இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நண்பர்களுடனும் உறவுகளுடனும் எளிதாகப் பழக உதவும் தளங்களாக சமூக ஊடகங்கள் நாடப்பட்டபோது, இளையர்கள் அதிகமாகப் பயன்படுத்தும் தளங்கள் அவை எனப் பலரும் கருதினர்.
இந்நிலையில், 2024 ஜனவரி மாத நிலவரப்படி சிங்கப்பூர் மக்கள்தொகையில் 85 விழுக்காட்டினர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதாக ‘மெல்ட்வாட்டர்’ நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
அரசியல் சிந்தனைகள், உலக நடப்புகள், வணிகம் என்று பல வழிகளில் சமூக ஊடகங்கள் மக்களின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
அதுபோன்றே ‘ஏஐ’ என்றழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவும் கருதப்படுகிறது. இன்று அதன் பயன்பாடு தொடக்க நிலையில் இருந்தாலும், அதிவேகமாக வளர்ச்சி காணும் அத்தொழில்நுட்பம் அடுத்த சில ஆண்டுகளில் மக்களின் அன்றாட வாழ்வில் கணிசமான மாற்றங்களை ஏற்படுத்தும்.
பல்கலைக்கழகங்கள், பலதுறைத் தொழிற்கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்விக் கழகங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த ஏறத்தாழ 900 மாணவர்களுக்குமுன் ஜுலை 2ஆம் தேதி உரையாற்றிய பிரதமர் லாரன்ஸ் வோங், அடுத்து செழிப்படையும் துறை என்ன என்பதைக் கணிப்பதைவிட உலகை மாற்றி அமைக்கவல்ல முக்கிய நடப்புகளைத் தெரிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு திறன்களை வளர்த்துக்கொள்வதில் கவனம் செலுத்துவதே சிறந்தது என்றார்.
நீடித்த நிலைத்தன்மை, ஆசிய வட்டார வளர்ச்சி உட்பட பிரதமர் வோங் குறிப்பிட்ட மூன்று முக்கிய உலக நடப்புகளில் மின்னிலக்கத் தொழில்நுட்பமும் செயற்கை நுண்ணறிவும் அடங்கும்.
கணினி அறிவியலில் நாட்டம் இல்லை என்றாலும் இளையர்கள் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைப் பயன்படுத்தப் பழகிக்கொள்ளவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
“நீங்கள் வழக்கறிஞராக இருக்கலாம், நிதித் துறையில் இருக்கலாம், கணக்காளராக இருக்கலாம், கட்டட வடிவமைப்பாளராகவோ பொதுவான வடிவமைப்பாளராகவோ இருக்கலாம். நீங்கள் தொழில்நுட்பத்தை அதிகமாகப் பயன்படுத்தத் தொடங்கவேண்டும். அது செயற்கை நுண்ணறிவையும் உள்ளடக்கும்,” என்றார் திரு வோங்.
தொடர்புடைய செய்திகள்
தொழில்நுட்பக் கருவிகளை பயன்படுத்த ஒருவர் கணினிப் பொறியாளராக இருக்கவேண்டிய அவசியமில்லை. செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியால் அது சாதாரண மக்களும் அணுகக்கூடிய அளவிற்கு முன்னேறியுள்ளது என்று சுட்டினார் பிரதமர் வோங்.
மக்கள் பயன்படுத்தக்கூடிய அளவில் எளிதாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவுக் கருவிகளில், அண்மையில் ‘வாட்ஸ்அப்’ செயலியில் அறிமுகமான புதிய தானியங்கி உரையாடல் கருவி (chatbot) ஓர் எடுத்துக்காட்டு.
செயற்கை நுண்ணறிவால் சமுதாயத்திற்கு நன்மைகள் பல விளையும் என்றாலும் இந்தத் தொழில்நுட்பத்தால் ஏற்படக்கூடிய சமுதாய தாக்கத்தைப் பற்றியும் சற்று சிந்திக்கவேண்டும். சமூக ஊடகம் போலவே வளரும் செயற்கை நுண்ணறிவு, ஆக்கத்திற்கும் பயன்படலாம், அழிவிற்கும் இட்டுச்செல்லலாம்.
எடுத்துக்காட்டாக, ‘ஓப்பன்ஏஐ’ நிறுவனத்தின் ‘சேட்ஜிபிடி’, கூகல் நிறுவனத்தின் ‘ஜெமினை’ போன்ற பிரபல மெய்நிகர் கருவிகளை மாணவர்கள் கல்விக்கும் பயன்படுத்தி வருகிறார்கள். அதில் தவறில்லை. கணினி, திறன்பேசி போலவே செயற்கை நுண்ணறிவும் ஒரு கருவி. யார் வேண்டுமானாலும் அதைப் பயன்படுத்தலாம்.
ஆனால், வீட்டுப்பாடங்களை எவ்வித தன்முயற்சியும் இன்றி, முழுமையாக அக்கருவிகளின் தயவுடன் முடிப்பது பொறுப்பற்ற செயலாகும்.
அவ்வாறு செய்தால் ஆசிரியர்களால் அதனை எளிதில் கண்டுபிடித்துவிடவும் முடியும்.
முக்கியமாக, அதுவே கற்றலுக்கும் சிந்தனைக்கும் முட்டுக்கட்டையாகிவிடும்.
மனிதன் மேம்படத் தொழில்நுட்பம் உதவ வேண்டுமே ஒழிய நம் சிந்தனைக்கும் உழைப்பிற்கும் ஈடாக அது கருதப்படக்கூடாது.
தொழில்நுட்பத்தை மனிதன் பொறுப்புணர்வுடன் கவனமாகப் பயன்படுத்தினால், அது உலகத்தின் முன்னேற்றப் பாதையில் ஒரு முக்கியப் படிக்கல்லாக அமையும் என்பது திண்ணம்.