங்கீகாரத்தைப் பெற்றனர்.
சுற்றுச்சூழல் துறையில் உபகாரச் சம்பளம் பெற்ற ஷமீம்
தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் தரவு மற்றும் பகுப்பாய்வு பட்டயப் படிப்பை பயிலும் ஷமீம், தேசியச் சுற்றுப்புற வாரியத்தின் 2024ஆம் ஆண்டுக்கான தொழில்துறை உபகாரச் சம்பளம் பெற்றுள்ளார்.
சுற்றுச்சூழல் சேவைகள் துறையில் இளையர்களை ஈர்த்து, அவர்களை திறமை வாய்ந்த பணியாளர்களாக உருவாக்கும் நோக்கத்தோடு 2020ல் இந்த உபகாரச் சம்பளம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது, பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் இணைந்து மாணவர்களுக்கு நிதி உதவியும் தொழில் வாய்ப்புகளையும் வழங்குகிறது.
ஜூன் 20ஆம் தேதி நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் இவ்வாண்டு ஆக அதிகமாக 9 மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்கப்பட்டது. சுகாதாரத்துக்கான மூத்த துணையமைச்சர் டாக்டர் ஏமி கோர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார்.
பயில்நிலைப் பயிற்சியை ஐஎஃப்எஸ்சி (IFSC) நிறுவனத்தில் முடித்துவிட்டு எதிர்காலத்தில் அந்நிறுவனத்தில் நிரந்தர மென்பொருள் பொறியாளராக பணிபுரியவிருக்கும் ஷமீம், இந்த உபகாரச் சம்பளம் கிடைத்ததை மிகப்பெரிய கௌரவமாகக் கருதுகிறார்.
“இந்த வாய்ப்பின் மூலம் அனுபவமிக்க நிபுணர்களுடன் சேர்ந்து பணி செய்தது எனக்குப் பயனுள்ளதாக இருந்தது. இந்த அனுபவம் என்னுடைய எதிர்கால பணிக்கு மிகவும் உதவியாக இருக்கும்,” என்று கூறினார் அவர்.
பள்ளிக் காலத்தில் புவியியல் வகுப்பினால் ஷமீமுக்கு இயற்கையின்மீது ஆர்வம் உண்டானது.
தொடர்புடைய செய்திகள்
“தற்போது சுற்றுச்சூழல் பல சவால்களைச் சந்தித்து வருகிறது. அவற்றை சமாளித்து ஒரு பாதுகாப்பான பூமியை நாம் உருவாக்க வேண்டும்,” என்றார் அவர்.
தரவு பகுப்பாய்வு, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றில் தான் கொண்டுள்ள நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி இயந்திரவியல், தொழில்நுட்பம் உதவியோடு புத்தாக்க முறையில் துப்புரவு வசதிகளை நிர்வகிக்க விரும்புகிறார் ஷமீம்.
மேலும், தொழில்நுட்பமயமாவதற்கு செலவு, பங்குதாரர்களின் ஆதரவு, ஊழியர் பற்றாக்குறை போன்ற சவால்கள் நிலவும் சுற்றுச்சூழல் சேவை துறையில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்த உறுதியாக உள்ளார் ஷமீம்.
“பல வழியில் முன்னேற்றம் கண்டுவரும் இத்துறையில் பணிபுரிய ஆசைப்படும் மாணவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது,” என்று ஷமிம் நம்புகிறார்.
தலைமைத்துவத் திட்டத்தில் பங்கெடுத்த ப்ரியா
சலஸ் ப்ரியா எசேக்கியேல், நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் வங்கி மற்றும் நிதித் துறை படிப்பைப் பயிலும் இறுதியாண்டு மாணவி. ‘எக்ஸ்ட்ரா விண்டேஜ்’ என்ற குழுத் திட்டப்பணியின்வழி நிலைத்தன்மைக்குத் தனித்துவமான அணுகுமுறையை இவர் கையாண்டுள்ளார்.
சிங்கப்பூரின் துணிக் கழிவுகளைக் குறைக்க, பயன்படுத்திய ஆடைகளை வாங்கி விற்பனை செய்வதற்காக பலதுறைத் தொழிற்கல்லூரியிலும் மற்ற சமூக இடங்களிலும் தன் குழுவுடன் சேர்ந்து சிறிய கடைகளை இவர் அமைத்தார்.
தேசியச் சுற்றுப்புற வாரியத்தால் 2023ல் தொடக்கப்பட்ட சுற்றுச்சூழல் நிலைத்தன்மை தலைமைத்துவத் திட்டத்திற்காக 26 இளையர்கள் தயாரித்த 12 திட்டப்பணிகளில் அதுவும் ஒன்று. அந்தத் திட்டப்பணிகள் இதுவரை 18,000க்கும் மேற்பட்டோரை சென்றடைந்து, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூன் 21ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் அந்தத் தலைமைத்துவத் திட்டத்தில் பயிற்சி பெற்றோர் முதல்முறையாகப் பட்டம் பெற்றனர். நிலைத்தன்மை சுற்றுச்சூழல் அமைச்சர் திருமதி கிரேஸ் ஃபூ இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுச் சிறப்பித்தார்.
“பல பதின்மவயதினர் இணையம்வழி ஏராளமான ஆடைகளை வாங்குகின்றனர். சிலவற்றை மட்டுமே அணிகின்றனர். மற்றதையெல்லாம் வீணாக்குகின்றனர். துணி விரயத்தால் ஏற்படும் ஆபத்து குறித்து விழிப்பூட்டுவதன்வழி இந்த பிரச்சினையை நாங்கள் சமாளிக்க விரும்பினோம்,” என்றார் ப்ரியா.
அவரின் குழு நடத்திய 10 வெற்றிகரமான கடைகள் மூலம் கிட்டத்தட்ட 280 உடைகளைக் குப்பைக்குப் போகாமல் தடுத்துள்ளனர். மேலும், ‘எக்ஸ்ட்ரா விண்டேஜ்’ குழுவின் துணி விற்பனையின்வழி திரட்டப்பட்ட நிதி, தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக அளிக்கப்பட்டது.
“சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க நாம் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். அப்பொழுதுதான் பூமி வெப்பமயமாவதால் ஏற்படும் விளைவுகளிலிருந்து நாம் அடுத்த தலைமுறையினரைப் பாதுகாக்க முடியும்,” என்று வலியுறுத்துகிறார் ப்ரியா.

