தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘எம்3ஜி’ மிதவைப் பாலத்தை வழிநடத்தும் இளம் வீரர்

3 mins read
af71b2cd-2952-4a93-883f-5270bae7c4b1
நான்கு கனரக பீரங்கிகளைச் சுமக்கும் ‘எம்3ஜி’ மிதவைப் பாலத்தை இயக்கும் முதலாம் சார்ஜண்ட் கெளதம் செந்தில் குமரன். - படம்: டினேஷ் குமார்

தேசிய தின அணிவகுப்பில் அதிபருக்கான மரியாதை பீரங்கி முழக்க அங்கத்தில் முக்கிய இடம்பிடித்துள்ள ‘எம்3ஜி’ மிதவைப் பாலத்துக்கான வழிகாட்டும் பொறுப்பை முதலாம் சார்ஜண்ட் கெளதம் செந்தில் குமரன், 25, ஏற்றுள்ளார்.

ராணுவ அங்கத்தில் முதன்முறையாகப் பங்கேற்கும் கெளதம், நீரில் படகுபோல் இயங்கும் இந்த மிதவைப் பாலத்தைக் கவனத் துடன் இயக்க வேண்டும் என்றார். இதற்கான பயிற்சிக்கும் ஒத்திகைக்கும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றாலும் அதற்கான பலன் நிச்சயமாக மனநிறைவு அளிக்கும் எனக் கூறினார்.

கனமான பீரங்கிகள், ராணுவச் சாதனங்களைத் தாங்கக்கூடிய ‘மொபிலிட்டி மூன்றாம் தலைமுறை’ (எம்3ஜி) மிதவைப் பாலத்தைத் தளவாட ஆதரவு, வீரர்களின் பயணம் ஆகியவை உள்ளிட்டவற்றுக்கு சிங்கப்பூர் ஆயுதப்படை பயன்படுத்துகிறது.

ஐந்து சிறிய படகுகள் சேர்ந்து அமையப்பெற்ற இந்த மிதவைப் பாலம், நான்கு 25-பவுண்டர் பீரங்கிகளைத் தாங்கி 5.87 கிலோமீட்டர் தூரத்திற்கு ‘மரினா பேசின்’ எனப்படும் மரினா நீர் வடிநிலத்தைச் சுற்றி வரும்.

இவ்வாண்டின் தேசிய தினத்திற்காக இதுவரை சென்றிராத தூரத்திற்கு இந்த மிதவைப் பாலம் செல்லவுள்ளது. இதனைச் செலுத்துவது சிக்க லானது என்பதால் எந்நேரமும் விழிப்புடன் இருக்கவேண்டும் என்றார் கௌதம்.

அதிபருக்கான மரியாதை பீரங்கி முழக்கத்திற்குப் பயன்படுத்தப்படும் ‘எம்3ஜி’ மிதவைப் பாலம்.
அதிபருக்கான மரியாதை பீரங்கி முழக்கத்திற்குப் பயன்படுத்தப்படும் ‘எம்3ஜி’ மிதவைப் பாலம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஒத்திகைகளுக்காக இவர் கடந்த சில மாதங்களாக ஒவ்வோர் சனிக்கிழமையும் காலை 5 முதல் இரவு 10 மணி வரை உழைத்து வருகிறார்.

“வெயிலில் பயிற்சி இருந்தாலும் இடையிடையே இளைப்பாறுவதற்கு எங்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளது,” என்று கூறினார்.

“பீரங்கிகள் மிதவைப் பாலத்தில் நன்கு இறுக்கப்பட்டிருக்கவேண்டும். நீரில் மிதக்கும் அது, திடமாக இருப்பதை உறுதிசெய்யவேண்டும். அனைவரும் அவர்களுக்குரிய இடங்களில் இருப்பதையும் உறுதி செய்யவேண்டும். ராணுவப் பகுதிகள் அல்லாத இடங்களான குடியிருப்பு வட்டாரங்களில் இந்த மிதவைப் பாலத்தைச் செலுத்துவது எங்களுக்குப் புதிதாக இருந்தது. ஆயினும், மூத்த அதிகாரிகளின் வழிகாட்டுதலாலும் பயிற்சியாலும் நாங்கள் சவால்களைக் கடந்தோம்,” என்று கெளதம் கூறினார்.

மரினா பேயில் தரையிலிருந்து சற்று உயர்த்தப்பட்ட தளத்தில் ‘எம்3ஜி’ மிதவைப் பாலம் சற்று நேரம் நிற்பது இதுவே முதல்முறை. இதனால், பார்வையாளர்கள் மிதவைப் பாலத்தை மிக அருகில் காண முடியும். தேசிய கல்விக் காட்சி நிகழ்ச்சிக்காக இதனைச் செலுத்தியபோது சிறுவர்கள் உற்சாகத்துடன் கை அசைத்தது தன்னை நெகிழ வைத்ததாக கெளதம் கூறினார்.

படகாக நீரில் செயல்படும் இந்த மிதவைப் பாலம், நான்கு 25-பவுண்டர் பீரங்கிகளைத் தாங்கியவாறு 5.87 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்யவிருக்கிறது.
படகாக நீரில் செயல்படும் இந்த மிதவைப் பாலம், நான்கு 25-பவுண்டர் பீரங்கிகளைத் தாங்கியவாறு 5.87 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்யவிருக்கிறது. - படம்: டினேஷ் குமார்

ஓய்வு நேரங்களில் முக்குளித்தல் நடவடிக்கையில் ஈடுபடும் கெளதம், பிலிப்பீன்சிலும் பாலியிலும் அதனை மேற்கொண்டுள்ளார்.

“முக்குளிக்கும்போது புத் துணர்ச்சி அடைகிறேன். வேலையில் கவனம் செலுத்துவதற்கு இந்தப் புத்துணர்ச்சி உதவுகிறது,” என்றார் கெளதம்.

தேசிய தினம் நெருங்கும் இவ்வேளையில், அதிபருக்கான மரியாதை பீரங்கி முழக்கத்திற்கு எந்தக் குறையும் நேராமல் இனிதே நடைபெற வேண்டும் என்பதில் இவர் கண்ணும் கருத்துமாக உள்ளார்.

சிங்கப்பூரின் முன்னேற்றத்தையும் ஒற்றுமையையும் பாராட்டும் விதமாக தமது குழுவினரின் உழைப்பை மக்களுக்கு வெளிகாட்டத் தான் ஆவலாக இருப்பதாகவும் சொன்னார்.

“எங்களால் இயன்றவரை இந்த அங்கத்தைச் சிறப்பாக நடத்தி, இந்நாட்டின் சாதனை களைக் கொண்டாட உற்சாகத்துடன் காத்திருக்கிறோம்,” என்றார் கெளதம்.

குறிப்புச் சொற்கள்