தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வருங்கால வாகன உருவாக்கத்தில் இளையர்கள்

2 mins read
a914e5a2-3d4c-4c86-a9ef-00f41a6bbbf9
மாணவர்களுக்கான தொலைதூர இயக்கி ஹைட்ரஜன் எரிபொருள் மின்கல (Hydrogen Fuel Cell) கார் பந்தயத்தைத் தொடங்கிவைத்த அறிவியல் நிலைய வாரியத் தலைவர் பீட்டர் ஹோ. - படம்: அறிவியல் நிலையம் சிங்கப்பூர்
multi-img1 of 2

ஆண்டுதோறும் உலகெங்கிலுமிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்களை ஈர்க்கும் உலகின் ஆகப் பெரிய ஹைட்ரஜன் கார் போட்டியின் இறுதிச் சுற்றில் போட்டியிட சிங்கப்பூரிலிருந்து ஓர் அணி செப்டம்பர் 9 முதல் 12 வரை கலிஃபோர்னியாவிற்குச் செல்லவுள்ளது.

ஆகஸ்ட் 3, 4ஆம் தேதிகளில் சிங்கப்பூரில் முதன்முறையாக நடைபெற்ற ‘ஹரைசன் ஹைட்ரஜன் கிராண்ட் பிரிக்ஸ்’ (ஹெச்2ஜிபி) போட்டியில், சிங்கப்பூர் சுற்றில் வாகைசூடிய தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி அணிக்கு அந்த வாய்ப்புக் கிட்டியுள்ளது.

வெற்றிபெற்ற தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் ‘தெமாசெக் ரேசர்’ அணியினர்.
வெற்றிபெற்ற தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் ‘தெமாசெக் ரேசர்’ அணியினர். - படம்: அறிவியல் நிலையம் சிங்கப்பூர்

ஹரைசன் எடுகேஷனல், ஷெவ்ரான் சிங்கப்பூர், அறிவியல் நிலையம் சிங்கப்பூர் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த சிங்கப்பூர் சுற்றில் 19 உயர்நிலைப் பள்ளிகள், தொடக்கக் கல்லூரிகள், பலதுறைத் தொழிற்கல்லூரிகளைச் சேர்ந்த 20 அணிகள் போட்டியிட்டன. அப்போட்டியில் 13 முதல் 17 வயது வரையிலான மொத்தம் 99 மாணவர்கள் பங்குபெற்றனர்.

ஹைட்ரஜனில் இயங்கும் தொலைதூர இயக்கி எரிபொருள் மின்கல (Fuel Cell) உந்துவண்டிகளை 16 வாரங்களில் மாணவர்கள் வடிவமைத்திருந்தனர்.

நான்கு மணி நேரப் பந்தயத்தில் ஆக அதிகமான சுற்றுகளை முடித்த கார் வெற்றிபெற்றது. முதல் நிலையில் வந்த ‘தெமாசெக் ரேசர்’ அணி 589 சுற்றுகளை முடித்திருந்தது.

இரண்டாம் நிலையில் வந்த பிடோக் கிரீன் உயர்நிலைப்பள்ளி 452 சுற்றுகளையும், மூன்றாம் நிலையில் வந்த ஆங்கிலோ சீனத் தன்னாட்சிப் பள்ளியின் ‘ஏசிஎஸ்ஜிபி’ அணி 389 சுற்றுகளையும் முடித்தன.

‘எதிர்காலத் தேவைகளுக்கு இன்றே தயாராவோம்’

வரும் 2050 ஆண்டுக்குள் சிங்கப்பூரின் எரிசக்தித் தேவைகளில் பாதியளவு குறைந்த கரிம ஹைட்ரஜனால் (Low-carbon hydrogen) பூர்த்திசெய்ய வாய்ப்பிருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த இலக்கை நோக்கிச் செல்வதில் இது முக்கியப் படிக்கல்.

மாணவர்கள் கொடுக்கப்பட்ட பாகங்களைக் கொண்டு கார்களை உருவாக்கி, எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க பல வடிவமைப்புப் புத்தாக்கங்களை உட்புகுத்தினர்.

“பெண்கள் மட்டுமே கொண்ட இரு அணிகள் உட்பட, 27 பெண்கள் இப்போட்டியில் பங்குபெற்றது பாராட்டத்தக்கது. ஸ்டெம் துறைகளில் பெண்கள் சேர வழிவகுக்கும் பல வாய்ப்புகளில் இதுவும் ஒன்று.” என்றார் அறிவியல் நிலைய வாரியத்தின் தலைவர் பீட்டர் ஹோ.

படிப்பினைகள்

“இப்போட்டியின்மூலம் குழுவினருக்கிடையே தெளிவான தொடர்பு இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அறிந்துகொண்டேன். கடினமாக இருந்ததால் பலமுறை முயற்சியைக் கைவிடலாம் என எண்ணியும் குழுவினர், ஆசிரியர்களின் ஆதரவால் தொடர்ந்து முயன்றேன்.” என்றார் தெம்பனிஸ்-மெரிடியன் தொடக்கக் கல்லூரி மாணவர் பகழ்வாணன், 17.

தன் அணியினரோடு தெம்பனிஸ்-மெரிடியன் தொடக்கக் கல்லூரியின் பகழ்வாணன், 17 (வலமிருந்து இரண்டாவது).
தன் அணியினரோடு தெம்பனிஸ்-மெரிடியன் தொடக்கக் கல்லூரியின் பகழ்வாணன், 17 (வலமிருந்து இரண்டாவது). - படம்: அறிவியல் நிலையம் சிங்கப்பூர்

புத்தாக்கங்கள்

“காரின் அதிர்வுகளையும் பாரத்தையும் தாங்கும் பெரிய சக்கரங்கள், விபத்துகளினால் ஏற்படக்கூடிய சேதத்தைக் குறைக்கும் நுரைப்பஞ்சு (sponge) போன்ற புத்தாக்கங்களை நாங்கள் அறிமுகப்படுத்தினோம்.” என்றார் மெத்தடிஸ்ட் பெண்கள் பள்ளி மாணவி நெலட்டூரி அனுஷ்கா.

தன் அணியினரோடு மெத்தடிஸ்ட் பெண்கள் பள்ளி மாணவி நெலட்டூரி அனுஷ்கா (வலம்).
தன் அணியினரோடு மெத்தடிஸ்ட் பெண்கள் பள்ளி மாணவி நெலட்டூரி அனுஷ்கா (வலம்). - படம்: அறிவியல் நிலையம் சிங்கப்பூர்

“தொடக்கத்தில் காரின் கனம் மிகவும் அதிகமாக இருந்ததால் உலோகப் பாகங்களைக் குறைக்க முப்பரிமாணத்தில் அச்சடித்தோம். போட்டியின்போது ஏற்பட்ட சேதத்தால், நான்கு சக்கர வண்டியை இரு சக்கரங்களுடனே செலுத்தவேண்டியிருந்தது. அப்போது பதற்றமடையாமல் கையாண்டோம்,” என்றார் ஆங்கிலோ சீனத் தன்னாட்சிப் பள்ளி மாணவர் ஜாய் மெர்வின், 17.

ஆங்கிலோ சீனத் தன்னாட்சிப் பள்ளி மாணவர் ஜாய் மெர்வின், 17 (இடமிருந்து மூன்றாவது).
ஆங்கிலோ சீனத் தன்னாட்சிப் பள்ளி மாணவர் ஜாய் மெர்வின், 17 (இடமிருந்து மூன்றாவது). - படம்: அறிவியல் நிலையம் சிங்கப்பூர்
குறிப்புச் சொற்கள்